இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதியான ஜனாதிபதியை ஒரு கடும்போக்கு சிங்கள தேசியவாதக் குழு ‘பயங்கரவாதி மற்றும் புலி’ என்று முத்திரை குத்தியுள்ளது.
போரின் முடிவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வை சீர்குலைக்க நீர்கொழும்புக்குச் சென்ற சிங்கள ராவய தேசிய அமைப்பின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு, பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஜனாதிபதியை பயங்கரவாதி எனவும் புலி எனவும் குற்றம் சாட்டியது.
“அனுர குமார புலிக்காக செயற்படுகிறார், புலி அனுரவிற்காக..” என்றவாறு, நீர்கொழும்பில் உள்ள தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்தக் குழுவில் இருந்த ஒருவர், ‘போர் வீரர்களை போர் வீரர்கள் என அழைக்க முடியாது’ என ஜனாதிபதிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து, அவரது கழுத்தை அறுப்பது போல் கை சைகை செய்து, அதை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு அச்சுறுத்து போன்ற காணொளி ஒன்று பதிவாகியுள்ளது.
மே 24 ஆம் திகதி மாலை நீர்கொழும்பில் உள்ள தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நினைவேந்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கச் சென்ற குழுவிற்கு தலைமை தாங்கிய சிங்கள ராவய தேசிய அமைப்பின் செயலாளர் மதுபாசன பிரபாத் ரணஹங்ச, முடிந்தால் இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு என ‘வாயைத் திறந்து சொல்லுங்கள்’ என ஜனாதிபதியிடம் சவால் விடுத்திருந்தார்.
“முடிந்தால், உங்கள் வாயைத் திறந்து இது ஒரு ஒற்றையாட்சி நாடு என்று சொல்லுங்கள். ஏனென்றால், இப்போது பொசன் போயா அன்று கூட இருக்காமல், நீங்கள் பிரான்சுக்குச் சென்று புலம்பெயர்ந்தோருடன் பேச்சு நடத்தப்போவதாக நாங்கள் அறிந்தோம். புலம்பெயர்ந்தோரின் விருப்பங்களை நீங்கள் பூர்த்தி செய்யப்போவதில்லை என்றால், உங்கள் வாயைத் திறந்து இது ஒரு ஒற்றையாட்சி நாடு என சொல்லுங்கள். நீங்கள் அரசியலமைப்பிற்கு வெளியே செயல்படவில்லை என கூறுமாறு அனுர குமார திசாநாயக்கவுக்கு நாங்கள் சவால் விடுகிறோம்.”
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் நீதியை அடைவதைத் தடுப்பதும், தற்போதைய அரசாங்கம் நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்வதைத் தடுப்பதும் போராட்டக்காரர்களின் நோக்கம் எனத் தெரிவித்த, நீர்கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வழிநடத்திய கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல், போராட்டக்காரர்கள், மக்களால் வெளியேற்றப்பட்ட ஒரு பகுதியினரால் ஆதரிக்கப்படுகிறார்கள் என குற்றம் சாட்டுகிறார்.
“இந்தக் குழுக்களின் பின்னால் உள்ள சக்தி என்ன? 2022 இல் வெளியேற்றப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் இந்த அமைப்பிற்குள் இருப்பது எங்களுக்குத் தெரியும்.”
2009 இல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என்பதை வலுவாக வலியுறுத்தும் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல், இந்த நினைவேந்தல் வடக்கில் மாத்திரம் ஏன் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
“வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்படுவதைப்போல் தெற்கிலும் இதைச் செய்வது அவசியம், ஏனெனில் இந்தப் பிரச்சினைகள் இந்த நாட்டின் அரசியல் பிரச்சினை. இந்த நாட்டு மக்களின் பிரச்சினை. இந்த நாட்டு குடிமக்களின் பிரச்சினை. இந்தப் பிரச்சினைகளை வடக்கு-கிழக்கிற்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. இது அரசியலமைப்பின் மூலம் மாற்றப்பட வேண்டிய ஒரு பிரச்சினை.”
நினைவேந்தலை எதிர்த்துப் போராட வந்த குழு, ஜனாதிபதியை புலம்பெயர்ந்தோருடன் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டினாலும், தற்போதைய அரசாங்கமோ அல்லது சர்வதேச சமூகமோ முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி வழங்கத் தயாராக இல்லை எனவும், அத்தகைய சூழ்நிலையில் மக்களுக்கு தெளிவூட்டவேண்டியது அமைப்பின் பொறுப்பு எனவும் அருட்தந்தை வலியுறுத்துகிறார்.
“இன்றுவரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி வழங்க எந்த அரசாங்கமும் தயாராக இல்லை. போர்க் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவோ அல்லது தண்டிக்கவோ தற்போதைய அரசாங்கம் கூட தயாராக இல்லை. அது மட்டுமல்லாமல், சர்வதேச சமூகமும் சர்வதேச அமைப்புகளும் இன்னும் தயாராக இல்லாத நேரத்தில் தெற்கு மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய பொறுப்பு கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்திற்கு உள்ளது.”
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியை எந்தத் தடையும் இல்லாமல் நடத்த அனுமதிக்குமாறு அறிவுறுத்தியபோதும், போராட்டக்காரர்கள் எப்படி அந்த இடத்தை அடைந்தார்கள் என அருட்தந்தை கேள்வி எழுப்பினார்.
“முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இடையூறு செய்யக்கூடாது என மனித உரிமைகள் ஆணைக்குழு அனைத்து பொலிஸாருக்கும் தெரிவித்ததாகக் கேள்விப்பட்டோம். இந்தக் குழு எப்படி இங்கு வந்தது? அந்தக் குழு எப்படி இடையூறுகளை ஏற்படுத்தி சத்தமிட்டது? அவர்கள் ஏன் அங்கிருந்து விரட்டப்படவில்லை? இது எங்களுக்கு ஒரு பிரச்சினை.”
போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான நெருங்கிய உறவை மனித உரிமை ஆர்வலரான மாரிமுத்து சத்திவேல் மேலும் கேள்வி எழுப்புகிறார்.
“அதுமாத்திரமல்ல, அவர்கள் முதுகில் தட்டி அவர்களுடன் பேசுவதையும் நாங்கள் பார்த்தோம். எனவே பொலிஸாருக்கும் அவர்களுக்கும் என்ன உறவு?”
‘தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பிற்கு வருடங்கள் 16, சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும் அரசியல் யாப்பை முன்வைத்திடு’ என்ற கருப்பொருளில் நீர்கொழும்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஏற்பாட்டாளரான கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அருட்தந்தை, பொலிஸார் தமது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டுமெனக் கூறினாலும், அவர்கள் இதுவரை அதற்கான திகதியை வழங்கவில்லை எனக் கூறுகிறார்.
“அன்று, பொலிஸார் நீதிமன்ற உத்தரவோடு வந்து, இதை உள்ளே நடத்த முடியும் என எனக்குத் தெரிவித்தனர். ஆனால் வீதியில் எதுவும் செய்ய முடியாது. வீதியில் செல்ல முடியாது என்பது மாத்திரமல்ல, நாங்கள் வாக்குமூலம் பெறுவோம் என சொன்னார்கள். நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நாளில் நீர்கொழும்பு பொலிஸுக்கு வருமாறு நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம் எனக் குறிப்பிட்டார்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் பொலிஸார் இன்னும் எங்களுக்கு திகதியை வழங்கவில்லை.”
இனவாத மற்றும் மதவாத சித்தாந்தத்தின் அடிப்படையில் நாட்டை ஆட்சி செய்யும் எவரும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை வழங்கமாட்டார்கள் எனக் கூறிய அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல், வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு நாட்டின் குடிமக்களாக வாழ்வதற்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என கடுமையாக வலியுறுத்தினார்.
“இது ஒரு அரசியல் பிரச்சினை என நாங்கள் பொலிஸாரிடம் தெளிவாகச் சொல்கிறோம். பொலிஸாரால் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. அரசாங்கம் தலையிட வேண்டும். அப்போதுதான் அரசியல் நீதியை எதிர்பார்க்க முடியும். ஆனால், இனவெறி மற்றும் மதக் கருத்துக்களால் அடிமைப்பட்டு இந்த நாட்டில் ஆட்சி செய்பவர்கள், எங்களுக்கு அந்த அரசியல் நீதியையும் தரமாட்டார்கள் என்ற உண்மையின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடையே சுயநிர்ணய உரிமை பகிரப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்.”
சிங்கள ராவய தேசிய அமைப்பின் செயலாளர் மதுபாசன பிரபாத் ரணஹன்சவின் பெயரில், நீர்கொழும்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சீர்குலைப்பதைத் தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவைப் பெறவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.