Bootstrap

இனவாதத்தை தூண்டி மீண்டும் பிளவுபடுத்துவதற்கான ஒரு முயற்சி!

எம்.எல்.எம்.மன்சூர்

“…………. அற­க­ல­யவின் போது என்னை எதிர்ப்­ப­தற்­கென முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும் ஒன்று திரண்­டார்கள். நான் தொடர்ந்து அதி­கா­ரத்­தி­லி­ருந்து வந்தால் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு பாதிப்­புக்கள் ஏற்­படும் விதத்தில் சிங்­கள பௌத்­தர்­களை நான் மேலும் வலு­வூட்­டி­யி­ருப்பேன் என்ற அச்­சமே அவர்­களை அவ்­வாறு செய்யத் தூண்­டி­யது”. (பக்கம். 91)

“என்னை ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்­கான சதி” (The Conspiracy to Oust Me from the Presidency) என்­பது முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ச எழு­தி­யி­ருக்கும் புத்­த­கத்தின் பெயர். (உப தலைப்பு: சர்­வ­தேச அனு­ச­ர­ணை­யுடன் இலங்­கையில் அரங்­கேற்­றப்­பட்ட ஆட்சி மாற்றம் ஜன­நா­ய­கத்தை கேலிக்­கூத்­தாக்­கி­யது எப்­படி?)

இந்நூல் ஆங்­கி­லத்­திலும், சிங்­க­ளத்­திலும் வெளி­வந்­தி­ருக்­கி­றது. மூலப்­பி­ரதி ஆங்­கி­லத்தில் எழு­தப்­பட்டு, பின்னர் சிங்­க­ளத்தில் மொழி­பெ­யர்க்­கப்­பட்­டி­ருப்­பதை எளிதில் ஊகிக்க முடி­கி­றது.

உண்­மை­யான நூலா­சி­ரியர் கோட்­டா­பய ராஜ­பக்ச அல்ல என்­பதில் எவ்­வித சந்­தே­க­மு­மில்லை. இவ்­வகை எழுத்­துக்­களை ‘Ghost Writing’ என்று சொல்­வார்கள். பெரும் அர­சியல் தலை­வர்கள் மற்றும் பல்­வேறு துறை­களில் சாதனை படைத்­தி­ருக்கும் பெரும் புள்­ளிகள் போன்­ற­வர்­களின் தன் வர­லா­றுகள் அவ்­வாறு தான் எழு­தப்­ப­டு­கின்­றன. அப்­படி மற்­ற­வர்­க­ளுக்கு புத்­த­கங்­களை எழுதிக் கொடுப்­ப­தற்­கென்றே தொழில்­முறை எழுத்­தா­ளர்கள் இருந்து வரு­கி­றார்கள். அவர்­களை ‘Ghost Writers’ என்று அழைப்­பார்கள். உல­கெங்­கிலும் பொது­வாக பின்­பற்­றப்­பட்டு வரும் ஒரு நடை­முறை இது.

முன்னர் 2012 இல் வெளி­வந்த ‘Gota’s War’ என்ற நூலை எழு­தி­யவர் ‘தி ஐலண்ட்’ பத்­தி­ரி­கையின் அர­சியல் கட்­டு­ரை­யாளர் சி. ஏ சந்­தி­ரப்­பி­ரேம. விடு­தலைப் புலி­களை முறி­ய­டித்து, சுமார் 30 வருட காலம் நீடித்து வந்த இலங்­கையின் உள்­நாட்டுப் போரை முடி­வுக்கு கொண்டு வந்த சாத­னைக்கு முழு­வதும் கோட்­டா­பய ராஜ­பக்­சவே சொந்­தக்­காரர் என்ற தொனியில் எழு­தப்­பட்ட நூல் அது. போரை முடி­வுக்கு கொண்டு வந்­ததில் சரத் பொன்­சே­காவின் வகி­பாகம் முழு­வதும் அதில் இருட்­ட­டிப்புச் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

தன்னை சாதனை நாய­க­னாக சித்­த­ரித்து புத்­தகம் எழு­திய சந்­தி­ரப்­பி­ரே­ம­வுக்கு கோட்­டா­பய ராஜ­பக்ச வழங்­கிய பரிசு ஜெனீவா, ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யத்தில் இலங்­கையின் நிரந்­தரப் பிர­தி­நிதி பதவி (2020 –2022). தேசிய மற்றும் சர்­வ­தேச மனித உரி­மைகள் அமைப்­புக்­களின் கடும் எதிர்ப்­புக்­க­ளுக்கு மத்­தியில் வழங்­கப்­பட்ட நிய­மனம் அது.

நூலின் சர­ள­மான மொழி­நடை, நிகழ்­வுகள் வரி­சைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் விதம், தர்க்க ஒழுங்கு மற்றும் சர்­வ­தேச ராஜ­தந்­திர வட்­டா­ரங்­களின் நகர்­வுகள் குறித்த விளக்­கங்கள் போன்­ற­வற்றை பார்க்கும் போது, இலங்கை அர­சியல் மற்றும் பிராந்­திய புவி அர­சியல் போக்­குகள் குறித்த பர­வ­லான அறிவைக் கொண்­டி­ருக்கும் தொழில்­முறை இத­ழி­ய­லாளர் (Professional Journalist) ஒரு­வரால் மட்­டுமே இப்­ப­டி­யான ஒரு நூலை எழுத முடியும் என்ற முடி­வுக்கு வரலாம்.

அந்த வகையில், கோட்­டா­வுக்கு மிக நெருக்­க­மா­ன­வ­ராக இருந்து வரும் சந்­தி­ரப்­பி­ரே­மவே இந்­நூலை எழு­தி­யி­ருக்க முடியும் என்­பது இலங்­கையின் ஊடக வட்­டா­ரங்­களில் பர­வ­லாக நிலவி வரும் அனு­மானம்.

அர­சி­யலில் எவ்­வித முன்­ன­னு­ப­வ­மு­மில்­லாமல் 2019 இல் இலங்­கையின் ஏழா­வது நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட கோட்­டா­பய ராஜ­பக்ச தனது இரண்­டரை வருட கால ஆட்­சியின் போது விட்ட முக்­கி­ய­மான தவ­றுகள் எவை என்­பதை விவ­ரித்துக் கூற வேண்­டி­ய­தில்லை. எதிர்­கால வர­லாற்­றா­சி­ரி­யர்கள் அவ­ரு­டைய வர­லாற்றுப் பாத்­திரம் (Legacy) குறித்து எழுதும் போது அவற்றை விரி­வாக எடுத்து விளக்­கு­வார்கள்.

எரி­பொருள் மற்றும் எரி­வாயு போன்ற அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் தட்­டுப்­பாட்­டுடன் கூடிய தீவிர பொரு­ளா­தார நெருக்­கடி. இர­சா­யன உர வகை­களின் இறக்­கு­மதித் தடை போன்ற முழு நாட்­டையும் முடக்­கிய பிரச்­சி­னை­க­ளா­கட்டும் அல்­லது கொவிட் சட­லங்­களை எரி­யூட்­டுதல் போன்ற சிறு­பான்மை முஸ்லிம் சமூ­கத்தின் மீது பேர­திர்ச்­சியை எடுத்து வந்த சம்­ப­வங்­க­ளா­கட்டும் அவை எவற்­றுக்கும் ‘எந்த விதத்­திலும் தன்னால் தனிப்­பட்ட முறையில் பொறுப்­பேற்க முடி­யாது’ என்­பது அவ­ரு­டைய வாதம். அதற்­கான தனது தரப்பு நியா­யங்­க­ளையும் நூலில் அடுக்கிச் செல்­கிறார்.

அவரைப் பதவி விலகச் செய்த அற­க­லய மக்கள் எழுச்சி, ஒரு சில தேசிய சக்­தி­க­ளுடன் சர்­வ­தேச சக்­திகள் கூட்­டாக இணைந்து மேற்­கொண்ட ஒரு சதி என்­பதே இந்த நூலின் சாராம்சம். இந்தச் சதியில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்த உள்­நாட்டுச் சக்­தி­களில் முஸ்லிம் சமூகம் ஒரு முக்­கிய தரப்­பாக இருந்து வந்­தது என்றும், கொவிட் ஜனாஸா எரிப்பு மற்றும் கிழக்கு மாகா­ணத்­திற்­கான தொல்­லியல் செய­லணி என்­பன கார­ண­மாக முஸ்­லிம்கள் தன் மீது கொண்­டி­ருந்த வெறுப்­பு­ணர்வை அதே விதத்தில் அற­க­லய பூமிக்குள் எடுத்து வந்­தார்கள் என்றும் சொல்­கிறார் கோட்­டா­பய.

“ஒரு முஸ்லிம் நபரின் தலை­மையில் 2022 ஜூலை 13 ஆந் திகதி ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்­துக்குள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் அத்­து­மீறிப் பிர­வே­சித்­தார்கள். அது ஒரு போயா தினம்….. வழ­மை­யான ஒளி­ப­ரப்­புகள் நிறுத்­தப்­பட்டு, அற­க­லய ஆர்ப்­பாட்­டங்­களைக் காட்டும் காட்­சிகள் மட்­டுமே ஒளி­ப­ரப்­பப்­பட வேண்டும் என அந்­நபர் உரத்துக் கூறு­கிறார்……… அன்று போயா தின நிகழ்ச்­சி­களே ஒளி­ப­ரப்­பப்­ப­ட­வி­ருக்­கின்­றன என ரூப­வா­ஹினி ஊழியர் அவ­ரிடம் கூறிய போது, அந்த முஸ்லிம் அற­க­லய தலைவர் இப்­படிச் செனான்னார்”:

“பண (புத்­தரின் போத­னைகள்) மற்றும் பிரித் ஓதுதல் என்­ப­வற்றைப் பார்க்­கிலும் மிக முக்­கி­ய­மான விஷ­யங்கள் இருக்­கின்­றன …….. இந்தச் சம்­பவம் அற­க­லய எதிர்ப்புச் செயற்­பா­டு­களில் பௌத்­தர்­க­ளுக்கு கிடைத்த இடத்தை தெளி­வாக காட்­டு­கி­றது”. (பக். 171)

மேற்­படி சம்­பவம் ஒரு தனி நபரின் நடத்தை சம்­பந்­தப்­பட்­டது. அவர் அப்­படிச் சொல்­லி­யி­ருந்தால் அது வன்­மை­யாக கண்­டிக்­க­தக்­கது என்­ப­திலும் சந்­தே­க­மில்லை.

ஆனால், அந்த வார்த்­தை­களை ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் சிங்­கள பௌத்­தர்­களை விளித்துச் சொன்ன வார்த்­தை­க­ளாக சித்­த­ரித்துக் காட்ட முயல்­வதை எந்த விதத்­திலும் ஏற்றுக் கொள்ள முடி­யாது.

இஸ்­லா­மியர் மீதான வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் நோக்கில் இச்­சம்­பவம் வேண்­டு­மென்றே இந்­நூலில் திணிக்­கப்­பட்­டி­ருப்­பது போல் தெரி­கி­றது.

அற­க­லய சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு எதி­ரான ஒரு சூழ்ச்சி’ எனக் கூறு­வது ஒரு புதிய கண்­டு­பி­டிப்­பல்ல. நளின் டி சில்வா, சேன தோர­தெ­னிய போன்ற சிங்­கள தேசி­ய­வா­திகள் இது குறித்து ஏற்­க­னவே விரி­வாக எழு­தி­யி­ருக்­கி­றார்கள்.

“மே 9: மறைந்­தி­ருக்கும் கதை” என்ற விமல் வீர­வன்­சவின் (சிங்­கள) நூலிலும் இந்த விஷ­யமே சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. ஒரே­யொரு வித்­தி­யாசம் – வீர­வன்ச இந்தச் சதி தொடர்­பாக அமெ­ரிக்க தூதுவர் ஜூலி ஷங்க் மீது நேர­டி­யாக விரலை நீட்­டு­கிறார். கோட்­டா­பய சர்­வ­தேச ரீதியில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் எனக் கரு­தப்­ப­டு­ப­வர்கள் எவ­ரு­டைய பெய­ரையும் குறிப்­பி­டாமல் அடக்கி வாசிக்­கிறார்.

“அற­க­லய சிங்­கள – பௌத்­தர்­க­ளுக்கு எதி­ரா­னது; சிங்­கள பௌத்த தலை­மைத்­து­வத்தை அழித்­தொ­ழிக்கும் நோக்­கத்­துடன் தேச விரோத சக்­தி­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒரு சதி” என்ற கருத்தை நளின் டி சில்வா போன்­ற­வர்கள் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றார்கள். அந்தக் கருத்தின் ஒரு நீட்­சி­யா­கவே இந்­நூலைப் பார்க்க முடி­கின்­றது.

2012 இல் பொது­பல சேனா இயக்­கத்தின் திடீர் எழுச்­சி­யை­ய­டுத்து சுமார் ஒரு தசாப்த காலம் இலங்­கையின் இனத்­துவ – அர­சியல் களம் பதற்ற உணர்­வுகள் சூழ்ந்­த­தாக இருந்து வந்­தது. சிங்­க­ள­வர்­க­ளுக்கும், முஸ்­லிம்­க­ளுக்கும் மத்­தியில் அப்­படி ஒரு விரி­சலை உரு­வாக்கி, போஷித்து வளர்த்­ததில் கோட்­டா­பய ராஜ­பக்ச வகித்து வந்த நிர்­ண­ய­க­ர­மான வகி பாகம் குறித்து புதி­தாக சொல்ல வேண்­டி­ய­தில்லை.

அத்­துடன் அவ­ரு­டைய பிரச்­சார மேடை­களில் ‘நாங்கள் எந்தக் காரணம் கொண்டும் வாக்­கு­க­ளுக்­காக முஸ்­லிம்­க­ளிடம் மண்­டி­யிடமாட்டோம்’ என்ற விதத்தில் விமல் வீர­வன்ச போன்­ற­வர்கள் பிர­க­டனம் செய்த ஆவே­ச­மான சூளு­ரை­க­ளையும் எவரும் எளிதில் மறந்து விட முடி­யாது.

ஆனால், 2019 ஜனா­தி­பதி தேர்தல் முடி­வுகள் மீது செல்­வாக்குச் செலுத்­திய அந்த முக்­கி­ய­மான பின்­னணித் தக­வல்கள் வேண்­டு­மென்றே மறைக்­கப்­பட்டு, நூல் அறி­மு­கத்தில் இவ்­வாறு சொல்­லப்­ப­டு­கி­றது:

“……… திகா­ம­டுல்ல தேர்தல் மாவட்­டத்தில் சிங்­க­ள­வர்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் அம்­பாறை தொகு­தியில் எனக்கு 64% வாக்­குகள் கிடைத்­தன. அதே வேளையில், முஸ்­லிம்கள் செறிந்து வாழும் சம்­மாந்­துறை, கல்­முனை மற்றும் பொத்­துவில் ஆகிய தொகு­தி­களில் எனக்குக் கிடைத்த வாக்­குகள் முறையே 10%, 12% மற்றும் 16 % ஆகும்………. திரு­கோ­ண­ம­லையில் சிங்­க­ள­வர்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் சேரு­வில தேர்தல் தொகு­தியில் 50% க்கு மேல் வாக்­குகள் கிடைத்­தன. ஆனால், முஸ்­லிம்­களை பெரும்­பான்­மை­யாக கொண்ட மூதூர் தொகு­தியில் 6% க்கும் குறை­வான வாக்­கு­களே எனக்குக் கிடைத்­தன.” (பக்கம் 1)

“கொவிட் சட­லங்­களை அடக்கம் செய்­வ­தற்கு சுகா­தாரத் துறையைச் சேர்ந்த அனை­வரும் கடும் எதிர்ப்பை தெரி­வித்­தார்கள்……. ஒரு கட்­டத்தில், சட­லங்­களை ஒரு கொங்­கிரீட் பெட்­டியில் வைத்து மூடி அடக்கம் செய்­யலாம் நான் யோசனை தெரி­வித்தேன். அந்த யோச­னை­யையும் அவர்கள் எதிர்த்­தார்கள். குறிப்­பாக, ஸ்ரீஜ­ய­வர்­த­ன­புர பல்­க­லை­க­ழ­கத்தைச் சேர்ந்த நுண்­ணு­யி­ரியல் நிபுணர் (Micro Biologist) மெத்­திக்கா விதா­னகே கொங்­கிரீட் தட்­டுக்­க­ளிலும் கூட கசி­வுகள் ஏற்­பட முடியும் எனக் கூறி அந்த யோச­னையை நிரா­க­ரித்தார்” (பக். 122) எனக் கூறும் கோட்­டா­பய, அச்­சந்­தர்ப்­பத்தில் அது தொடர்­பாக அவ­ருக்­கி­ருந்த மாற்றுத் தெரி­வுகள் குறித்துப் பேசு­வதை தவிர்த்துக் கொள்­கிறார்.

அதா­வது, இப்­ப­டி­யான பார­தூ­ர­மான ஒரு நெருக்­கடி தொடர்­பாக முடி­வு­களை எடுக்கும் பொழுது அரச தலை­வர்கள் பொது­வாக சம்­பந்­தப்­பட்ட துறையைச் சேர்ந்த ஒன்­றுக்கு மேற்­பட்ட நிபு­ணர்­க­ளிடம் அபிப்­பி­ராயம் கேட்­பது (Second Opinion) வழமை. ஆனால், கொவிட் சட­லங்­களை எரி­யூட்­டு­வது தொடர்­பாக அப்­படி எதுவும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இலங்­கையில் இருக்கும் ஒரே­யொரு ‘Micro Biologist’ மெத்­திக்கா விதா­னகே மட்­டுமே என்ற நிலைப்­பாட்டில் அவர் இருந்து வந்­தி­ருப்­பது போல் தெரி­கி­றது.

“இப்­பி­ரச்­சினை தொடர்­பாக ஒட்­டு­மொத்த சுகா­தாரத் துறையும் ஒரே வித­மான அபிப்­பி­ரா­யத்தைக் கொண்­டி­ருந்­தது” என்­கி­றது இந்நூல். ஆனால், அது தவறு. பல துறைசார் நிபு­ணர்கள் இது தொடர்­பாக மாற்றுக் கருத்­துக்­களை அச்­சந்­தர்ப்­பத்தில் முன்­வைத்­தி­ருந்­தார்கள். ஆனால், நூலில் எந்­த­வொரு இடத்­திலும் அத்­த­கைய மாற்றுக் கருத்­துக்கள் எவையும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

“இலங்­கையில் முஸ்­லிம்­களின் சட­லங்கள் எரி­யூட்­டப்­ப­டு­வது ‘அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக’ அந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள ஒரு கூட்டுத் தண்­டனை என பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் ஓர் அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்­தது” எனவும், “ஐ நா மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ளர்­களின் ஒரு குழு 2021 ஜன­வரி மாதம் வெளி­யிட்ட ஒரு கூட்­ட­றிக்­கையில் பார­பட்சம், தீவிர தேசி­ய­வாதம் மற்றும் இன­வாதம் என்­ப­வற்றின் அடிப்­ப­டையில் இலங்கை அரசு பொதுச் சுகா­தாரம் தொடர்­பான தீர்­மா­ன­மொன்றை அமுல் செய்­வது நாட்டில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்­களை துன்­பு­றுத்­து­வ­தற்கு இணை­யா­னது எனக் குறிப்­பிட்­டி­ருந்­தது” (பக். 124) எனவும் இப்­பி­ரச்­சினை தொடர்­பாக இலங்கை மீது சர்­வ­தேச ரீதியில் பிர­யோ­கிக்கப்­பட்ட அழுத்­தங்­களை இந்நூல் குறிப்­பி­டு­கின்­றது.

ஆனால், இலங்கை மீது இவ்­விதம் கண்­டன அறிக்­கைகள் விடப்­பட்ட பின்­னணி நூலில் எந்த ஓர் இடத்­திலும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. அதா­வது, கொவிட் சட­லங்­களை எரிப்­ப­தற்கும், அதே­போல அடக்கம் செய்­வ­தற்கும் உலக சுகா­தார தாபனம் வழி­காட்­டு­தல்­களை வெளி­யிட்­டி­ருந்த பின்­ன­ணியில், இலங்கை அந்தத் தெரிவை மேற்­கொள்­வ­தற்கு பிடி­வா­த­மாக மறுப்புத் தெரி­வித்­தி­ருந்த கார­ணத்­தி­னா­லேயே இக்­கண்­ட­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

“இலங்­கைக்­கான ஐ நா வதி­விடப் பிர­தி­நிதி பிர­தமர் மஹிந்த ராஜ­பக்­ச­வுக்கு எழு­திய ஒரு கடி­தத்தில் கொவிட் சட­லங்கள் எரி­யூட்­டப்­ப­டு­வ­தை­யிட்டு தனது கவ­லையை தெரி­வித்­தி­ருந்தார். இவர்கள் அனை­வரும் இது தொடர்­பாக இலங்கை அர­சாங்­கத்­தையும், தனிப்­பட்ட முறையில் என்­னையும் குறை கூறி­னார்­களே ஒழிய, இதற்கு வழி­காட்­டு­தல்­களை வழங்­கிய சுகா­தாரத் துறை அதி­கா­ரி­களை ஒன்றும் சொல்­ல­வில்லை” என்று கோட்­டா­பய குறிப்­பி­டு­வது வேடிக்­கை­யா­னது.

சர்­வ­தேச ரீதியில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் ராஜ­தந்­திர மர­பொ­ழுங்­கு­களின் (Diplomatic Protocols) பிர­காரம், ஐக்­கிய நாடுகள் சபையோ அல்­லது வேறு வெளி­நாட்டு தூது­வ­ரா­ல­யங்­களோ மெத்­திக்கா விதா­ன­கே­யி­டமோ அல்­லது வேறு எவ­ரேனும் சுகா­தாரத் துறை உயர் அதி­கா­ரி­க­ளி­டமோ இத்­த­கைய பிரச்­சி­னைகள் தொடர்­பாக நேர­டி­யாக கேள்­வி­களை கேட்க முடி­யாது. அத்­த­ரப்­புக்கள் ஒரு பிரச்­சி­னையை சம்­பந்­தப்­பட்ட நாட்டின் அரச தலை­வரின் கவ­னத்­துக்கு மட்­டுமே எடுத்து வர முடியும். ஒரு நாடு என்ற முறையில் இலங்கை மேற்­கொள்ளும் அனைத்துத் தீர்­மா­னங்­க­ளுக்கும் இறு­தியில் ஜனா­தி­ப­தியே பொறுப்­பேற்க வேண்டும்.

இந்த நூல் வெளி­யி­டப்­பட்­டி­ருக்கும் கால கட்டம் (Timing) மிக முக்­கி­ய­மா­னது.

அற­க­ல­யவின் பின்னர் (வடக்கு கிழக்கு தவிர்ந்த) தென்­னி­லங்கை நெடு­கிலும் குறிப்­பாக சிங்­களப் பெரு­நி­லத்தில் (Sinhala Heartland) இது­வ­ரையில் இருந்­தி­ராத விதத்­தி­லான ஓர் அர­சியல் விழிப்­பு­ணர்வு தோன்றி வரு­வதை தெளி­வாக அவ­தா­னிக்க முடி­கி­றது. சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் நாடும், மக்­களும் எதிர்­கொண்ட 75 வருட கால சாபக்­கேட்­டி­லி­ருந்து மீண்டு, ஒரு புதிய இலங்­கையை உரு­வாக்­கு­வ­தற்கு (இன, மத, மொழி பேத­மில்­லாமல்) எல்­லோரும் ஒன்­றி­ணைய வேண்டும் என்ற வலு­வான குரல்கள் ஒலித்து வரும் வர­லாற்றுத் தருணம் இது. சிங்­கள புத்­தி­ஜீ­வி­களும், முற்­போக்கு கலை­ஞர்­களும், சமூக செயற்­பாட்­டா­ளர்­களும் தொடர்ச்­சி­யாக அக்­கோ­ரிக்­கையை வலி­யு­றுத்தி வரு­கி­றார்கள். புதிய வாக்­கா­ளர்­க­ளாக சேர்ந்து கொண்­டி­ருக்கும் கிட்­டத்­தட்ட 20 இலட்சம் இளைஞர் யுவ­தி­களும் ‘புதி­யதோர் தேசம்’ என்ற கோஷத்­துக்கு தமது முழு­மை­யான ஆத­ரவை தெரி­வித்து வரு­கி­றார்கள்.

ஆனால், இந்த வர­லாற்று ரீதி­யான எழுச்சித் தரு­ணத்தை (Historic Momentum) முற்­றிலும் உதா­சீனம் செய்யும் இந்நூல், இலங்­கையின் இன்­றைய பன்­முகப் பரி­மா­ணங்­களைக் கொண்ட நெருக்­க­டியை சிங்­கள பௌத்­தர்­களின் இருப்பு எதிர்­கொண்டு வரும் ஒரு பாரிய அச்­சு­றுத்­த­லாக மட்­டுமே ஒரு குறு­கிய பார்­வையில் நோக்­கு­கி­றது:

“……. சிங்­க­ள­வர்கள் – குறிப்­பாக சிங்­கள பௌத்­தர்கள் மீண்டும் ஒரு முறை பின்­னோக்கிச் சென்­றி­ருக்­கி­றார்கள். பௌத்த கலாச்­சாரம், வர­லாறு மற்றும் பாரம்­ப­ரி­யங்கள் என்­பன மீண்டும் ஒரு முறை சிறு­மைப்­ப­டுத்­தப்­படும் ஒரு நிலை தோன்­றி­யி­ருக்­கி­றது….. மகா சங்­கத்­தினர் பொது­வாக இழி­வு­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றனர். தொல்­லியல் மதிப்பைக் கொண்­டி­ருக்கும் இடங்கள் பல்­வேறு சுய­நல அக்­கறைக் குழுக்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அர­சி­யல்­வா­திகள் சிங்­க­ள­வர்­க­ளதும், சிங்­கள பௌத்­தர்­க­ளதும் உரி­மை­களை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­து­வ­தற்குப் பதி­லாக, சிறு­பான்மை சமூ­கங்­களின் வாக்­கு­களை குறி­வைத்து, அவர்­களை சந்­தோ­ஷப்­ப­டுத்தும் காரி­யங்­க­ளி­லேயே அதிக அள­வுக்கு அக்­கறை காட்டி வரு­கின்­றார்கள்”. (பக். 177)

“…… உயிர்த்த ஞாயிறு தற்­கொலை தாக்­கு­தல்­க­ளுடன் எவ்­வி­தத்­திலும் சம்­பந்­தப்­ப­டா­த­வர்கள் மீது (அதா­வது ராஜ­பக்­சகள் மீது) அதற்­கான பழியைச் சுமத்­து­வதன் விளை­வாக, 2015 -– 2019 கால கட்­டத்தில் இருந்து வந்­ததை போல முழு­வதும் முஸ்லிம் வாக்­கு­களில் தங்­கி­யி­ருக்கும் ஒரு அர­சாங்கம் எதிர்­கா­லத்தில் அமைய முடியும். அவ்­வாறு அமையும் அர­சாங்கம் நாட்டில் இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் பர­வு­வ­தனை தடுப்­ப­தற்கு எத­னையும் செய்யப் போவதில்லை” என்று முடிவாகக் கூறுகிறது இந்நூல்.

இலங்கை மக்கள் ஏற்கனவே இத்தகைய ‘சதிகள்’ குறித்த ராஜபக்சகளின் பேச்சுக்களைக் கேட்டு சலித்துப் போயிருக்கிறார்கள். ‘மேலைத் தேச சதி’ , ‘NGO களின் சதி’ , ‘ டயஸ்போராக்களின் சதி’, ‘இந்தியாவின் சதி’, ‘இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் சதி’ என இப்பட்டியல் நீண்டு செல்கிறது. அரசியல்வாதிகள் தமது முறைகேடுகளையும், பலவீனங்களையும் மறைத்துக் கொள்வதற்கு இலகுவில் கையில் எடுக்கக் கூடிய ஆயுதம் இத்தகைய ‘சதிக் கோட்பாடுகள்’.

அந்தப் பின்னணியில், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் வெளிவந்திருக்கும் கோட்டாபய ராஜபக்சவின் இந்த நூல் சிங்கள சமூகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எத்தகைய அதிர்வலைகளையும் ஏற்படுத்தவில்லை. எவரும் அதை பெரிதாக பொருட்படுத்தவுமில்லை.

போதாக்குறைக்கு, 2022 மார்ச் 31 ஆந் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோட்டாபய ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்ட போது, அவரைக் கொலை செய்வதற்காக பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திட்டமிட்டே அங்கு வந்து குழுமினார்கள் என்கிறார் அப்போது ஜனாதிபதியின் அந்தரங்கச் செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டார. தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய ஒரு பேட்டியில் அவர் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவித்துள்ளார். ஆனால், இத்தகைய அதிரடிப் பேட்டிகள் மூலம் நாட்டில் மீண்டும் ஒரு முறை இஸ்லாமோபோபியா அலையை தோற்றுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சியும் வெற்றியீட்டப் போவதில்லை.

மாறாக 21 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இடம்பெற்ற மிக முக்கியமான ஒரு வரலாற்றுத் திருப்பம் தொடர்பாக சிங்கள வலதுசாரிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஒரு பார்வை என்ற விதத்தில் மட்டுமே இந்நூலுக்கு ஒரு நூலக மதிப்புக் கிடைக்க முடியும்

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural Newspaper Canada is the first human rights-focused newspaper launched from abroad to serve the Sri Lankan Tamil community. Based in Canada, it aims to highlight human rights issues, political developments, and social challenges faced by Sri Lankan Tamils, both in Sri Lanka and the diaspora. By amplifying marginalized voices, it seeks to foster dialogue and advocate for justice, while offering a platform for critical news, opinions, and analysis from a Tamil perspective.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc