நீதிமன்றுக்குள் நிழலாடப் போகிறதா தமிழரசு?.
உரத்துப் பேசினால் உண்மையுமில்லை அதட்டி பேசினால் அர்த்தமுமில்லை நிமிர்ந்து பேசினால் நேர்மையும் இல்லை. ஆகவே அறிந்து, ஆராய்ந்து, தெளிந்து, தீர்க்கமாக, நிதானமாக வார்த்தையை உதிர வேண்டும். இல்லையேல் வீசிய அம்பே எம்மைக் குறிபார்க்கும்.
கனவுகளுடன் காற்றில் கத்திச் சண்டை நடாத்துவல் பயனில்லை. நீள் நினைவுகளுடன் நீசமற நிலைத்து எழவேண்டும் ஒப்புக்குச்சப்பு வார்த்தைகள் எல்லாம் ஒய்யாரக் கொண்டையிலே தாளம் பூவாம் உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம் எனும் நிலை தான் தோற்றம் பெறும் உணர்வுகள் எப்போதும் அறிவை விஞ்சியது இல்லை.
ஆனால் அறிவோ உணர்வுக்குள் அகப்படுவதில்லை அது தற்காத்து தனைக் காத்து தன் நினைக்காத்து. எக்காத்து இயம்புபவை. அதற்கு தான் வள்ளுவர் 'உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்' என்றார்.
யாவும் நலனியல் வாதங்களுக்கு அப்பால் எதுவுமே நகர்வதில்லை. இயற்கை விதிக்கட்டமைப்பு எப்படி பயனுறுதியற்றதை அகற்றுகிறதோ அப்படித்தான் யாவும் இருப்பியல் கடந்து எதுவுமே நிகழ்வதில்லை. உண்மை பேசப்போகிறாயா உதவாதவன் பெயர் பெறுவாய், நன்மை செய்யப்போகிறாயோ நாதியற்றுத் தவிப்பாய், நல்ல ஆலோசனை சொல்லப்போகிறாயா அல்லலுறுவாய்.
இவைதான் இன்றைய சமூகம் சமூக சமநீதி சமத்துவம் பேசுபவர்களுக்கு வழங்கும் ஒப்பற்ற உயர்நிலை நன்னெறிப்பட்டம். எனவே சமனற்ற சமூகக் கட்டமைப்பில் இருந்து 'அறமற்ற கல்வி கத்தியில்லா உறை போன்றது' எனும் தத்துவார்த்துக்குள் அகப்பட்டுக் கொள்கிறது இன்றைய நவீன சிந்தனையும் செயலும்.
எனவே மாற்றிப் பேசுவதும், புரட்டிப் பேசுவதும், ஏமாற்று, வஞ்சகம், சூது செய்வது எல்லாம் அடிப்படை தகுதியாக இன்றைய பின் நவீனத்துவ நீதியற்ற தேர்தல் வணிக அரசியல் வெளிப்படுத்துகின்றது. என்ன அதிகம் தத்துவம் பேசுகிறீர்கள் என்று யோசிக்கிறீர்களா? காரணத்தோடு தான் 'சோழியன் குடுமி சும்மா ஆடுமா', மக்களுக்கு மறதி அதிகம் என்று அரசியல்வாதிகள் திடமாக நம்புகிறார்கள் அதனால் தான் போகிற போக்கில் வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டு நகர்கிறார்கள். பாவம் எதுவும் அறியாத வாக்காளன் தொடர்ந்து நம்பி ஏமாறுகிறான்.
தான் ஏமாறுகிறேன் என்று தெரிந்தும் தொடர்ந்து வாக்களிக்கிறான். இந்த பலவீனத்தை அரசியல்வாதிகள் மூலதனமாகக்க தெரிந்தவர்கள் அதனால் தான் தொடர்ந்து பதவி சுகம் கானுறுகிறார்கள்.
எனவே மேலே கூறியவை எல்லாம் தமிழரசுக் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டையே பூடகமாக கோடிகாட்டினேன். கடந்த பெப்ரவரி 29ல் நடந்த தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கில் திருகோணமலை வழக்கிலே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் வழக்காளியின் கோரிக்கையை ஏற்பதாகக் கூறிவிட்டு ஏதோ பெரும் அறத்தியாகம் செய்து பதவியை துறந்ததாக ஆதரவு அடிப்பொடிகள் சிற்றின்பம் கண்டனர் அதற்கு ஆயுள் அதிகமில்லை என்பதை அவர்களே நிரூபித்துவிட்டனர் .
கடந்த மாதம் 17ம் திகதி வவுனியாவில் நடந்த அரசியல் குழுக்கூட்டத்தில் கட்சி வழக்காளிடம் சரணடைய முடியாது அதில் சில விடயங்களில் தன்னால் ஒத்துப் போக முடியாது என திரு சுமந்திரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட சட்ட வியாக்கியானத்தை அரசியல் குழுவில் கலந்து கொண்டவர்கள் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் கடந்த ஐந்தாம் திகதி வழக்கு தவணையின் போது நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.
அதை ஏனைய அறுவர் தரப்பு சட்டத்தரணிகளும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அப்படியானால் ஏலவே இவர்கள் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்மாறான வாதத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளனர் ஆகவே சுமந்திரனின் நிகழ்ச்சி நிரலுக்குள் ஏனைய எதிராளிகளும் உள்வாங்கப்பட்டனரா? சுமந்திரனின் ஆலோசனையில் தான் இந்த வழக்குக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக மாவை சேனாதிராஜா, சிறிதரன் தரப்பால் இவ்வளவு நாளும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை எனவாகியது.
ஆகவே இவர்கள் மக்கள் மன்றை மட்டுமல்ல நீதிமன்றிலும் கூட முன்னுக்குப்பின் முரணையே வெளிப்படுத்துகின்றனர் கடந்த பெப்ரவரி 29ல் எடுத்த தீர்மானத்தை கடந்த ஐந்தாம் திகதியில் பின்பற்றவில்லை. இவை சிறுபிள்ளைத்தனமான, யதார்த்தமான, முதிர்ச்சியற்ற, சட்டத்தெளியவற்ற செயற்பாடுகள் ஆகவே சுமந்திரன் காலத்தை நீடிக்க விரும்புகிறாரா? அல்லது தான் நினைத்ததை செய்கிறாரா? அல்லது கட்சியின் நலனை காப்பாற்ற முனைகிறாரா? அல்லது பாட்டும் நானே பாவமும் நானே என நகர்த்தினாரா? அவரை எதிர்த்தவர்கள் கூட கடந்த வழக்கில் கள்ள மௌனம் காக்கின்றனர் .
இதில் யார் கட்சி விசுவாசிகள் யார் விரோதிகள் என்பதை தீர்மானிக்க பட்டிமன்றம் தான் வைத்து தான் பேசிப் பார்க்க வேண்டும் அதற்கும் நடுவரை தேட செய்வாய்க்கிரகம் தான் போக வேண்டும் சுமந்திரன் நிதிமன்றில் கூறிய விடயங்கள் சக எதிராளிகளுக்கோ அல்லது வழக்காளிக்கோ அல்லது இவர்களது சட்டத்தரணிகளுக்கோ புரிந்ததாக எனக்கு தெரியவில்லை. இந்த வழக்கு முழுக்க முழுக்க யாப்பு சம்மந்தப்பட்டது ஆகவே அதை புரிந்து கொள்ள பெரிய அறிவு அவசியம் இல்லை எழுத வாசிக்க தெரிந்த யாவருக்கும் புரியும் பாவம் இந்த ஜனாதிபதி சட்டத்தரணிகளும் கட்சிக்காரர்களும் முதலில் யாப்பை படியுங்கள் இதில் எந்த முத்தீர்ப்புக்களையும் கோடி காட்டவும் இடமில்லை.
இதில் யார் தந்திரசாலி யார் ஏமாளி என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஆழமாக யோசியுங்கள் புரியும் உங்கள் அறியாமை இந்த சட்டத்தரணிகளை இதற்கு மேலும் நம்பப் போகிறீர்களா? என்பதை கட்சியில் உள்ள ஏனையவர்களாவது புரிந்து கொள்ளுங்கள். வெறுமனே பதவிக்கு கட்சி நடாத்தி பயனில்லை.
எழுபத்தைந்து ஆண்டுகளை கடந்து வந்த கட்சி வடகிழக்கில் ஆகப்பெரிய கட்சியும் அதிக வாக்காளரைக் கொண்ட கட்சியும் ஆகும். தந்தை செல்வநாயகம் அமிர்தலிங்கம் உட்பட பல வல்லமையுள்ள தலைவர்களைக் கொண்ட கட்சி இப்போது சில்லறைத்தனமான சித்து விளையாட்டுக்களில் ஈடுபடுத்தி வருகிறது இது காலக் கொடுமையா அல்லது தமிழரின் தலைவிதியா யாரிடம் யார் நொந்து கொள்வது எல்லாம் எள்ளி நகையாடும் கொள்ளிவால் பேய்களாய் பதவி வெறி கொண்டு கொழுந்து விட்டு எரிகிறது.
இதற்குள் கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா வழக்கை பல ஆண்டுகளுக்கு கொண்டு செல்லப்போகிறார் போல் உள்ளது நீள் உறக்கத்தில் இருந்து வந்தவர் போல் 03ஃ08ஃ2008ல் திருத்தப்பட்ட யாப்பை 2011-05-26ல் தேர்தல் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளனர் அதில் அப்போதைய தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவும் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் கையெழுத்து வைத்துள்ளனர்.
ஆனால் கட்சிகளின் ஏற்றுக் கொள்ளப்பட்ட யாப்புக்களை தேர்தல் திணைக்கள இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் அதில் இந்த யாப்பு இல்லை தேர்தல் திணைக்கள இணையத்தில் இருப்பது 25ஃ09ஃ2020ல் அப்போதைய பொதுச் செயலாளர் துரைராஜசிங்கத்தின் கையெழுத்துடன் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே சட்டப்படி இந்த யாப்பே செல்லுபடியாகும். அதை மீறியுள்ளனர் என்பதே வழக்கும்
எனவே 03-08-008ல் திருத்தப்பட்ட யாப்பிலும் தற்போது தேர்தல் திணைக்களத்தில் உள்ள யாப்பிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை ஒரு விடயம் மட்டுமே அதாவது மத்திய குழுவிற்கு தலைவர் பத்து பெயர் நியமிக்க முடியும் நாற்பது பெயரை தெரிவு செய்ய முடியும் ஆகவே மத்திய குழு ஐம்பது உறுப்பினர்கள் என்று தான் உள்ளது பொதுகுழுபற்றியோ தொகுதி எண்ணிக்கை பற்றியோ எதுவும் இல்லை இதை விடவும் காலத்திற்கு காலம் திருத்தப்பட்ட நான்கு விதமான யாப்புக்கள் உள்ளது.
இந்த குழப்பமான மாறுபட்ட யாப்புக்களை கொண்டு நீதிமன்றங்களுக்கு போனால் பல வருடங்கள் நீதிமன்ற படி ஏற வேண்டி வரலாம் மிக மூத்த சட்ட ஜாம்பவான்கள் எல்லாம் காலத்திற்கு காலம் இருந்தும் கட்சியின் ஆவணங்களை ஒழுங்கு முறையாக பேணவில்லை.
யாப்பே கட்சியின் உயிர் நாடி அதைக்கூட சரி செய்யாதவர்கள் தமிழ்மக்களின் நீண்ட கால இனப்பிரச்சினைக்கு அறத்தின் வழி நின்று அறுதியிட்டு உறுதியாக செயற்படுவார்களா என்பதை எவராலும் இனி மேலும் நம்பினால் அவர்களை நல்ல மனநல வைத்தியசாலையில் தான் சேர்க்க வேண்டும். வெறும் கானல் நீராகவே கடந்த எழுபது ஆண்டுகளைக் கடத்தியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தமது தவறை உணர்ந்து அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதே தமிழருக்குச் செய்யும் மிகப்பெரிய மகத்தான செயல் இனியும் இவர்களை தமிழினம் நம்புவது கடலில் உப்பைக் கரைப்பதற்கு ஒப்பானது . ஆகவே வரும் தேர்தலுக்கு முதல் இவர்களின் தலைமை விவகாரம் முடியக்கூடிய ஏது நிலை காணப்படவில்லை.
தொகுப்பு:-எஸ்.றொசேரியன் லெம்பேட்