சிவலிங்கம் அல்லது சிவா எனும் புலிகள் இயக்க சந்தேக நபரை உதாரணம் காட்டி வாக்குறுதி அளித்து ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்டதா?
சுயாதீனமாக பெறப்பட்டது என கூறப்படும் வாக்கு மூலங்களை எந்த பிரிவின் கீழ் பெறுவது என தீர்மானம் எடுத்தது பிரதான விசாரணை அதிகாரியா?
ஹாதியா, குழந்தையின் கைவிரல் ரேகை, கை அடையாளம், கால் தட அடையாளங்கள் பெறப்பட்டது ஏன்?
எப்.அய்னா
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியா, குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளின் போது நடந்தவை உள்ளிட்ட உண்மைகளை நீதிமன்றில் சாட்சியமாக வழங்கவுள்ளார்.
அநேகமாக எதிர்வரும் தவணையின் போது, பிரதான விசாரணை அதிகாரி மஹிந்த ஜயசுந்தரவிடம் சாட்சியங்கள், குறுக்கு விசாரணைகள் நிறைவுற்றதும், சாட்சிக் கூண்டில் ஏறி முழுமையான சாட்சியம் ஒன்றினை வழங்க அவர் எதிர்பார்ப்பதாக, அவரது சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கல்முனை மேல் நீதிமன்றுக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி அறிவித்தார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாரா ஜஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் நிந்தவூரில் வைத்துஅறிந்திருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரிவித்தன் ஊடாக), அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
ஹாதியாவுக்கு எதிரான வழக்கில், வழக்கை நிரூபிக்க சட்ட மா அதிபர் தரப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின் 8 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக ஹாதியா கோட்டை நீதிவானுக்கு அளித்துள்ள வாக்கு மூலத்திலேயே தங்கியுள்ளது. எனினும் அந்த வாக்கு மூலமானது சி.ஐ.டி.யினரின் கட்டுக்காவலில் இருந்த போது அவர்களின் வாக்குறுதி, நிர்ப்பந்தம் மற்றும் அழுத்தம் காரணமாக வழங்கப்பட்டது என ஹாதியாவின் நிலைப்பாடாக உள்ளது.
அதன்படி பயங்கரவாத தடை சட்டத்தின் 8 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக ஹாதியா கோட்டை நீதிவானுக்கு அளித்துள்ள வாக்கு மூலம் தொடர்பில் உண்மை விளம்பல் விசாரணைகள் தற்போது கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
கடந்த ஏப்ரல் 25, 26 ஆம் திகதிகளில் இது தொடர்பிலான சாட்சி விசாரணைகள் நடந்திருந்தன.
வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதிகளான சத்துரி விஜேசூரிய, மொஹம்மட் லாபிர் ஆகியோருடன் ஆஜராகி பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் வழக்குத் தொடுநர் தரப்பின் சாட்சியங்களை நெறிப்படுத்துகின்றார். அத்துடன் பிரதிவாதி பாத்திமா ஹாதியாவுக்காக சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸுடன் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் குறுக்கு விசாரணைகள் உள்ளிட்டவற்றை முன்னெடுத்து வருகின்றார்.
இந் நிலையிலேயே கடந்த 26 ஆம் திகதி வழக்கு விசாரணைகள் நிறைவடையும் போது ஹாதியாவின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மன்றின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, ஹாதியா சாட்சியம் அளிக்கவிருப்பதாகவும் அதற்கு மேலதிகமாக மேலும் சில சாட்சியாளர்களையும் பிரதிவாதி சார்பில் அழைக்கப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
‘கனம் நீதிபதி அவர்களே, இவ்வழக்கின் உண்மை விளம்பல் விசாரணையில் வழக்குத் தொடுநர் அவர் சார்பிலான இறுதி சாட்சியாளரை நெறிப்படுத்துகின்றார் என நினைக்கின்றேன். இந்த பிரதான விசாரணை அதிகாரியின் சாட்சியம் வழக்குத் தொடுநர் தரப்பின் இறுதி சாட்சியாளராக இருப்பின் அவரின் சாட்சியம் முடிவுற்றதும் எனது சேவை பெறுநரான பிரதிவாதி சாட்சிக் கூன்றில் சிறப்பு சாட்சியம் அளிக்க தயாராக இருக்கின்றார். அதனை தொடர்ந்து பிரதிவாதி தரப்பு சாட்சியாளர்களின் பட்டியலையும் மன்றுக்கு அளிக்க நாம் நடவடிக்கை எடுக்கின்றோம்.’ என தெரிவித்தார். பிரதிவாதி சார்பில் சாட்சியமளிக்க அழைக்கப்படப் போகும் ஏனைய நபர்கள் யார் என்பது இரகசியமாக உள்ளது. எனினும் அவ்வாறு அழைக்கப்பட எதிர்பார்க்கப்படும் சாட்சியாளர்கள் அழைக்கப்பட்டு சாட்சியம் பதிவு செய்யப்படுமானால் அது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
இது ஒரு புறமிருக்க, கடந்த 25 ஆம் திகதி வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஹாதியா கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவு இல: 2 இன் 2 ஆம் பிரதானியாக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் சுமனதிஸ்ஸவிடம் மேலதிக குறுக்கு விசாரணைகளை ஹாதியா சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் முன்னெடுத்தார்.
இதன்போது மிக முக்கியமான விடயம் ஒன்றினை கேள்வியாகவும், பரிந்துரையாகவும் அவர் சாட்சியாளர் சுமனதிஸ்ஸவுக்கு முன் வைத்திருந்தார்.
அதாவது, சிவா என அறியப்படும் சிவலிங்கம் எனும் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரை அழைத்து, அவர் சி.ஐ.டி.யின் பேச்சைக் கேட்டதால் இன்று சுதந்திரமாக இருப்பதாகவும், அதனால் தாங்கள் சொல்வதைப் போல் செயற்படுமாறும் ஹாதியாவை பலவந்தப்படுத்தியதாக பரிந்துரைக்கப்பட்டது.
எனினும் சாட்சியாளர் அதனை ஏற்க மறுத்தார். பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் முன்னெடுத்த மேலதிக சாட்சிப் பதிவின் போது தனது பிரிவு புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்பில் எந்த விசாரணையையும் செய்யவில்லை என சாட்சியாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஹாதியாவை நீதிவானிடம் அழைத்துச் செல்ல முன் அவருக்கு அவரது குழந்தை ருதைனாவை மையப்படுத்தி அழுத்தங்கள் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகவும், ஹாதியாவின் தந்தை அப்துல் காதரை கெக்குனுகொல்லவுக்கு சென்று விசாரணை செய்ததன் ஊடாக மேலதிக மிரட்டல் மற்றும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும் பல கேள்விகள் ஊடாக சாட்சியாளரிடம் வினவப்பட்டது. எனினும் அவை அனைத்தையும் மறுத்த சாட்சியாளர், குழந்தையை கையளிக்க உகந்த சூழல் இருக்கின்றதா என்பதை விசாரிக்கவே கெக்குனுகொல்லவுக்கு சென்று ஹாதியாவின் தந்தையிடம் வாக்குமூலம் பதிந்ததாக குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் ஷங்ரில்லா ஹோட்டல் குண்டுத் தாக்குதல் குறித்தும் ஹாதியாவின் விடயங்கள் குறித்தும் விசாரணைகளின் பிரதான விசாரணை அதிகாரியாக செயற்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிக குற்றங்கள் குறித்த விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சட்டத்தரணி மஹிந்த ஜயசுந்தரவின் சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டன.
பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலில் அவர் சாட்சியங்களை வழங்கினார்.
பாத்திமா ஹாதியா பயங்கரவாத தடைச் சட்டத்தின் 8 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக கோட்டை நீதிவானுக்கு அளித்துள்ள வாக்கு மூலம் மற்றும் அதற்கான விருப்பத்தை பெற்றுக்கொண்ட முறைமை, அதற்காக அவர் அழைத்துச் செல்லப்பட்ட விதம் உள்ளிட்டவை தொடர்பில் விரிவாக அவர் சாட்சியம் அளித்தார்.
குறிப்பாக ஹாதியாவின் வாக்கு மூலங்களை பதிய பொறுப்பளிக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார, ஹாதியா நீதிவானிடம் வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக கூறியதை அடுத்து தான் ஹாதியாவை அழைத்து அது தொடர்பில் வினவி உறுதி செய்த பின்னரேயே அவ்வாக்குமூலத்தை பதிய கோட்டை நீதிவானின் அனுமதியைப் பெற்று அழைத்துச் சென்றதாக ஜயசுந்தர சாட்சியமளித்தார்.
நான்கு நாட்களாக பாத்திமா ஹாதியா பயங்கரவாத தடைச் சட்டத்தின் 8 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக கோட்டை நீதிமன்றில் வாக்கு மூலம் அளித்ததாக பிரதான விசாரணை அதிகாரி சாட்சியமளித்தார். அத்துடன் 2020 ஜூன் 3 ஆம் திகதி ஹாதியா தன்னிடம் மீளவும் நீதிவானுக்கு வாக்கு மூலம் ஒன்றினை வழங்க வேண்டும் என 2 ஆவது தடவையாகவும் கோரியதாகவும் அப்போது குற்றவியல் நடை முறை சட்டக் கோவையின் 127 ஆம் அத்தியாயத்துக்கு அமைய வாக்கு மூலம் வழங்க அவரை நீதிமன்றில் ஆஜர் செய்ததாகவும் விசாரணை அதிகாரி ஜயசுந்தர சாட்சியமளித்தார்.
இவ்விரு சந்தர்ப்பங்களின் போதும் ஹாதியா எந்த சட்டப் பிரிவின் கீழ் சாட்சியம் அளிக்க வேண்டும் என்பதை பிரதான விசாரணை அதிகாரியான தானே தீர்மானித்ததாகவும் அவர் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலின் இடையே பதிலளித்தார்.
இதனைவிட ஹாதியா 2019 ஏப்ரல் 29 ஆம் திகதி அம்பாறை பொலிஸ் பொறுப்பதிகாரி தடல்லகேயினால் கைது செய்யப்பட்டதாகவும் அவரும் அவரது மகள் ருதைனாவும் 2019 மே 8 ஆம் திகதி சி.ஐ.டி. யினரால் பொறுப்பேற்கப்பட்டதாகவும், சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பஸீர் அவர்களை பொறுப்பேற்று சி.ஐ.டி.க்கு அழைத்து வந்ததாகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தர சாட்சியமளித்தார்.
ஹாதியா மற்றும் அவரது மகள் ருதைனாவின் விபரங்கள் அடங்கிய முதல் பி அறிக்கை 2019 மே 10 ஆம் திகதியே நீதிமன்றில் முதன் முதலாக சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தனது கையெழுத்தில் அது சமர்ப்பிக்கப்பட்டதாகவும் பிரதான விசாரணை அதிகாரி ஜயசுந்தர குறிப்பிட்டார்.
அந்த அறிக்கை பிரகாரம் பெறப்பட்ட உத்தரவுக்கு அமைய, ஹாதியா மற்றும் அவரது குழந்தை ருதைனாவின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டதாகவும் அவர்களது கைவிரல் ரேகைகள், கை அடையாளம், கால் தட அடையாளம் ஆகியவை பெறப்பட்டு, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட குற்ற ஸ்தலங்களில் இருந்து அடையாளம் காணப்பட்ட கைவிரல் ரேகைகள், கை மற்றும் கால் தட அடையாளங்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டதாக பிரதான விசாரணை அதிகாரி ஜயசுந்தர சாட்சியமளித்தார்.
இதன்போது பாணந்துறை, பரத்த வீதியில் அமைந்திருந்த பாதுகாப்பு இல்லம், கொள்ளுபிட்டி லகீ பிளாஸா பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கப் பெற்ற தடயங்களுடன் மட்டும் அவை ஒத்துப் போனதாக பிரதான விசாரணை அதிகாரி ஜயசுந்தர ந்திருந்த பாதுகாப்பு இல்லம், கொள்ளுபிட்டி லகீ பிளாஸா பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கப் பெற்ற தடயங்களுடன் மட்டும் அவை ஒத்துப் போனதாக பிரதான விசாரணை அதிகாரி ஜயசுந்தர குறிப்பிட்டார்.
2019 ஜூலை 29 ஆம் திகதி ஹாதியா நீதிவானிடம் வாக்கு மூலம் வழங்குவதற்கான விருப்பத்தை தெரிவித்ததாகவும் அன்றைய தினம் அவர் நோன்பு பிடித்திருந்ததாகவும் பிரதான விசாரணை அதிகாரி ஜயசுந்தர தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
இதனைவிட, சஹ்ரானுடனான தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் ஹாதியாவிடம் முன்னெடுத்த விசாரணைகள், ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டது முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை வரையிலான விடயங்களை பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலில் பிரதான விசாரணை அதிகாரி ஜயசுந்தர மன்றில் பிரஸ்தாபித்தார்.
இதனையடுத்து இவ்வழக்கானது மே 16 மற்றும் 17 ஆம் திகதிகளுக்கு மேலதிக சாட்சி விசாரணைகளுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.