பாலநாதன் சதீசன்
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசபை அமர்வுக்கு செய்தி சேகரிப்பதற்காக வருமிடத்து, மாவட்ட ஊடக அமையத்தின் ஊடாக உறுதிப்படுத்தி முன் அனுமதி பெற்றாலே உள்ளே வர முடியும் என பிரதேசசபை தபிசாளர் சின்னராசா லோகேஸ்வரன் புதிய உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளார்.
நாளையதினம் அக்டோபர் 16 ம் திகதி நடைபெறவுள்ள பிரதேசசபை அமர்விற்கு செய்தி சேகரிக்க செல்வதாயின் இரண்டு நாட்களுக்கு முன்னரே அனுமதி பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்ற காரணத்தால் கடந்த மாதம் (18.09.2025) நடைபெற்ற அமர்விலும் ஊடகவியலாளரை தபிசாளர் திருப்பியனுப்பியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேச சபை தபிசாளரால் ஊடகவியலாளருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில், “தாங்கள் ஊடகவியலாளர் என்கின்ற உறுதிப்படுத்தலை மாவட்ட ஊடக அமையத்தின் ஊடாக உறுதிப்படுத்தலுடன் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும்” என அனுப்பியிருந்தார். ஊடகவியலாளர் அரசாங்க ஊடக அடையாள அட்டை வைத்திருந்த போதும், அதனை ஏற்க மறுத்து, மாவட்ட ஊடக அமையத்தின் உறுதிப்படுத்தல் அவசியம் என தபிசாளர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் அரசாங்க அடையாள அட்டை இருந்தும் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து ஊடக வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. “இது தபிசாளரின் அறியாமையா? அல்லது ஊடகவியலாளர்களை உள்நோக்கத்துடன் தடுக்கும் முயற்சியா?” என்ற சந்தேகம் நிலவுகிறது.