முல்லைத்தீவு மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாந்தை கிழக்கில் சிறப்பாக நடைபெற்றது

முல்லைத்தீவு மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாந்தை கிழக்கில் சிறப்பாக நடைபெற்றது

பாலநாதன் சதீசன்

முல்லைத்தீவு மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் நேற்றையதினம்(24) மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

பாரம்பரிய பண்பாட்டினை பேணிடும் நோக்கிலும் எதிர்கால தலைமுறையினருக்கு கலை கலாசார மரபுகளை எடுத்துச் செல்லும் நோக்கிலும் குறித்த கலாசார விழா நிகழ்வுகள் ஒவ்வொரு பிரதேச செயலகத்தில் நடைபெற்றதுடன் இறுதியாக மாவட்ட கலாசார விழா அனைத்துப் பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி நேற்றையதினம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

விழாவிற்கு பிரதம அதிதியாக முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலை கலாசார பண்பாடுகளைத் தாங்கிய ஆற்றுகைகளுடன் விருந்தினர்கள் மாந்தை கிழக்கு நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் முது கலைஞர்களுக்கு "முல்லை கலைக்கோ" விருதுகளும் இளங்கலைர்களுக்கு " இளஞ்சுடர்" விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி.ம.சர்மிலி அவர்களின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்ற பண்பாட்டு விழாவில் வட மத்திய மாகாணத்தின் பிரதிப் பிரதம செயலாளர் எஸ். குணபாலன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) திருமதி.ச.மஞ்சுளாதேவி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெயக்காந்(காணி), மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் சற்குணேஸ்வரன், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய் முதலான பிரதேச செயலாளர்கள், பிராந்தி உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட நலன்புரி நன்மைகள் சபையின் இணைப்பாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர், ஏனைய உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.