திரிவைச்சகுளம் ஆக்கிரமிப்பு விவகாரத்தின்மூலம் மீண்டும் இனப்பிரச்சினையைத் தோற்றுவிப்பதற்கு இடமளிக்காதீர்

திரிவைச்சகுளம் ஆக்கிரமிப்பு விவகாரத்தின்மூலம் மீண்டும் இனப்பிரச்சினையைத் தோற்றுவிப்பதற்கு இடமளிக்காதீர்

விஜயரத்தினம் சரவணன்

வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வெடிவச்சகல்லு, திரிவைச்சகுளம் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக 'அந்தரவெவ' கமக்கார்அமைப்பையும் பதிவுசெய்துவிட்டு உயிர் அச்சுறுத்தலைவிடுப்பதன் ஊடாக மீண்டும் இனப்பிரச்சினையைத் தோற்றிவிப்பதற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கக்கூடாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 29.10.2025நேற்று இடம்பெற்றபோதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் குறித்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் திரிவச்சகுளம் ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக பேசப்பட்ட விடயங்களை விரிவாகப் பார்ப்போம்.

■ வயல்காணிகளைத் துப்பரவுசெய்த தமிழ் மக்கள் கைது; ஒதுக்ககாடு என்பதற்கு ஆதாரமின்மையால் விடுதலைசெய்த நீதிமன்றம்

திரிவைச்சகுளத்தின் கீழான தமது பூர்வீக வயல்நிலங்களைத் துப்பரவுசெய்த எமது தமிழ் மக்களை கடந்த 2020.09.08ஆம் திகதியன்று வனவளத்திணைக்களம் கைது செய்து நீதிமன்றில் அவர்களுக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது.  வனவளத் திணைக்களத்திற்குரிய பகுதியைத் துப்பரவுசெய்தார்களென்ற குற்றச்சாட்டை முன்வைத்தே எமது தமிழ் மக்களுக்கெதிராக இவ்வாறு வனவளத்திணைக்களத்தால் வவுனியா நீதிமன்றில் 4007/F/2020 என்னும் வழக்கிலக்கத்தில் வழக்குத் தொடர்ந்ததாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பகுதி வனவளத்திணைக்களத்திற்குரிய ஒதுக்கக்காட்டுப் பகுதியென்பதற்கு ஆதாரமாக நீதிமன்றில் வனவளத்திணைக்களம் எவ்வித சான்றுகளையும் கையளிக்காதநிலையில், வனவளத் திணைக்களத்தால் குற்றஞ்சுமத்தப்பட்ட எமது தமிழ் மக்களை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கடந்த 2023.10.24அன்று நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியிருந்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

■ நீதிமன்றில் வழக்கு நிலுவையிலிருக்கும்போது பிணக்குக்குரிய பகுதியை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளித்த மகாவலி அதிகாரசபை

அந்தப் பகுதிக்குரிய பெயர் திரிவைச்சகுளமெனவும், அங்கு தமிழ் மக்கள் திரிவச்சகுளம் கமக்கார அமைப்பாக பூர்வீகமாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்ததாகவும், கடந்தந்தகால அசாதாரண சூழ்நிலை காரணமாகவே தமிழ்மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

குறிப்பாக வனவளத்திணைக்களம் வவுனியா நீதிமன்றில் தமிழ் மக்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தபோது தமது பூர்வீக நிலமென்பதை தமிழ் மக்கள் மிகத் தெளிவாக நீதிமன்றிற்கும் கூறியுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார். அந்தவகையில் குறித்த வழக்கின் பிரதி ஒன்றை சபைக்கு காண்பித்துபேசிய நாடாளுமன்ற உறுப்பினர் " எனது அப்பாவின் காணியை நான் துப்பரவுசெய்துகொண்டிருக்க வனவளத்திணைக்களம் என்னைக் கைது செய்தது" என கைதான தமிழ் மக்களில் ஒருவர் நீதிமன்றிற்கு தனது வாக்குமூலத்திணை வழங்கியிருக்கின்றார். என்று தெரிவித்தார்.

இவ்வாறு நீதிமன்றில் தமிழ் மக்களுக்கு எதிராக வனவளத் திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது குறித்த பகுதியை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆக்கிரமித்து கடந்த 2022ஆம் ஆண்டு பெரும்பான்மை இனத்தவர்கள் 10பேருக்கு, 40ஏக்கர் திரிவைச்சகுளம் வயல்காணிகளை ஒருபோகத்திற்கு மாத்திரம் நெற்செய்கை மேற்கொள்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

■ மகாவலியின் ஆளுகையிலுள்ள சட்டவிரோத அந்தரவெவ கமக்கார அமைப்பிற்கு உரமானியத்திற்கு அனுமதி வழங்கிய பிரதேசசெயலாளர்

இதனைத் தொடர்ந்து குறித்த தமிழ் மக்களின் பூர்வீக திரிவைச்சகுளம் பகுதி 'அந்தரவெவ' கமக்கார்அமைப்பாக சட்டவிரோதமாக பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்தோடு மகாவலி அதிகாரசபையின் ஆளுகையிலுள்ள சட்டவிரோத 'அந்தரவெவ' கமக்கார அமைப்பிற்கு உரமானியம் வழங்குவதற்காக வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள கிராம அலுவலர் ஒருவர் அனுமதி வழங்கிக் கையெழுத்திட்டிருந்ததுடன், அப்போது வவுனியா வடக்கில் பிரதேசசெயலாளர் இருந்தபோதும், மேலதிக பிரதேசசெயலாளராக இருந்த தற்போதைய பிரதேசசெயலாளர் அனுமதி வழங்கிக் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மகாவலி அதிகாரசபையின் கட்டுப்பாட்டிலுள்ள சட்டவிரோதமாக பதிவுசெய்யப்பட்ட அந்தரவெவ கமக்கார அமைப்பிற்கு வவுனியா வடக்கு பாரதேசசெயலாளர் பிரிவிலுள்ள கிராமஅலுவலரும், அப்போதைய வவுனியாவடக்கு மேலதிக பிரதேசசெயலாளராக இருந்த தற்போதைய பிரதேசசெயலாளரும் எவ்வாறு உரமானியம் வழங்குவதற்கு எவ்வாறு அனுமதி வழங்கமுடியுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கடுமையாக கேள்வி எழுப்பினார்.

■ மகாவலியின் ஆளுகையிலுள்ள அடர்வனங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பிலும் சுட்டிக்காட்டினார் ரவிகரன் எம்.பி

திருட்டுத்தனமாக எமது மக்களின் காணிகளை அபகரிக்கின்ற ஒரு திருட்டுச்சபையே அதிகாரசபையே மகாவலி அதிகாரசபை என நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது மகாவலி அதிகாரசபையினைக் மிகக்கடுமையாகச் சாடினார்.

இத்தகைய மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் துணையுடன் தற்போது திரிவைச்சகுளம் பகுதியை அண்டியுள்ள இடங்களில் தற்போது பெரும்பான்மை இனத்தவர்கள் பாரிய அடர்வனங்களை அழித்து ஆக்கிரமிப்புச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்மக்கள் ஒரு "மண்வெட்டிப்பிடி" வெட்டியதற்காக நான்கு வருடங்கள் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்ற சம்பவங்கள்கூட இடம்பெற்றிருப்பதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பெரும்பான்மை இனத்தவர்கள் பாரிய அளவில் அடர்வனங்களை அழித்து ஆக்கிரமிப்புச் செயற்பாட்டில் ஈடுபடுகின்றபோது உரிய தரப்பினர் வேடிக்கை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

■ அடர்வனங்களை அழித்தவர்களுக்கெதிராக நடவடிக்கை தேவை; வலியுறுத்திய ரவிகரன் எம்.பி

இவ்வாறு சட்டவிரோதமாக அடர்வனங்களை அழித்தவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டுமென அபிவிருத்திக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்தோடு அங்கு வெட்டப்பட்ட பாரியளவான வீரை, பாலை மரங்கள் எங்கு கொண்டுசென்று விற்பனைசெய்யப்பட்டதென்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுடன், வெட்டப்பட்ட மரங்களுக்குரிய தண்டப்பணத்தினை அறவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

■ ஜனநாயக அரசியலை முன்னெடுத்துள்ள எம்மை வேறு திசைநோக்கி நகர்த்த வேண்டாம்; கடுமையாக எச்சரித்த ரவிகரன் எம்.பி

திரிவைச்சகுளத்தினை அண்டிய பகுதிகளில் சட்டவிரோதமாக அடர்வனங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகச் செயற்படும் தமக்கெதிராக சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடும் பெரும்பான்மை இனத்தவர்கள் உயிர் அச்சுறுத்தல் விடுக்கும்விதமாக கருத்துக்களைத் தெரிவித்துவருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது சுட்டிகாட்டப்பட்டது.

குறிப்பாக "ரவிகரனும், தவபாலனும், தமிழ்ச்செல்வனும் அந்தஇடத்திற்கு வருகைதந்தால் வேறுவிதமாக பெரியஅளவில் எதையும் செய்வோம்" என அங்கு சட்டவிரோத காடழிப்பில் ஈடுபடுபவர் கருத்துத் தெரிவித்துள்ளதாகவும், அவ்வாறு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும்வகையில் கருத்துக்கள் தெவிக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் இவ்வாறு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும்வகையில் கருத்துத் தெரிவிப்பதற்கு முன்பதாக அந்த பெரும்பான்மை இனத்தவர் சற்று சிந்திக்கவேண்டுமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், உயிர்அச்சுறுத்தல் விடுக்கும்வகையில் கருத்துத் தெரிவித்த குறித்த நபர் தன்னைப்பற்றி முறையாக அறிந்திருக்கவில்லை எனத் தாம் நினைப்பதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் தாம் இதுவரை முறைப்பாடு செய்யவில்லையெனவும், எனினும் தவபாலன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முறைப்பாடுசெய்தபோதும் உரியவருக்கு எதிராக பொலிசார் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பில்லை என பலரும் பாராளுமன்றில் கருத்துக்களைக் கூறிக்கொண்டிருப்பதாகவும், பாதுகாப்பினை கோருகின்ற சில உறுப்பினர்களுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுவருவதாகவும், ஆனால் தமக்குவிடுக்கப்படுகின்ற இவ்வாறான உயிர் அச்சுறுத்தல்களைக்கண்டு தாம் அஞ்சவில்லை. முடியுமானால் அவ்வாறானவர்கள் நேரில் வரட்டுமெனவும், தாமும் எதற்கும் தயாராகவே உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஜனநாயக அரசியலை முன்னெடுத்துள்ள தம்மை வேறுதிசைநோக்கி நகர்த்தவேண்டாமெனனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், திரிவைச்சகுளம் பிணக்கின்மூலம் அடுத்த கட்ட இனப்பிரச்சினையைத் தோற்றுவிப்பதற்கு இடமளிக்கவேண்டாமெனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

■ உரமானியத்திற்கான அனுமதி விவகாரம்; மளுப்பிய பிரதேசசெயலாளரை எச்சரித்த ரவிகரன் எம்.பி

திரிவைச்சகுளம் என்னும் பகுதி மகாவலி அதிகாரசபைக்கு உட்பட்ட ஒரு பகுதியெனத் தெரிவித்த வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர், பிரதேசசெயலக ஆளுகைக்குட்பட்ட விடயங்களுக்கே தம்மால் அனுமதி வழங்கமுடியுமெனவுந் தெரிவித்தார். மகாவலி அதிகாரசபைப்பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள கமக்காரஅமைப்பிற்கு தம்மால் அனுமதியை வழங்கமுடியாதெனவுந் தெரிவித்தார்.

இவ்வாறு "அந்தரவெவ" கமக்கார அமைப்பிற்கு தம்மால் உரமானியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் விடயத்தில் தமக்கு பல சந்தேகங்கள் இருப்பதாகவும், எனவே அதுதொடர்பில் தாம் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டுமெனவுந் தெரிவித்தார்.

குறிப்பாக உரமானியத்திற்குரிய அனுமதியென்பது உரிய பகுதிகளுக்குரிய கிராம அலுவலர் ஆராய்ந்து உறுதிப்படுத்தி கையெழுத்திட்ட பின்னரே, கிராம அலுவலரின் உறுதிப்படுத்தலை அடிப்படையாக வைத்தே தம்மாலும் அனுமதிவழங்கப்படுமெனவுந் தெரிவித்தார்.

இதுதவிர குறித்த உரமானியத்திற்கு அனுமதியைப் பெற்றவர்கள் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வேறு ஒரு இடத்திற்கு அனுமதியைப் பெற்றுவிட்டு மகாவலி அதிகாரசபைக்குட்பட்ட அந்தப் பகுதிக்கு எம்மால் உரமானியத்திற்கான அனுமதி வழங்கப்பட்டதாக காண்பித்துக்கொள்ளக்கூடிய நிலமையிருப்பதாகவும் பிரதேசசெயலாளர் தெரிவித்தார்.

அத்தோடு கிராம அலுவலரும் முழுமையாக ஆராயாமல், மகாவலியின் ஆளுகையிலுள்ள பகுதிக்கு உறுதிப்படுத்தி அனுமதியை வழங்கியிருக்கவும் சந்தர்ப்பமிருப்பதாகவும், இந்த அடிப்படையிலேயே தம்மாலும் அந்தரவெவ என்ற கமக்கார அமைப்பிற்கு உரமானியம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கலாமெனவும் மளுப்புகின்ற விதத்தில் கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது இடையிட்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சட்டவிரோதமாக பதிவுசெய்யப்பட்ட ஒரு கமக்கார அமைப்பிற்கு உரமானியத்திற்கு பிரதேசசெயலாளர் கையெழுத்திட்டுவிட்டு இவ்வாறு பொறுப்பற்று கருத்துத் தெரிவிக்கமுடியாதென மிகவும் கடுமையாக எச்சரித்தார்.

மகாவலியின் அளுகையிலுள்ள அந்த கமக்கார அமைப்பிற்கு உரமானியம் வழங்குவதை நிறுத்துவதுடன்,  குறித்த சட்டவிரோத கமக்கார அமைப்பை நீக்குமாறும் தெரிவித்தார்.

இந்நிலையில் அதுதொடர்பான சர்சைக்குரிய ஆவணங்கள் இருப்பின் சமர்பித்தால் தம்மால் உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியுமென பிரதேசசெயலாளர் இதன்போது தெரிவித்தார்.

அந்தவகையில் சமூகசெயற்பாட்டாளர் தவபாலன் இதன்போது மகாவலி அதிகாரசபைக்குட்பட்ட சட்டவிரோதமாக பதிவுசெய்யப்பட்ட அந்தரவெவகமக்கார அமைப்பிற்கு வவுனிய வடக்கு கிராம அலுவலர் மற்றும் பிரதேசசெயலாளர் உரமானியத்திற்கு அனுமதி வழங்கிய ஆவணங்களை இதன்போது பிரதேசசெயலாளரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

■ சிங்களவர்களின் காணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதாக தென்னிலங்கையில் போலிப்பிரச்சாரம்; ஆதங்கப்பட்ட உபாலி

இந்தவிவகாரம் தொடர்பாக போலியான பிரச்சாரங்கள் தமக்கெதிராக தென்னிலங்கைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதாக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் உபாலி சமரசிங்கவினால் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக சிங்கள மக்களுக்குரிய இடங்களை தமிழ் மக்களுக்கு தாம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தென்னிலங்கைப்பகுதிகளில் சமூகவலைத்தலங்களினூடாக போலியான பரப்புரைகள் தமக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் உபாலி சமரசிங்க இதன்போது தெரிவித்தார்

தென்னிலங்கையிலிருக்கின்ற இனவாதத்தையுடைய பௌத்த துறவிகள் வெலிஓயா பகுதிக்கு வருகைதந்துதந்து தேவையற்ற போலியான இனவாதப் பரப்புரைகளை தமக்கெதிராக மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம்தொடர்பிலே ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறிவதற்கான நடவடிக்கையில் தாம் ஈடுபட்டதாகவும் உபாலி சமரசிங்க இதன்போது தெரிவித்தார்.

■ பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி அபகரிப்பு; ஆய்வின்மூலம் அறிந்துகொண்ட உபாலி

அதன்படி பிணக்குக்குரிய பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுடனும், மகாவலி அதிகாரசபையுடனும் தாம் இருதடவைகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க இதன்போது தெரிவித்தார்.

அதன்படி குறித்த பிணக்கிற்குரிய பகுதியில் 40ஏக்கர் காணிகளை, மகாவலி அதிகாரசபை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு ஒருபோகத்திற்கு விவசாயம் மேற்கொள்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ளமை தம்மால் இதன்போது கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தார்.

அத்தோடு இவ்வாறு விவசாய நடவடிக்கைக்கென ஒருபோகத்திற்கு மாத்திரம் 40ஏக்கர் காணிகள் ஒப்பந்த அடிப்படையில் மகாவலி அதிகாரசபையால் வழங்கப்பட்டிருந்தபோதும், பெரும்பான்மை இனத்தவர்கள் அந்த ஒப்பந்த நடமுறைகளை மீறி தொடர்ந்தும் அங்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும், கடந்தகால அரசியல் செல்வாக்குக்களை பயன்படுத்தி பெரும்பான்மை இனத்தவர்களால் மேலதிகமாக 150ஏக்கர்வரையில் காணிகளை்அத்துமீறி அபகரித்துள்ள விடயத்தினையும் தாம் அறிந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

■ அத்துமீறிசெயற்படும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு சட்டநடவடிக்கை

இந்த விடயங்களை அறிந்துகொண்ட பிற்பாடு ஏற்கனவே மகாவலி அதிகாரசபையால் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு ஒருபோகத்திற்கான ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட 40ஏக்கர் காணிகளில் மாத்திரம் இன்னும் ஒருபோகத்திற்கு மாத்திரம் பயிர்செய்கை மேற்கொள்ளமுடியும். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டுமென ஒரு தீர்மானமும் அக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்டதாகவும் உபாலி இதன்போது தெரிவித்தார்.

இருப்பினும் தற்போதும் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக பெரும்பான்மை இனத்தவர்கள் 40ஏக்கருக்கும் மேலதிகமாக தற்போதும் பயிற்செய்கை மேற்கொண்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்ததாகவும், அந்தவகையில் மேலதிகமாக பயிற்செய்கை மேற்கொண்டவர்களுக்கெதிராக உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரியவர்களிடம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

■ மகாவலியின் கிவுல் ஓயா திட்டம் அடுத்த ஆண்டு முன்னெடுகமகப்படும்; உபாலி தகவல்

குறித்த பகுதியில் மகாவலி அதிகாரசபையினால் அடுத்த ஆண்டில் கிவுல் ஓயாத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை தொடர்பிலும் இதன்போது உபாலி சமரசிங்கவினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக வெலிஓயாப் பகுதிக்கு நீர்ப்பாசனத்தினை மேற்கொள்ளும்வகையில் குறித்த பிணக்குக்குரிய பகுதி உள்ளடங்கலான பெரும்பகுதிகளை உள்ளடக்கி கிவுல் ஓயா என்னும் பெயரிலான பாரிய நீர்த்தேக்கம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

குறித்த கிவுல் ஓயாத்திட்டத்தினை அமுல்படுத்தினால் இந்த பிணக்குக்குரிய பகுதி உள்ளிட்ட பெரும் பகுதிகள் நீர்த்தேக்கத்தின் நீரேந்து பிரதேசமாகமாறும் எனவும் தெரிவித்தார்.

■ கிவுல்ஓயாத் திட்டம் தமிழ் மக்களுக்கு பேரிடியாக அமையுமென்கிறார் ரவிகரன் எம்.பி

தமிழர்களின் பூர்வீக மணலாற்றை வெலிஓயாக மாற்றிவிட்டு அங்கு அத்துமீறி குடியேற்றப்பட்டுள்ள பெரும்பான்மை

இனத்தவர்களுக்கு இந்த பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தில் 6000ஏக்கர் நீர்ப்பாசன விவசாயக் காணிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

கிவுல்ஓயா திட்டத்தினைச் செயற்படுத்தினால் வவுனியாவடக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான வயல்நிலங்கள், தமிழர்களின் பூர்வீக்கிராமங்கள் பலவும் நீரில்மூழ்கும் அபாயம் ஏற்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அந்தவகையில் தமிழர்களின் பூர்வீக விவசாயக் குளங்களான இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக்குளங்களும், வெடிவைச்சகல்லு குளத்தின்கீழ்வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம், வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டைக் கிராமம், மருதோடைக்கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்டபகுதிகள்குறித்த கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் நீரேந்துப்பகுதிகளாக மாறும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறாக தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள் மற்றும் குளங்கள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவை விழுங்கப்பட்டே இந்த கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் வெலிஓயாவில் குடியேற்றப்பட்ட சிங்களமக்களுக்காக முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.