எம்.எஸ்.எம். ஸாகிர்
அரசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரங்களை உயிர்ப்பிக்கும் முகமாக வாழ்வாதார உதவிகள் அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு, 7 மில்லியன் பெறுமதியான இந்த செயற்றிட்டத்தில் முதற் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் சங்கங்களுக்கு தையல் உபகரணங்கள் மற்றும் ஏனைய வாழ்வாதாரங்களுக்கான உபகரணங்களோடு காசோலைகளும் நேற்று (01) சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தார்.
அத்துடன் ஐந்து இலட்சம் பெறுமதியான காசோலைகள் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் இருவருக்கு இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் மஹ்ரூப், சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கணக்காளர் சர்தார், உதவி பிரதேச செயலாளர் பாஸித், தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பி. நவாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பயனாளிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.