விஜயரத்தினம் சரவணன்
மன்னார் - பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு உடனடியாக குடிநீர் வசதியை ஏற்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஒருவாரகாலத்திற்குள் குறித் பேசாலை பிரதேசவைத்தியசாலைக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமென மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பதிலளித்துள்ளார்.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 04.11.2025இன்று இடம்பெற்ற போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
பேசாலை பிரதேச வைத்தியசாலையில் குடிநீர் வசதியில்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் வைத்தியர்கள், பணியாளர்கள், நோயாளர்கள் எனப் பலரும் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
கடந்த 14.10.2025அன்று குறித்த பேசாலை வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தேன். குறித்த குடிநீர் திட்டத்திற்கு 150,000ரூபா நிதியே தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அருகிலுள்ள பாடசாலைக்கும் முன்பு குறித்த பேசாலை பிரதேச வைத்தியாசாலையிலிருந்தே குடிநீர் பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது வைத்தியசாலையிலும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக எம்மிடம் முறையிடப்பட்டுள்ளது.
கடந்தகாலத்தில் மாவிலாறு பிரச்சினை ஏற்பட்டதே தண்ணீரால்தான் என்ற வரலாறு இருக்கும்போது, பேசாலை வைத்தியசாலையிலும் குடிநீர் பிரச்சினை பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துவிடுமோ என்ற அச்சநிலையும் காணப்படுகின்றது.
எனவே உரிய தரப்பினர் இதற்குரிய பதிலை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.
இந்நிலையில் உரிய நடவடிக்கைகளை மேற்கெண்டு குறித்த பேசாலை பிரதேசவைத்தியசாலைக்கு ஒருவாரத்திற்குள் குடிநீர் வழங்கப்படுமென மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பதிலளித்தார்.
இத்தகையசூழலில் ஒருவார காலத்திற்குள் பேசாலை வைத்தியசாலைக்குரிய குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்ற சுகாதாரசேவைகள் பணிப்பாளரது கருத்தினை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், எதிர்வரும் ஒருமாதகாலத்திற்கு வரவுசெலவுத்திட்ட பாராளுமன்ற அமர்விற்காக கொழும்பில் தங்கியிருந்தாலும், இது தொடர்பில் தாம் கவனத்துடனே இருப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். எனவே ஒரு வராகாலத்திற்குள் நிச்சயமாக பேசாலை வைத்தியசாலைக்குரிய குடிநீர்வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமெனவுந் தெரிவித்தார்.