முல்லைத்தீவு, ஒதியமலை 41 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட 32 தமிழர்கள் நினைவுகூரப்பட்டனர்

முல்லைத்தீவு, ஒதியமலை 41 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட 32 தமிழர்கள் நினைவுகூரப்பட்டனர்

நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்க ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டு இன்னும் நீதி கிடைக்காத 32 தமிழ் கிராமவாசிகளுக்கான நினைவஞ்சலி நிகழ்வு முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் நடைபெற்றது.

டிசம்பர் 2, 1984 அன்று முல்லைத்தீவில் உள்ள ஒதியமலை கிராம அபிவிருத்தி மண்டபத்திற்கு 32 நிராயுதபாணியான தமிழ் கிராமவாசிகள் வரவழைக்கப்பட்டு அரசாங்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

படுகொலை நடந்த இடத்திற்கு எதிரே கட்டப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் டிசம்பர் 2, 2025 செவ்வாய்க்கிழமை மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கிராமத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடும் இடம்பெற்றது.

தொடர் கொலைகள்

1984 டிசம்பர் தொடக்கத்தில் இருந்து பதினைந்து நாட்களுக்குள் முல்லைத்தீவு-திருகோணமலை மாவட்ட எல்லையில் உள்ள பல தமிழ் கிராமங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் கொலைகளில் ஒதியமலை படுகொலையும் ஒன்றாகும்.

தாக்குதல் நடத்தப்பட்ட மற்ற தமிழ் கிராமங்கள் கோகிலை, தென்னமரவாடி, அமராவயல், கொக்குத்துடுவாய், ஆலம்பில், நாயாறு, குமுளமுனை மற்றும் மணலாறு.

அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எம்.பி.க்கள் இந்தப் படுகொலைகளின் நோக்கம் சிங்களக் குடியேற்றம் என்று சுட்டிக்காட்டினர்.

படுகொலையின் போது இப்பகுதியில் தளபதியாக இருந்தவர் பிரிகேடியர் ஜனக பெரேரா, பின்னர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார்.

தாக்குதலுக்குப் பிறகு நிறுவப்பட்ட சிங்களக் குடியிருப்புகளில் ஒன்று ஜனகபுரா என்று அழைக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பதவிக்கு 2008 அக்டோபரில் போட்டியிட்ட மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா, அனுராதபுரத்தில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பேரணியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி