பூர்வீக காணிகளை சிங்களவர்கள் அபகரிக்க முயற்சி; உரியவர்கள் தடுக்காதுவிட்டால் நாம் களத்தில் இறங்குவோம்

பூர்வீக காணிகளை சிங்களவர்கள் அபகரிக்க முயற்சி; உரியவர்கள் தடுக்காதுவிட்டால் நாம் களத்தில் இறங்குவோம்

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய் 15ஆம் கட்டையில் தமிழ்மக்களின் பூர்வீக காணிகளை, கொக்கிளாய் முகத்துவாரத்தில் அத்துமீறிக் குடியேறியிருக்கும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஆக்கிரமிப்புச்செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுப்பதற்கு கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம் உள்ளிட்ட உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், தாம் களத்தில் இறங்கி அபகரிப்பு முயற்சியை தடுத்து நிறுத்துவேண்டிய நிலை ஏற்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆக்கிரமிப்பு முயற்சிதொடர்பில் நேரடியாகப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாயிலிருந்து தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு எமது தமிழ் மக்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட, 15ஆம் கட்டைப் பகுதியில் சிறுதானியப் பயிற்செய்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இவ்வாறாக எமது தமிழ் மக்கள் இடப்பெயர்விற்கு முன்னர் சிறுதானியப் பயிற்செய்கைக்காகப் பயன்படுத்திய சுமார் நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட அவர்களது பூர்வீக காணிகள், கடந்த 2011ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்குப் பிற்பாடு வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் போன்ற திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லைக்கற்களும் இடப்பட்டுள்ள.

இத்தகைய சூழலில் இவ்வாறு வனவளத்தினைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பிலிருந்த தமது பூர்வீக சிறுதானியப் பயிற்செய்கைக் காணிகளை விடுவிக்குமாறு காணிகளுக்குரிய எமது தமிழ்மக்கள் தொடர்ச்சியாக உரிய தரப்பினரைக் கோரிவந்ததுடன், குறித்த காணி விடுவிப்பினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தற்போது பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர், இவ்வாறு வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் ஆக்கிரமிப்பில் இருக்கும் எமது கொக்குத்தொடுவாய் தமிழ் மக்களுக்குரிய பூர்வீக சிறுதானிய பயிர்ச்செய்கைக்காணிகளை ஆக்கிரமிக்க முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கொக்கிளாய் முகத்துவாரத்தில் தங்கியிருந்து பருவகால மீன்பிடியில் ஈடுபடும்  தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலராலேயே இவ்வாறு ஆக்கிரமிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக எம்மால் அறியமுடிகின்றது.

குறிப்பாக கொக்கிளாயில் பருவகால மீன்பிடியில் ஈடுபடுவோர் தென்னிலங்கையிலிருந்து இங்கு வருகைதந்து உரிய பருவகாலத்தில் மீன்பிடியில் ஈடுபடுவர். பின்னர் பருவாகல மீன்பிடிச் செயற்பாடுகள் முடிவுற்றதும் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.

குறித்த தென்னிலங்கையைச் சேர்ந்த பருவகால மீனவர்கள் தற்போது எமது தமிழ்மக்களுக்குரிய பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து குடியேற முயற்சிக்கின்றனர்.

அந்தவகையில் கொக்கிளாய் - முல்லைத்தீவு பிரதான வீதியின் இருபுறமும் உள்ள, வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களின் பூர்வீக காணிகளுக்கு கயிறு, மற்றும் கம்பிகளை கட்டி அபகரிப்புச்செய்கின்ற செயற்பாடுகளில் குறித்த தென்னிலங்கையைச் சார்ந்த பருவகால மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த்அபகரிப்பு முயற்சிகள் இடம்பெறும்போது கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிமக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இதுதொடர்பில் என்னிடமும் மக்களால் முறையிடப்பட்டிருந்தது. அதற்கமைய குறித்த ஆக்கிரமிப்பு முயற்சிகள் தொடர்பில் நேரடியாக பார்வையிட்டு, இங்கு இடம்பெற்றுள்ள ஆக்கிரமிப்பு முயற்சிகளை உறுதிப்படுத்திக்கொண்டேன்.

இதனையடுத்து இதுதொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணி உத்தியோகத்தருக்கும் இந்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், இவ்வாறு தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமிக்க முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், குறித்த ஆக்கிரமிப்பு முயற்சிகளைத் தடுத்து நிறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளேன்.

இத்தகைய ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளுக்குரிய வடிக்கைகளை கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிப்பகுதி மேற்கொள்வதுடன், குறித்த ஆக்கிரமிப்பு முயற்சியினைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

அவ்வாறு கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிப் பகுதியினர் குறித்த  தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் அபகரிப்பதை தடுக்கத் தவறினால், நாம் களத்தில் இறங்கி அபகரிப்பு முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவோம் - என்றார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி