மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி, பாண்டிச்சேரி தனி, எமக்கு அந்த வேறுபாடும் கிடையாது என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த விஜய்,
“தமிழ்நாடு, புதுச்சேரி வேறுவேறு என பிரித்தாலும் நாமெல்லம் வேறு கிடையாது.. நாமெல்லாம் ஒன்று தான், சொந்தம் தான்.
உலகத்தில் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும் அவர்கள் நம் உயிர் தான். பாச உணர்வு இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை.
மகாகவி பாரதியார் இருந்த மண், பாரதிதாசன் பிறந்தமண் போன்ற சிறப்புகளை பெற்றது புதுச்சேரி.
நமக்காக வந்தவர் எம்.ஜி.ஆர். அவரை இழந்து விடாதீர்கள் என நம்மை எச்சரித்தது புதுச்சேரிதான்.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே புதுச்சேரியில் ஆட்சி அமைத்தார் எம்.ஜி.ஆர்.
இந்த விஜய் தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் குரல் கொடுப்பார் என்று நினைக்காதீர்கள். புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன், இது என் கடமை.
தமிழ்நாடு போலவே புதுச்சேரி மக்களும் 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்துள்ளார்கள்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு மனப்பூர்வ நன்றி. வேறு ஒரு கட்சியின் நிகழ்ச்சிக்கு பாரபட்சம் காட்டவில்லை. இதை பார்த்தாவது திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.