கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, விடுமுறை காலத்தை முன்னிட்டு கனடா மக்களுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறை காலம், மக்கள் தங்களது வாழ்வைப் பின்னோக்கி நினைத்து பார்க்கவும், குடும்பத்தினருடனும் சமூகத்துடனும் நெருக்கத்தை வலுப்படுத்தவும் முக்கியமான தருணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது செய்தியில், “இந்த ஆண்டு கனடா பல சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், கனடியர்கள் ஒருவருக்கொருவர் துணை நின்று, மனிதநேயமும் கருணையும் கொண்ட சமூகமாக தங்களை நிரூபித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு முடிவை முன்னிட்டு, நம்பிக்கை, தியாகம், பரிவு போன்ற மதிப்புகள் அனைவரின் வாழ்விலும் வலுப்பெற வேண்டும் என்றும் பிரதமர் கார்னி வலியுறுத்தினார். ஒளி இருளை வெல்லும் என்ற அடிப்படையில், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்நேரத்தில், அவசர சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடுவோருக்கு பிரதமர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, பிரதமர் மார்க் கார்னி, தமது குடும்பத்தின் சார்பிலும், கனடா முழுவதும் வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மற்றும் அமைதியான விடுமுறை கால வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.