'என்னை கைது செய்ததால் மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை உணர்ந்து கொள்கிறேன்'. என்றும் 'எனது அரசியல் பயணம் தடையின்றி தொடரும்' என்றும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதற்கமைய 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா 2 சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். எவ்வாறாயினும் அவர் வௌிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக அவர் கடந்த மாதம் 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிணையில் வெளியே வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், 'என்னை திடீரென கைது செய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கவலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது' என்றார்.
'இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன். இவ்வேளையில், நாட்டினுடைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோன்று, எனது தரப்பு உண்மைகளை எடுத்துரைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸுக்கும் அவரது குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்' எனத' தெரிவித்தார்.