கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் தற்போது பரவி வரும் இன்புளுவென்சா காய்ச்சல் காரணமாக, முதியோர்கள் பாரிய உடல்நலப் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வயோதிபர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதுடன், இக்காய்ச்சல் முதியோரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தி, அவர்களை ஒரு 'மீள முடியாத சரிவுப் பாதைக்கு' (Downward spiral) தள்ளுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகரித்துள்ள பாதிப்புகள்
டொராண்டோ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் முதியவர்களுக்கு நிமோனியா (Pneumonia) மற்றும் சுவாசச் சிரமங்கள் போன்ற பாரிய பக்கவிளைவுகள் ஏற்படுவதை மருத்துவர்கள் அவதானித்துள்ளனர்.
கனடிய பொது சுகாதார அமைப்பின் (PHAC) தரவுகளின்படி:
டிசம்பர் 20ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், காய்ச்சல் தொற்றுக்குள்ளானவர்களில் 32 வீதமானோர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாவர்.
சன்னிப்ரூக் சுகாதார மையத்தில் (Sunnybrook Health Sciences Centre) அனுமதிக்கப்பட்ட காய்ச்சல் நோயாளிகளில் 72 வீதமானோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதுடன், இவர்களில் 10 வீதமானோர் முதியோர் பராமரிப்பு நிலையங்களைச் சேர்ந்தவர்களாவர்.
'சுயாதீனத்தை இழக்கும் முதியவர்கள்'
இது குறித்து கருத்துத் தெரிவித்த தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ஜெரோம் லீஸ் (Dr. Jerome Leis), "நாட்பட்ட நோய்களுடன் சுயாதீனமாகத் தமது வேலைகளைச் செய்துவந்த முதியவர்கள், இந்தக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தமது சுயாதீனத்தை முற்றாக இழந்து பிறரில் தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இது மிகவும் வருத்தத்திற்குரியது" எனக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு பரவி வரும் H3N2 எனும் புதிய வகை வைரஸ் திரிபு, தடுப்பூசிகளுக்கு சவாலாக அமைந்த போதிலும், தடுப்பூசி போடுவதன் மூலம் பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.