பாலநாதன் சதீசன்
நாயாறு தொடங்கி எல்லா கரையோரங்களிலும் சுருக்குவலை, லைற்கோஸ், டைனமிட் தொழில்களையும் ஒட்டுமொத்தமாக நிறுத்தினால் எம் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த கூடியதாக இருக்கும் என முள்ளிவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் சிவனேஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் இன்றையதினம் (11.01.2026) காலை 11.45 மணியளவில் ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதிகளில் கரைவலை மெசின் தொடர்பான பிரச்சினை உள்ளது. அந்தவகையில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தினை பொறுத்த வரை 9 கரைவலை மெசின்கள் தென்னிலங்கையினர் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
அந்தவகையில் கரைவலை மெசின் செயற்பாட்டை இலங்கை பூராகவும் நிறுத்த வேண்டும். முள்ளிவாய்கால் மேற்கு கிராமத்தினை பொறுத்தவரை கரைவலை செயற்பாட்டில் ஈடுபடும் மெசினை நிறுத்தாவிடில் முள்ளிவாய்க்கால் மேற்கு வளர்மதி சங்கம் சார்ந்தவர்களும், கிராம மக்களும் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.
அநதவகையில் அரசாங்கம் இதற்கான ஒரு தீர்வினை வழங்கவேண்டும்.
கடந்த 15 வருடமாக இந்திய இழுவை மடி படகு வந்து எம் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் மீன், றால், முட்டையிடும் பகுதியில் மண்ணுக்கு கீழால் ஈயத்தினை இழுத்து மீன், றாலினை கரைக்கும் கொடூரச் செயலில் இந்திய படகுகள் செயற்படுகின்றார்கள். உண்மையில் இந்திய, இலங்கை அரசாங்கம் கலந்துரையாடி இந்திய இழுவை படகுகளை நிறுத்தி எமக்கு ஒத்தாசை வழங்க வேண்டும்.
நாயாறு தொடங்கி எல்லா கரையோரங்களிலும் சுருக்குவலை, லைற்கோஸ், டைனமிட் தொழில்களையும் ஒட்டுமொத்தமாக நிறுத்தினால் எம் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த கூடியதாக இருக்கும்.
மழைகாலமான மூன்றுமாத காலம் , அயல் மாநில அச்சுறுத்தலும் இருக்கின்ற போது மீனவர்கள் கடலிற்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்குவார்கள். இந்தநேரத்தில் அரசாங்கம் நிவாரணமும், மீனவர்களுக்குரிய ஓய்வூதியத்தினையும் வழங்க வேண்டும். இதனை எம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கதைத்து எமக்கு வருடா வருடம் நிவாரணம் வழங்க நடைமுறைப்படுத்த வேண்டும்.
2024 ம் ஆண்டு யூன் மாதம் சீனாவினால் டக்ளஸ் ஐயா அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பொருத்து வீடுகள் வழங்கப்பட்டது. அந்த பொருத்து வீடுகள் வழங்கப்படாமல் அது தற்போது காற்றில் பறக்கும் நிலையில் இருக்கின்றது. அதற்கு பொறுப்பான திணைக்களங்கள் ஆய்வுகளை செய்து அந்தந்த சங்கங்களுக்கு இஞ்சின் வலைகளை பாதுகாப்பாக வைக்ககூடிய வகையிலாவது பொருத்து வீடுகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
நீண்ட காலமாக சாலை, இரட்டைவாய்க்கால், நந்திக்கடல் சேறு எடுப்பது தொடர்பாக ஒவ்வொரு கூட்டத்திலும் கதைக்கப்படுகின்றது. நந்திக்கடல் உண்மையில் சிறந்த வளம் கொண்டது ஆனால் சேறு கூடுதலாக இருப்பதால் இறால், மீன் உற்பத்தி குறைவு. இந்த அரசாங்கம் நல்ல செயல்களை செய்யும் போது இந்த நான்கு வருட ஆட்சிக்குள் சாலை, இரட்டைவாய்க்கால், நந்திக்கடல், சிறுகடலை ஆழப்படுத்தி சேறுகளை அள்ளி எமது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.
யுத்தத்திற்கு பின்னரான கால பகுதியில் பழுதடைந்த, பாவனையில் உள்ள படகுகள் சமாசத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்ட படகுகளை ஏலத்தில் விடுமாறு அல்லது சங்கங்களுக்கு கையளிக்குமாறு ஒவ்வொரு கூட்டங்களிலும் கூறும்போது மீன்பிடி திணைக்களத்தினால் வழங்கப்படும் பதிவிலக்கம் தேவை சமாசத்தினர் என கூறுகின்றார்கள். இவ்வாறான பிரச்சினைகளை சீர் செய்து வழிவகை செய்யு வேண்டும் என கேட்டு நிற்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.