அதிகாரிகளின் 'அலட்சியத்தால்' சிறையில் மற்றொரு தமிழர் மரணம்

அதிகாரிகளின் 'அலட்சியத்தால்' சிறையில் மற்றொரு தமிழர் மரணம்

தடுத்து வைக்கப்பட்ட நிலையில் இறந்த ஒருவரின் குடும்பத்தினர், அதிகாரிகளின் அலட்சியப் போக்கே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சபாரத்தினம் நகுலேஸ்வரனின் உறவினர்கள், சிறை அதிகாரிகள் மற்றும் வைத்தியர்களின் பொறுப்பற்ற செயல்களே அவரது மரணத்திற்குக் காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

வலது காலில் கருப்பு நிறத்தில் காயம் காணப்பட்டதாக, நீதவான் ஆர்.ஜி. பியதாசவுக்கு அனுப்பிய மரண பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மேலதிக விசேட சட்ட வைத்திய அதிகாரி, சதாசிவம் ரவீந்திரன், "சிறைச்சாலை வைத்தியசாலையில் உடனடி மற்றும் சரியான பராமரிப்பு வழங்கப்படவில்லை என அவரது உறவினர்கள் முறையிடுவதாக கூறுகின்றனர்" எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதால், 59 வயதான சபாரத்தினம் நகுலேஸ்வரன், டிசம்பர் 10, 2025 அன்று குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 11, 2025 அன்று அவர் கொழும்பு  நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நீதிபதி அவரை ஜனவரி 9, 2026 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

நீரிழிவு நோயாளியான சபாரத்தினம் நகுலேஸ்வரன், காவலில் வைக்கப்பட்ட நாளிலிருந்து டிசம்பர் 20 வரை ஒவ்வொரு நாளும் குடும்ப உறுப்பினர்கள் அவரை சிறைக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

டிசம்பர் 26 அன்று அவரை சந்திக்க சிறைக்குச் சென்றபோது, சபாரத்தினம் நகுலேஸ்வரன் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு அவரது கால்களில் காயங்கள் காணப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நீரிழிவு நோயாளியான தங்கள் உறவினர் வைத்திய ஆலோசனைக்கு அமைய தொடர்ந்து பாதணியை (சப்பாத்து) அணிந்திருந்தார் எனவும், சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அவருக்கு இறப்பர் செருப்புகள் வழங்கப்பட்டதாகவும், அது அவரது காலில் காயங்களை ஏற்படுத்தியதாகவும், அதன் விளைவாக அவர் இறந்திருக்கலாம் எனவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

கடந்த வருடம் டிசம்பர் 27- 29 இடைப்பட்ட ஒரு நாளில், சபாரத்தினம் நகுலேஸ்வரன் இறந்ததாக சிறை அதிகாரிகள் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளதோடுடு குடும்பத்தினர் டிசம்பர் 30, 2025 அன்று உடலைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

சபாரத்தினம் நகுலேஸ்வரனின் குடும்ப உறவினர் ஒருவர், அவரது உறவினரின் மரணம் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால், பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகக் கூறினார்.

"அவரை வேறு வைத்தியசாலைக்கு மாற்றியிருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கலாம். இது உண்மையில் வைத்தியர்கள் மற்றும் சிறைச்சாலையின் அலட்சியமாகும். இது அராஜகம். இதில் யார் குற்றவாளிகள் என எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்களால் உயிரைக் கொடுக்க முடியுமா? அந்த பிள்ளைக்கு ஒரு தந்தையைக் கொடுக்க முடியுமா? அவர் இழந்த கணவனை அவர் தனது மனைவிக்குக் கொடுக்க முடியுமா?"

சபாரத்தினம் நகுலேஸ்வரனின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் 30, 2025 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி