இலங்கையில் யுத்த காலத்தில் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக மோசமாக இழைக்கப்பட்ட கொடூரக் குற்றங்கள் தொடர்பில் எந்த சட்ட நடவடிக்கைகளும் உரிய முறையில் எடுக்கப்படவேயில்லை.
படைத்தரப்பும் பொலிஸும் இந்தக் கொடூரங்களைப் புரிந்தன என்று கருதப்படும் நிலையில், ஊடக தரப்புக்கு எதிரான இத்தகைய எந்தக் கொடூரங்கள் தொடர்பிலும் பொறுப்புக் கூறல் நடைமுறைப்படுத்தப்படவில்லை. நீதி நிலைநாட்டப்படவில்லை. உண்மை கண்டறியப்படவில்லை. குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேயில்லை.
ஊடகத் தரப்புகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகள் என்ற சாரப்பட பௌத்த - சிங்கள பேரினவாத அரசுத் தலைமைகளினால் உத்தியோகப் பற்றற்ற முறையில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது இதற்குக் காரணம் என்பது துலாம்பரமானது.
இந்தச் சமயத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு இலங்கை ஜனாதிபதி பதவி உயர்வு அளித்தமைக்கு ஆர்வலர்களும் ஊடக சுதந்திரக் குழுவினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இது தொடர்பில் எழுதிய கடிதத்தில், பத்திரிகையாளரின் மனைவி சந்தியா எக்னெலிகொட, சந்தேகநபரான லெப்டினன்ட் கேணல் எரந்த ரதீஷ் பீரிஸ் பிரிகேடியர் பதவிக்கு உயர்த்தப்பட்டார் என ஊடக அறிக்கைகள் மூலம் தாம் அறிந்ததார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதவியுயர்வு வழங்கலுக்கு அவர் கடும் வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார். தனது கணவர் 2010
ஜனவரியில் காணாமல்போனமை தொடர்பக நடந்து வரும் குற்றவியல் வழக்கில் பீரிஸ் ஒரு பிரதிவாதி என்று
அவர் கூறினார்.
இந்த வழக்குத் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பல இராணுவப் புலனாய்வு அதிகாரிகளில் லெப்டினன்ட் கேணல் பீரிஸ் ஒருவர். கடிதத்தின்படி, சட்டமா அதிபர் 2019ஆம் ஆண்டில் அவருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு உட்பட 17 குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்தார்.
சி.ஐ.டி. விசாரணை அவர் கடத்தலில் நேரடியாக ஈடுபட்டார் என அடையாளம் கண்டுள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஓர் அதிகாரிக்கு பதவி உயர்வு அளிப்பது நீதித்துறை செயல்முறையை சமரசம் செய்யும் என்று சந்தியா எக்னெலிகொட எச்சரித்தார்.
'கடுமையான குற்றங்களில் குற்றம்சாட்டப்பட்ட ஓர் அதிகாரிக்கு இவ்வளவு மூத்த பதவியை வழங்குவதன் மூலம், சாட்சிகள் மீது செல்வாக்குச் செலுத்துவதற்கும், விசாரணை அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதற்கும், நீதித்துறை செயல்முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும் கடுமையான ஆபத்து உள்ளது' என்று அவர் எழுதியுள்ளார்.
எக்னெலிகொட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி ஒருவர், ஒரு முக்கிய சாட்சியை அச்சுறுத்தினார் எனக் கூறப்படும் மற்றொரு வழக்கையும் அவர் குறிப்பிட்டார். சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் பத்திரிகைச் சுதந்திரம் தொடர்பான ஆதரவாளர்கள் இந்தப் பதவி உயர்வு வழங்கலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது, வலிந்து காணாமல்போகச் செய்தமைக்கான விவகாரங்களில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவது தொடர்பில் பொது மக்களின் நம்பிக்கையைச் சேதப்படுத்துவதாகவும், சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அது முற்றிலும் உண்மை.