சீனாவுடனான கனடாவின் புதிய மின்சார வாகன (EV) ஒப்பந்தம் குறித்து ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சீன உற்பத்தியாளர்கள் கனடாவின் வாகனச் சந்தையில் காலூன்றுவது, இந்நாட்டுத் தொழிலாளர்களின் நலனைப் பாதிக்கும் என அவர் வெள்ளிக்கிழமை எச்சரித்தார்.
ஒப்பந்தம் குறித்த செய்தி வெளியான சில நேரங்களிலேயே போர்ட் விடுத்த அறிக்கையில், "கனடாவின் பொருளாதாரம், வாகனத் துறை அல்லது விநியோகச் சங்கிலியில் முறையான முதலீட்டு உத்தரவாதங்கள் ஏதுமின்றி, சீனாவில் தயாரிக்கப்பட்ட மலிவான மின்சார வாகனங்களை நாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு வழிவகுக்கிறது" எனக் குறிப்பிட்டார்.
"இதைவிட மோசமான விடயம் என்னவென்றால், சீன மின்சார வாகனங்களுக்கான சுங்க வரிகளைக் குறைப்பதன் மூலம், இந்த ஒருதலைப்பட்சமான ஒப்பந்தம் கனடிய வாகன உற்பத்தியாளர்கள் எமது மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையான அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. இது எமது பொருளாதாரத்தைப் பாதிப்பதுடன் வேலைவாய்ப்பு இழப்புகளுக்கும் வழிவகுக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
கனடியப் பிரதமர் மார்க் கார்னி, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இந்த வாரம் எட்டியுள்ள இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
ஒப்பந்தத்தின் விபரங்கள்:
கனோலா ஏற்றுமதி: மார்ச் மாதத்திற்குள் கனடிய கனோலா மீதான சுங்க வரியை 15 சதவீதமாகக் குறைக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் லொப்ஸ்டர், நண்டு மற்றும் பட்டாணி போன்றவற்றிற்கான வரிகளையும் சீனா தற்காலிகமாக நீக்கியுள்ளது.
மின்சார வாகனங்கள்: இதற்குப் பகரமாக, கனடா ஆண்டுக்கு 49,000 சீன மின்சார வாகனங்களை 6.1 சதவீத குறைந்த சுங்க வரியில் சந்தைக்குள் அனுமதிக்கும். இது கனடாவின் மொத்த வாகனச் சந்தையில் 3 சதவீதத்திற்கும் குறைவானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டக் போர்ட்டின் கோரிக்கைகள்: இந்த "குழப்பமான நிலையை" சரிசெய்ய, மத்திய அரசு ஒன்டாரியோவின் வாகனத் துறைக்கு அவசரமாக ஆதரவளிக்க வேண்டும் என போர்ட் வலியுறுத்தினார். மின்சார வாகன விற்பனை கட்டாயத்தை (EV mandate) இரத்து செய்யவும், வர்த்தகப் பங்காளிகளுடன் விதிமுறைகளை ஒருங்கிணைக்கவும் அவர் பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.
"சீனத் தயாரிப்பு வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, பிராம்ப்டன் (Brampton), ஒஷாவா (Oshawa), இங்கர்சோல் (Ingersoll) ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு முதலீடுகளையும் வேலைகளையும் கொண்டு வருவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்," என போர்ட் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது இந்த ஒப்பந்தம் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும், இது முன்கூட்டியே ஆலோசிக்கப்படாமல் எடுக்கப்பட்ட ஒரு "திடீர் முடிவு" (knee-jerk reaction) என்றும் அவர் விமர்சித்தார்.