'2022இல் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியமை நியாயமற்றது!'

'2022இல் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியமை நியாயமற்றது!'

தேசிய தலைநகர் மற்றும் முக்கிய எல்லைப் புள்ளிகளில் இடம்பெற்ற போராட்டங்களை அடக்குவதற்காக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லிபரல் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை (Emergencies Act) பயன்படுத்தியமை நியாயமற்றது என்று கூட்டாட்சி மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்தத் தீர்ப்பு, 2024ஆம் ஆண்டு கூட்டாட்சி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. அந்தத் தீர்ப்பில், அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியமை நிராகரிக்கப்பட்டதுடன், அவ்வாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தியமை அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக அமைந்திருந்தது கண்டறியப்பட்டது.

கனடா முழுவதும் நடந்த நிகழ்வுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றோ அல்லது தேசிய அவசரநிலை என்றோ அறிவிப்பதற்கு அரசாங்கத்திடம் போதிய அடிப்படை ஆதாரங்கள் இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவது அவசியமாகும்.

2022ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சுமார் மூன்று வாரங்களாக, ஒட்டாவா நகரின் மத்திய பகுதி போராட்டக்காரர்களால் நிறைந்திருந்தது. நாடாளுமன்றக் குன்றைச் சுற்றியுள்ள வீதிகளை பாரிய லொறிகள் (Trucks) மறித்து நின்றன. அமைதியான நகரமாக இருந்த ஒட்டாவா, ஒலிப்பான்களின் சத்தம், டீசல் புகை, தற்காலிக முகாம்கள் மற்றும் போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளால் ஸ்தம்பித்தது.

தீவிர வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய சிலர் உட்பட இந்த மக்களின் வருகையினால், பல வணிகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. அத்துடன் சத்தம், மாசு மற்றும் தொந்தரவான நடத்தைகளால் குடியிருப்பாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஒட்டாவா பொலிஸார் சட்டத்தை நிலைநாட்டத் தவறியமை பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

பலர் COVID-19 சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராடிய போதிலும், அன்றைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு குறைகளைக் கொண்டவர்களும் இந்தப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டனர். லொறிகள் வின்ட்சர் (Windsor, Ont.) மற்றும் கூட்ஸ் (Coutts, Alta.) உள்ளிட்ட அமெரிக்காவுக்கான முக்கிய எல்லைக் கடவைகளையும் மறித்தன.

2022 பெப்ரவரி 14 அன்று, அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியது. இது பொதுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தடை செய்தல், பாதுகாப்பான இடங்களை அறிவித்தல், வங்கிக் கணக்குகளை முடக்குதல் போன்ற தற்காலிக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்தது. 1988 இல் போர்க்கால நடவடிக்கைச் சட்டத்திற்குப் (War Measures Act) பதிலாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு, அது பயன்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பொது ஒழுங்கு அவசரகால ஆணைக்குழு (Public Order Emergency Commission) நடத்திய ஆய்வில், கூட்டாட்சி அரசாங்கம் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான உயர் சட்டத் தரத்தைப் பூர்த்தி செய்துள்ளதாக முடிவெடுத்தது.

கனடிய சிவில் உரிமைகள் சங்கம் (CCLA) மற்றும் பல அமைப்புகள், அவசரகால நடவடிக்கைகளை எடுக்க ஒட்டாவாவிடம் சரியான சட்ட ரீதியான காரணங்கள் இல்லை என்று வாதிட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரிச்சர்ட் மோஸ்லி, அரசாங்கத்தின் முடிவு நியாயமானது என்பதற்குரிய பண்புகளைக் கொண்டிருக்கவில்லை என்றும், உண்மையான மற்றும் சட்ட ரீதியான கட்டுப்பாடுகளுக்கு அது ஒத்துப்போகவில்லை என்றும் கடந்த 2024 ஜனவரியில் தீர்ப்பளித்தார்.

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தும் அளவுக்கு அங்கு எந்தத் தேசிய அவசரநிலையும் இருக்கவில்லை என மோஸ்லி குறிப்பிட்டார். மேலும், வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு முன்னர் முறையான தரநிலைகள் பின்பற்றப்படாதது, நியாயமற்ற தேடுதல் மற்றும் கைப்பற்றலுக்கு எதிரான அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகும் என்றும் அவர் கூறினார்.

மூன்று நீதிபதிகள் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றக் குழு, 'சுதந்திர ஊர்வலம்' (Freedom Convoy) போராட்டங்கள் தொந்தரவாக இருந்தபோதிலும், அவை "தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை" என்று கூறியுள்ளது. கனடிய பாதுகாப்பு புலனாய்வுச் சேவையின் (CSIS) மதிப்பீடும் இதனையே உறுதிப்படுத்தியிருந்தது.

அரசாங்கம் சட்ட ரீதியான அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டுள்ளதாக நீதிபதிகள் முடிவெடுத்தனர்.

இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre), "லிபரல் அரசாங்கம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை மீறும் போது தோல்வியடைகிறது. ஒரு பழமைவாத (Conservative) அரசாங்கம், அரசியல் எதிர்ப்பாளர்களை மௌனமாக்க இந்த அவசரகாலச் சட்டம் இனி ஒருபோதும் பயன்படுத்தப்படமாட்டாது என்பதை உறுதி செய்யும்" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சிவில் உரிமைகள் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹவார்ட் சேப்பர்ஸ் கூறுகையில், இந்தத் தீர்ப்பு எதிர்காலத்தில் அரசாங்கங்கள் இத்தகைய சட்டங்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு வழிகாட்டியாகவும் கட்டுப்பாடாகவும் அமையும் என்றார்.

இந்த விவகாரத்தை கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியின் ஊடகப் பேச்சாளர் சைமன் லஃபார்ச்சூன், தீர்ப்பை ஆய்வு செய்து வருவதாகவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.