கடந்த வருடமும் பதிவான 'தமிழர்களுக்கு எதிரான இராணுவ பாலியல் வன்முறையை' வெளிப்படுத்தும் ஐ.நா. அறிக்கை!

கடந்த வருடமும் பதிவான 'தமிழர்களுக்கு எதிரான இராணுவ பாலியல் வன்முறையை' வெளிப்படுத்தும் ஐ.நா. அறிக்கை!

யுத்தம் நிலவிய காலப்பகுதி முழுவதும் தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக இலங்கை ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்பட்ட பாலியல் வன்முறைகள் அண்மைக்காலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் மோதல்கள் தொடர்பான பாலியல் வன்முறைகள் தொடர்பிலான வகைக்கூறல் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்களைக் கொண்ட புதிய அறிக்கைக்கு அமைய, அவர்கள் நம்பகத்தன்மையுடன் மதிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளில் சில 2024 ஜனவரி போன்ற அண்மைக்காலத்தைச் சேர்ந்தவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எமக்கு எல்லாவற்றுடன் சேர்த்து நீதிக்கான எதிர்பார்ப்பும் அற்றுப்போய்விட்டது” எனும் தலைப்பிலான இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்காக அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாதிக்கப்பட்ட, 23 பெண்கள் உள்ளிட்ட 27 நபர்களுடன் முன்னெடுக்கப்பட்ட தொலைதூரக் கலந்தாய்வுகள் மற்றும் நம்பகமான வெளியக மூலச்சான்றுகளை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய, பால்நிலை குறித்த விழிப்புணர்வுடன் கூடிய ஓர் அணுகுமுறையை பயன்படுத்தியதாகத் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“இலங்கை பாதுகாப்புப் பிரிவினரால் பிரதானமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கடத்தல்கள், தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள், சித்திரவதைகள், மோசமான நடத்தைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் குறித்த அண்மைக்காலக் குற்றச்சாட்டுகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் பரிசீலித்தது. இக்குற்றச்சாட்டுகள் 2024 ஜனவரி போன்ற அண்மைக்காலம் வரையானவை ஆகும்” என சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்ட 30 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட அருவருக்கத்தக்க பாலியல் சித்திரவதைகள் குறித்த விபரங்களை பாதிக்கப்பட்டவர்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் வழங்கியுள்ளனர்.

“சித்திரவதைகளைப் புரிய பல்வேறு முறைகள் மற்றும் கொடூரமான, அநாகரீகமான அல்லது இழிவான நடத்தைகளைப் பயன்படுத்தும் பாதுகாப்புப் படையினர் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் மிக நம்பகத்தன்மையுடன் மதிப்பிட்டுள்ளது. தகவல் வழங்கியவர்களில் பெரும்பான்மையானவர்கள் விசாரணைகளின் போது அல்லது சிறைக்கூடங்களுக்குள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை, விரைகள் நசுக்கப்படுதல், பலவந்தமாக நிர்வாணப்படுத்துதல், மார்பகங்களைக் கடித்தல் உள்ளிட்ட பாலியல் சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.”

பதினேழு வருடங்கள் கடந்த பின்பும் கிடைக்காத நீதியை உள்நாட்டில் பெற்றுக்கொள்வதில் எவ்வித நம்பிக்கையுமற்ற நிலையில் உள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், நீதிமன்றத்தை ‘குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஒரு பொறிமுறை’ என்றே அடையாளப்படுத்தியுள்ளனர்.

“பாதிக்கப்பட்டவர்கள், தேசிய மற்றும் சர்வதேச நீதித்துறை அமைப்புகள் மீதான தமது ஆழமான அவநம்பிக்கையை உறுதிபடத் தெரிவித்தனர். நீதிமன்றமானது அநேகமானோரால் நீதிக்கான ஒரு வழியாகப் பார்க்கப்படாமல், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஒரு பொறிமுறையாகவே பார்க்கப்பட்டது. பல வருடங்களாக தேங்கிக் கிடக்கும் அல்லது தோல்வியடைந்த வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டவர்களை மனரீதியாக சோர்வடையச் செய்தும் ஆத்திரமூட்டியும் உள்ளதோடு, பொறுப்புக்கூறல் என்பது எக்காலத்திலும் எட்ட முடியாத ஒன்று என்ற உணர்வை வலுப்படுத்தியுள்ளது.”

பாலியல் வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட நிறுவனங்களால் இலங்கைக்கு மீண்டும் மீண்டும் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றும் வாக்குறுதிகள் ‘இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமல் எஞ்சியுள்ளன’ என்பதை நினைவுபடுத்தும் இந்த அறிக்கை, இம்முறையும் அரசாங்கத்துக்கு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

“அரசாங்கத்தின் ஆயுதப் படைகள் மற்றும் ஏனையோரால் இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைகளை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக உத்தியோகபூர்வ மன்னிப்புக் கோரலை வெளியிட வேண்டும். அத்துடன், பாதுகாப்புப் பிரிவுகள், நீதித்துறை மற்றும் சட்டக் கட்டமைப்புகளை உள்ளடக்கிய வகையில் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவும், சுயாதீன அரச சட்டத்தரணிகள் அலுவலகத்தை நிறுவவும், உளவியல் மற்றும் சமூக ரீதியான உதவிகளுக்கான அணுகலை உறுதிப்படுத்தவும், ஐக்கிய நாடுகள் சபை முன்னதாக முன்வைத்த யோசனைகளின் கீழ் வழங்கப்பட்ட வாக்குறுதிகளைச் செயற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

அரசாங்கம் குற்றவாளிகளுக்கு எதிராக உள்நாட்டில் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், நாட்டுக்கு வெளியே சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

“தேசிய அதிகார அமைப்புகள் செயலாற்றத் தவறும் பட்சத்தில், பொருத்தமான முறையில் உலகளாவிய மற்றும் தேச எல்லை தாண்டி அதிகார வரம்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் வகைக்கூறல் தொடர்பான முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக குற்றவாளிகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதிக்கவும், அமைதி காக்கும் பணிகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகளுக்காகக் கருத்திற்கொள்ளப்படும் நபர்களை ஆழமான கண்காணிப்புக்கு உட்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் நிலையான ஆதரவை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தினால் கலந்தாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பாதிப்புக்கு உள்ளான தமிழர்கள், அவர்களுக்கு இழைக்கப்பட்ட பயங்கரமான பாலியல் வன்முறைகள் குறித்த விபரங்கள் அடங்கிய “நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் - நீதிக்கான எதிர்பார்ப்பும் கூட” எனும் அறிக்கையின் தமிழ் மொழிப் பதிப்பு இதோ:

https://www.ohchr.org/sites/default/files/documents/hrbodies/hrcouncil/sri-lanka/2026-crsv-brief-tamil.pdf

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி