எண்பதுகளின் பின்னரான காலப்பகுதியில் மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் போது படுகொலை செய்யப்பட்டு மற்றும் உயிரிழந்த தலைவர்களின் எழுதப்பட்ட வரலாற்றையும், அவர்களின் போராட்டங்களையும் ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியத்தை, அந்த மக்களின் உரிமைகளுக்காக செயற்படும் அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
"நம்மிடையே ஆய்வாளர்கள் மற்றும் கற்றறிந்தவர்கள் உள்ளனர். 1980களில் இருந்து நாம் எத்தனை பேரை இழந்திருக்கிறோம்? அவர்கள் பங்கேற்ற போராட்டம் என்ன? அந்த இடைவெளியை நிரப்ப வேண்டியதன் அவசியத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்."
பிரித்தானிய ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டத்தில் இறந்த முதல் மலையகத் தமிழ் வீரராகக் (தியாகி) கருதப்படும் முல்லோயா கோவிந்தனின் 86ஆவது நினைவு தினத்தன்று இடம்பெற்ற 'மலையக தியாகிககள்' தின நிகழ்வில் பங்கேற்ற மலையக அரசியல் அரங்கத்தின் தலைவர் மயில்வாகனம் திலகராஜ் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
ஜனவரி 10, 1940 அன்று, ஹேவாஹெட்டயில் உள்ள முல்லோயா தோட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களின் ஊதியப் போராட்டத்திற்காகப் போராடும் போது, பொலிஸ் சார்ஜன்ட் சுரவீரவின் துப்பாக்கி குண்டு கோவிந்தனின் உயிரைப் பறித்தது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்து, மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்த ஜனவரி 10 ஆம் திகதியை, மலையக தியாகிகள் தினமாக நினைவுகூறுவதற்கு கடந்த 2019 டிசம்பர் 15ஆம் திகதி தலவாக்கலை, டெவோன் தோட்டத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
1940 ஜனவரி 10ஆம் திகதி முல்லோயா தோட்டத்தில் கோவிந்தனின் உயிர் பறிக்கப்பட்ட நாளில் இருந்து, 1980ஆம் ஆண்டில் துரித மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் காரணமாக கண்டி, பல்லேகலையில், தோட்டக் காணி பறிபோவதை தடுப்பதற்கான போராட்டத்தில் முன்னின்ற பழனிவேல் கொல்லப்பட்டது வரை சுமார், 36 தொழிலாளர் தலைவர்களின் பெயர்கள் மற்றும் போராட்டங்கள் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் அதன் பின்னரான வரலாறு ஆவணப்படுத்தப்படவில்லை.
மலையக மக்களின் காணி உரிமைக்காக குரல் கொடுக்க இதுவே சரியான தருணமென, மலையகத் தமிழ் மக்களுக்காக போராடி உயிரிழந்தவர்களை நினைவுகூறும் மலையக தியாகிகள் தின நிகழ்வில் பங்கேற்ற சுயாதீன ஊடகவியலாளர் இராமச்சந்திரன் சனத் வலியுறுத்தினார்.
"சமூக விடுதலையைப் பொறுத்தவரை காணி உரிமை மிக முக்கியமானது. மலையக மக்களின் காணி உரிமைக்கு குரல் கொடுக்க இதுவே சரியான நேரம்."
அட்டன், கொட்டகலை கொமர்சல் லேக் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வை, பிடி தளராதே அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.