'பாடப் புத்தகத்தில் மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள்; இனவாதமில்லாத அரசு எனில் மீண்டும் இணைக்க வேண்டும்!'

'பாடப் புத்தகத்தில் மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள்; இனவாதமில்லாத அரசு எனில் மீண்டும் இணைக்க வேண்டும்!'

கல்வி சீர்திருத்தம் முக்கியமாகக் கருதப்படுகின்ற போதிலும், சமூகக்கல்வி பாட புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

களுவாஞ்சிக்குடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலே ஏதோவொரு நம்பிக்கையின் அடிப்படையில் மறைந்த எமது தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அடுத்த பொங்கலுக்கிடையில் தீர்வு கிடைக்கும், அடுத்த தீபாவளிக்கிடையில் தீர்வு கிடைக்கும் என்றெல்லாம் சொல்லக்கூடிய விதத்திலே தமிழர்களின் அரசியல் நிலவரம் இருந்தது.

பலர் அது தொடர்பில் பல விமர்சனங்களை முன்வைத்தார்கள், பகிடியாக பேசினார்கள். இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய விடயம் என்னவெனில் எமது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் நிரந்தரமான கௌரவமானதொரு அரசியல் தீர்வு தமிழர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அந்தக் காலத்தில் அரசியலில் ஈடுபட்டார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு பாராளுமன்றம் ஒரு அரசியற்பேரவையாக மாற்றப்பட்டு அரசியல் அமைப்பினுடைய ஒரு வரைவு வேலை ஆரம்பிக்கப்பட்டு இடைக்கால வரைவொன்று உருவாகி அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இப்படியாக பல முன்னேற்றங்கள் நடந்தன.

அரசியல்கைதிகள் விடுவிக்கப்பட்டனர், எமது காணிகள் விடுவிக்கப்பட்டன, காணாமல் ஆக்கப்பட்டோர் பொறுப்புக் கூறல் விடயத்தில் நாங்கள் முழுமையாக இணங்காவிட்டாலும் அரசாங்கம் ஏதாவது செயற்பாடுகளை முன்னெடுத்தது. அந்த அடிப்படையில் 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில் சம்பந்தன் ஐயா தீபாவளிக்கு தீர்வு வரும், பொங்கலுக்குத் தீர்வு வரும் எனக்கூறியது தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கை தரக்கூடிய வகையில் செயற்பாடுகள் இருந்தது.

நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாகவோ எதிராகவோ கருத்து வெளியிடுவது எமது மக்களுக்காகவே தவிர எங்களுடைய தேவைக்காக அல்ல. எமது தமிழ்மக்களின் அரசியல் உரிமைக்காக இந்த ஆண்டிலும் எமது முழுமையாக அழுத்தங்களை கொடுத்து மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களைக் கொடுத்து தமிழ் மக்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், நிரந்தரமாக அரசியல் தீர்வையும் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்காகவும் இலங்கை தமிழரசுக் கட்சி மாத்திரம்தான் தமிழ் மக்களின் சார்பில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

கல்வி மறுசீரமைப்பு சம்பந்தமாக எங்களுக்கு பல கேள்விகள் இருக்கின்றன. கல்வி மறுசீரமைப்பு என்பதும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்பதும் இரண்டு விடயங்களாகும். எதிர்க்கட்சியில் இருக்கின்ற பலர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்துக்கொண்டு அதனை கல்வி மறுசீரமைப்பு விடயத்தினுள் போட்டுக் குழப்பிக்கொண்டு இன்று இதுதொடர்பில் பெரிய பிரச்சினை வந்திருக்கின்றது.

ஆறாம் ஆண்டு பாடப்புத்தகத்திலே பொருத்தமற்ற சில பகுதிகள் இருப்பதாக பல இடங்களில் பேசப்பட்டுவருகின்றது. அந்த ஒரு விடயத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு கல்வி மறுசீரமைப்பு விடயத்தை ஒரு சிறு பிழைதான் என்று கூறமுடியாது. கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக எமது பிரதேசத்தில் இருக்கின்ற பேராசிரியர்கள், கல்விமான்கள், நிபுணர்கள் ஆகியோரின் அறிக்கைகளை நாங்கள் கேட்டு அவர்கள் அதனை தயார்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

வரலாற்று பாடப்புத்தகத்தை பார்த்தோமானால் அதில் ஒரு தரப்பினுடைய வரலாறு மாத்திரம்தான் பேசப்படுகின்றது. பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னுள்ள வரலாறு, முன்னுள்ள வரலாறு என இருவகை வரலாறுகள் உள்ளன. சிங்கள வரலாற்று பாடப்புத்தகங்களில் தமிழ் மன்னர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்தார்கள் என்பது பற்றி பார்க்க முடிவதில்லை. தமிழ் மன்னர்களை சிங்கள மன்னர்கள் தோற்கடித்தார்கள், அவர்கள் வேறு நாட்டிலிருந்து இங்கு வந்த அந்நியசக்திகள் என்று விஸ்தரிக்கின்றார்கள்.

500 வருடங்களுக்கு முன்னர் நடந்த வரலாறுகள் மாற்றப்பட்டுள்ளதுடன் 1948ஆம் ஆண்டுக்கு பின்னர் நடந்த வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன.இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் இந்த நாட்டுக்கு பிரித்தானியர்கள் வழங்கியபோது அவர்கள் வழங்கிய தீர்வினை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

எங்களை கட்டாயப்படுத்தி பெரும்பான்மை சமூகத்தின் கைகளில் எங்களை வழங்கிச்சென்றார்கள். அதன் பின்னர் ஆட்சியதிகாரத்திற்கு வந்த சிங்கள அரசுகள் மேற்கொண்ட பல்வேறுபட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அந்த வரலாறுகளைக்கூட மாணவர்களுக்கு கொண்டுசெல்லாத வகையிலேயே வரலாற்றுநூல்கள் உள்ளன.

2026இல் நடக்கும் கல்வி மறுசீரமைப்பில் கூட மாணவர்களின் வரலாற்றுநூல்களில் இவற்றினை சரிசெய்யாவிட்டால் எதிர்வரும் 30,40வருடத்தில் இந்த நாட்டில் தமிழர்களின் வரலாறு தெரியாத நிலையே மாணவர்களுக்கு ஏற்படும்.

கல்வி மறுசீரமைப்பு என்பது முக்கியமானதும் அவசியமானதுமான விடயம்.ஆனால் இதனை எவ்வாறு செய்யவேண்டும் என்பது தொடர்பில் தமிழர்கள் தரப்பிலிருந்தும் கருத்துகளை உள்வாங்கி மேற்கொள்ளவேண்டும்.என்றார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி