திருகோணமலையில் 34 கோயில்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது.அவற்றை அகற்றுமாறு நீதிமன்றத்தால் மாநகர சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் திருகோணமலை புத்தர் சிலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தேரர்களின் வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் தொடர்ந்து பேசியதாவது,
திருகோணமலை கடலோரப் பகுதியில் புத்தர் சிலையொன்றை நிறுவியமைக்காக பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி எனத் தெரிவித்தார்.
திருகோணமலையில் குறித்த இடத்தில் புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கு நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தை சுற்றி வேலி அமைப்பதற்கும் அனுமதி கிடைத்துள்ளது.
மேலும், கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தினால் 1951 ஆம் ஆண்டு முதல் அங்கிருந்த தஹம் பாடசாலையை புனரமைப்பதற்கான தெளிவான அனுமதி கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான உத்தியோகபூர்வ ஆவணங்கள் இருக்கும் நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான ஒரு சிங்கள சட்டத்தரணி, அந்த ஆவணங்கள் போலியானவை எனக் கூறி பிக்குகளை சிறையிலடைக்க கடுமையாக முயற்சித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
குறித்த இடத்தில் மேசை ஒன்றின் மீது புத்தர் சிலையே வைக்கப்பட்டது என்றும், அது மழையினால் சேதமடையாமல் இருக்க தற்காலிக மறைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்த வீரசேகர, மாலையில் அங்கு வந்து பிரித் பாராயணம் செய்த பிக்குகள் மற்றும் பொதுமக்களே கடலோர பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, திருகோணமலை கடற்கரை ஓரங்களில் சுமார் 8 கோவில்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், 34 சட்டவிரோத கோவில்களை அகற்றுமாறு நீதிமன்ற உத்தரவு இருந்தும் அவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடுன்னாகல பகுதியில் பௌத்த சிதைவுகளை அழித்து அதன் மீது சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பூசாரி உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்ட போதிலும், இரண்டு வருடங்கள் கடந்தும் அவர்கள் மீது இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், பௌத்த பிக்குகளுக்கு எதிராக மாத்திரம் சட்டமா அதிபர் திணைக்களம் பாரபட்சமாக நடப்பதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இவ்வாறான நகர்வுகள் குறித்து அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை பௌத்த மதத்திற்கு எதிராகச் செயல்படுவதாலேயே அரச அதிகாரிகளும் இவ்வாறு நடந்துகொள்வதாகத் தெரிவித்தார்.
சிலை வழிபாடு காட்டுமிராண்டித்தனமானது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளதாகவும், இலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல என அவர் வெளிநாடுகளில் பிரசாரம் செய்வதாகவும் வீரசேகர சாடினார். அத்துடன், புதிய அரசியலமைப்பு ஊடாக இலங்கையை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்ற பிரதமர் முயற்சிப்பதாகவும், இது அரசியலமைப்பின் 9-வது பிரிவில் உள்ள பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் கடப்பாட்டிற்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.
மேலும், ஜனாதிபதி வடக்குக்குச் சென்று திஸ்ஸ விகாரைக்கு வருபவர்கள் வெறுப்பை பரப்புவதாகக் கூறியமை சிங்கள பௌத்த வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியான அவருக்கு அழகல்ல என்றும், அரசாங்கம் என்பது நாட்டின் உரிமையாளர் அல்ல, வெறும் பாதுகாவலர் மட்டுமே என்பதையும் அவர் நினைவூட்டினார். எனவே, நாட்டின் அடையாளத்தையும் பௌத்த மதத்தையும் சீரழிக்க அரசாங்கத்திற்கு இடமளிக்க முடியாது என அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.