செம்மணி மனிதப் புதைகுழி வளாகத்தில் அபிவிருத்தி வேலைகளுக்கு நீதிமன்றம் தடை!

செம்மணி மனிதப் புதைகுழி வளாகத்தில் அபிவிருத்தி வேலைகளுக்கு நீதிமன்றம் தடை!

கடந்த நான்கு மாதங்களாக அகழ்வாராய்ச்சிப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள, இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப்புதைகுழியாகக் கருதப்படும் செம்மணி மனிதப்புதைகுழி வளாகத்தில், நீதிமன்றத்தின் அனுமதியின்றி எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கக் கூடாது என யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (2026 ஜனவரி 19, திங்கட்கிழமை) யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையினைப் பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

பாதிக்கப்பட்ட தரப்பிற்காக முன்னிலையான சட்டத்தரணி ரனிதா ஞானராஜா இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்: "புதைகுழி அமைந்துள்ள வளாகத்தில் எவ்வித அபிவிருத்திப் பணிகளுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகளால் இன்று நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அகழ்வாராய்ச்சிப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை நிலத்தின் தற்போதைய நிலையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாது என நாம் கோரினோம். இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், எதிர்காலத்தில் நீதிமன்ற அனுமதியின்றி அங்கு எதனையும் செய்யக் கூடாது என உத்தரவிட்டார்" என்றார்.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியில் மேலும் இரண்டு மாத கால அகழ்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்டிருந்த சுமார் இரண்டு கோடி ரூபாய் நிதியை நீதி அமைச்சு ஒதுக்கியிருந்தது. எனினும், கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் மழை காரணமாக அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க முடியாமல் போனது.

நேற்று (19) நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், சட்டத்தரணிகள், காணாமல் போனோர் பற்றிய அலுவலக (OMP) அதிகாரிகள் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட அகழ்வாராய்ச்சி நிபுணர்களுடன் இணைந்து குறித்த பகுதிக்குச் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அகழ்வுப் பிரதேசத்தின் சில பகுதிகளில் தற்போதும் மழைநீர் தேங்கியுள்ளமையை அவதானிக்க முடிந்தது. பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணியான வி.எஸ். நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், அகழ்வுப் பகுதியில் தேங்கியுள்ள நீரை சட்ட மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் எதிர்வரும் பெப்ரவரி 09 ஆம் திகதி வெளியேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

"அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர், தேங்கியுள்ள நீர் வற்றும் வரை காத்திருக்க வேண்டும் அல்லது அதனை வெளியேற்ற வேண்டும். எனவே, பெப்ரவரி 9 ஆம் திகதி நல்லூர் பிரதேச சபையின் உதவியுடன் நீதிமன்ற மேற்பார்வையில் நீர் வெளியேற்றப்படும். அதன் பின்னரே அகழ்வாராய்ச்சிக்கான திகதி குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவிற்கமைய, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிநடத்தலில் செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் முதன்முதலில் 2025 மே 15 அன்று ஆரம்பிக்கப்பட்டன.

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் 45 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் 2025 செப்டம்பர் 06 அன்று நிறைவடைந்தன. இதன்போது சிறுவர்கள் உட்பட 240 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்து எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் செம்மணி புதைகுழியிலிருந்து மனித எச்சங்களுடன் பால் போத்தல்கள், பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் பாதணிகள் மற்றும் பாடசாலைப் பைகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழியாக 28 சிறுவர்கள் உட்பட 376 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட மன்னார் சத்தோச மனிதப்புதைகுழி கருதப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி