'தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் ஆவணம் தயாரிப்பு'

'தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் ஆவணம் தயாரிப்பு'

'தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் தயாரிக்கவுள்ளன. இந்த முயற்சியில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் ஏனைய தரப்புகளும் எம்முடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம்' என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் நேற்று இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் நேற்று மாலை யாழ். நகரின் விருந்தினர் விடுதியில் சந்தித்துப் பேசின. இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவ

ஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் (பேச்சாளர்), சி.வேந்தன், மு.சந்திரகுமார் மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் நா.இரட்ணலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் முடிவில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில், சுமந்திரன் தெரிவித்தவை வருமாறு:-

“மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தேர்தலையே நடத்தாமல்

இருப்பது எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஆகவே, தற்போதிருக்கும் முறையில் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். அரசமைப்பு விவகாரம் சம்பந்தமாக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் - எடுக்காமல் இருக்கின்ற நடவடிக்கைகள் குறித்து பேசியிருக்கின்றோம். அண்மைக் காலமாக சில ஆயத்தங்கள் செய்வதாக அரசு கூறி வருகின்றது. எவ்வளவு தூரத்துக்கு அது உண்மையானது என்பது தெரியவில்லை.

“பிரதம மந்திரி, நீதி அமைச்சர் உள்ளிட்டோர் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர். இந்தநிலையில் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளைப் பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கலாம் என்று நாங்கள் முடிவெடுத்திருக்கின்றோம். இது, சம்பந்தமாக எங்கள் இரண்டு கட்சிகளும் இணைந்து இந்த முயற்சி

யிலே ஈடுபடப் போகின்றன. இதன்போது, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் ஏனைய தரப்புகளும் எங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என விரும்புகின்றோம்.

“தமிழ்த் தேசத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஓர் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கின்றது. பலர் அரசு சாட்டுப்போக்குச் சொல்லாமல் இருப்பதற்கும் சர்வதேசத்துக்கு நேரடியாகவும் இதுதான், தமிழ் மக்களின் ஆவல் ஆசைகள் என்று சொல்லக்கூடிய வகையி

லும் ஏற்கனவே பல வரைவுகள் - யோசனைகள் - ஆவணங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் எல்லாம் பார்த்து ஒரு குறித்த நிலைப்பாட்டை முன்வைப்பதற்கான முயற்சி ஒன்றை நாங்கள் ஆரம்பிக்கின்றோம்.

வெகுவிரைவில் அதனைப் பூர்த்தி செய்வோம். மற்றவர்களும் இணைந்து தங்கள் நிலைப்பாடுகளைத் தெரியப்படுத் தினால் நல்லது.

“மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்படுவது சம்பந்தமாக நாங்கள் ஆராய்ந்தோம். மாகாண சபைகள் இயங்காமல் இருப்பது எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாண சபைகள் முறைமை கொண்டுவரப்பட்டது. அது முழுமையான தீர்வு அல்ல - நாங்

கள் ஏற்றுக்கொண்ட தீர்வும் அல்ல. அது பல குறைபாடுகளோடு இயங்கினாலும் ஏழு - எட்டு வருடங்களாக அது இயங்காமல் இருந்தது. அது அரசமைப்புக்கு உட்பட்ட விடயம்.

“ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையிலே ஒரு வருட காலத்துக்குள்ளே மாகாண சபைத் தேர்தலை நடத்தி முடிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். அப்படியிருந்தும்கூட இப்போது ஒரு வருடம் நிறைவடைந்து அதற்குப் பிறகு நான்கு மாதங்களும் ஆகியும் இன்னமும் மாகாண சபைத் தேர்தலை வைப்பதற்கான அறிகுறி கிடையாது. அதை இழுத்தடிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. இழுத்தடிப்பை விட்டு மாகாண சபைத் தேர்தல் இருக்கின்ற முறையிலேயே நடத்தப்பட வேண்டும்' என்றார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி