சட்டத்தின் ஆட்சிக்கு நீதித்துறை மற்றும் நீதிமன்றங்களின் சுயாதீனமான செயற்பாடு எவ்வளவு தூரம் முக்கியமானதோ, அதே போன்று சட்டமா அதிபர் மற்றும் அவரின் திணைக்களத்தின் சுயாதீனமான - சுதந்திரமான - செயற்பாடும் மிக முக்கியமானதாகும்.
நாட்டின் சார்பில் பிரதான வழக்குத் தொடுநர் அவர்தான். அப்படி வழக்குத் தொடரும் விடயங்களில் அவர் சுதந்திரமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும். அரசாங்கத்தின் ஏவலாளாக அவர் செயல்படக் கூடாது| செயல்பட முடியாது.
உரிய சமயங்களில் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் ஆலோசனை மற்றும் சட்ட வழிகாட்டல் வழங்கும் பொறுப்பும் கடமையும் அவருக்கு இருந்தாலும், அதற்காக அவர் ஜனாதிபதியினதும் அரசினதும் விருப்பு - வெறுப்புகளுக்கு அமையவே செயல்பட வேண்டும் என்று அரசோ ஜனாதிபதியோ எதிர்பார்க்கக் கூடாது.
அப்படி எதிர்பார்த்தால் அது முறையற்ற விவகாரமாகும். வழக்குகள் தொடுக்கின்ற விடயத்தில் தமக்கு முன்னால் இருக்கும் சான்றுகள், ஆதாரங்கள், விசாரணை அறிக்கைகள், கோவைகள் போன்றவற்றின் அடிப்படையில்தான் அவர் முடிவெடுப்பார். அரசின் அல்லது அரசுத் தலைமையின் விருப்பு - வெறுப்புக்கு அமைய அல்ல.
அப்படி அரசு தலைமையின் ஊதுகோல்களாக - ஏவல் நாய்களாக - இருந்த சட்டமா அதிபர்கள் பதவியில் இருந்திருக்கலாம். ஆனால் சட்டமா அதிபர் பதவி என்பது தனித்துவமானது. சுயாதீனமானது. சட்டப் பொறுப்புமிக்கது.
அரசாங்கம் வழக்குத் தொடுக்க விரும்பும் தரப்புகள் எல்லாவற்றுக்கும் எதிராக சட்டமா அதிபர் இணங்கி
தலையாட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது தவறு. அது - சட்டமுறையற்ற - நீதியற்ற - அணுகுமுறை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அவரது லண்டன் விஜயதையொட்டி வழக்குத் தொடுக்க வேண்டும் என்று அரசும், அரசுத் தலைமையும், அரசு தரப்பு ஆதரவாளர்களும் விரும்பினாலும் கூட, இந்த விடயத்தில் சுதந்திரமாக - சுயாதீனமாக - தமக்கு முன்னால் உள்ள சான்றாதாரங்களை உள்வாங்கி முடிவெடுக்க வேண்டியவர் சட்ட மா அதிபரே.
ஏற்கனவே இப்பத்தியில் நாம் குறிப்பிட்டபடி, பொலிஸ் மா அதிபர் போல சட்ட மா அதிபரையும் நாடாளுமன்றப் பிரேரணை மூலம் பதவி இழக்கச் செய்யலாம். அதற்கான நாடாளுமன்றப் பலம் அரசிடம் தாராளமாக உள்ளது என்பதற்காகத் தான் விரும்பியவற்றை - தாம் எதிர்பார்க்கின்றவற்றை - சுயாதீனப்
பொறுப்பில் இருக்கும் சட்டமா அதிபர் ஆற்ற வேண்டும் என்று அரசுத் தரப்பு எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு.
வழக்குகள் தொடுக்கும் விடயத்தி ஆட்சித் தலைமையின் அரசியல் நோக்கங்களுக்கு இயைந்து போகும் விதத்தில் தற்போதைய சட்டமா அதிபர் செயற்படுகின்றார் இல்லை என்ற ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதற்காக அவர் மீது அபவாதக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவரைப் பதவியில் இருந்து இறக்குவோம் என்று
மிரட்டி - அச்சுறுத்தி - தமக்கு இசைவாக செயல்பட சில தரப்புகள் முயலுகின்றன என்று தெரிகின்றது.
சட்ட மா அதிபருக்கு எதிராக இன்று கொழும்பில் இளம் சட்டத்தரணிகள் அணி என்ற பெயரில் முன்னெடுக்கப்பட இருக்கும் போராட்டம் இந்த நோக்கம் கொண்டதாகவே தென்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசில் நீதித் துறையின் சுயாதீனம் அடிபட்டு போவதற்கான கால்கோள் இன்றைய போராட்டம் மூலம் முன்னெடுக்கப்படப் போகின்றது என்றே தோன்றுகின்றது.