நோவா ஸ்கோடியாவில் கடும் பனிப்பொழிவு: 13,000க்கும் மேற்பட்டோர் இன்னும் இருளில்!

நோவா ஸ்கோடியாவில் கடும் பனிப்பொழிவு: 13,000க்கும் மேற்பட்டோர் இன்னும் இருளில்!

நோவா ஸ்கோடியா (Nova Scotia) மாகாணத்தில் வீசிய கடும் பனிப்புயலைத் தொடர்ந்து, 13,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் செவ்வாய்க்கிழமை மதியம் வரையில் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பருவக்காலத்தின் முதலாவது பாரிய பனிப்பொழிவு ஏற்பட்டு 24 மணித்தியாலங்கள் கடந்த நிலையிலும் இந்த மின் துண்டிப்பு நீடிக்கின்றது.

ஞாயிறு இரவு முதல் திங்கள் காலை வரை சுமார் 20 சென்டிமீட்டர் உயரத்தில் பனி பொழிந்திருந்தது. இதன் காரணமாக ஆரம்பத்தில் சுமார் 140,000 நுகர்வோர் மின்சாரத் தொடர்பை இழந்திருந்த போதிலும், தற்போது அந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக மாகாணத்தின் தனியார் மின்சார விநியோக நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து நோவா ஸ்கோடியா மின்சார நிறுவனத்தின் (Nova Scotia Power) அதிகாரி ஒருவர் மின்னஞ்சல் மூலம் விடுத்துள்ள அறிக்கையில்,

"மாகாணம் முழுவதும் பெய்த பாரிய ஈரப்பனி காரணமாக மரங்களும் கிளைகளும் முறிந்து மின் கம்பிகள் மற்றும் மின் உபகரணங்கள் மீது வீழ்ந்தமையே இந்த மின் துண்டிப்புக்குக் காரணமாகும்" என குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை மதிய நிலவரப்படி, தெற்கு கடற்கரைப் பகுதியிலுள்ள பிரிட்ஜ்வாட்டர் (Bridgewater), ஷெல்பர்ன் (Shelburne) மற்றும் லிவர்பூல் (Liverpool) ஆகிய பிரதேசங்களிலேயே அதிகளவான மின் துண்டிப்புகள் பதிவாகியுள்ளன.

மேற்குப் பிராந்தியத்தில் மின்சாரத்தை மீள வழங்குவதற்காக 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் மின்கம்ப தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் குழுவினரும் அடங்குவர். எனினும், வீதிகளில் பனி உறைந்து காணப்படுவதால் (Icy roads) தொழில்நுட்பப் பணியாளர்கள் சம்பவ இடங்களுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, லோவர் சக்வில் (Lower Sackville) பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை பனி அகற்றும் இயந்திரம் (Snow Plow) ஒன்று மின்கம்பத்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தினால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இருப்பினும், செவ்வாய்க்கிழமை இரவு நேரமாகும் போது பெரும்பாலான நுகர்வோருக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சார நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.