பாதுகாப்புத் துறையில் தடம் பதிக்கும் பூர்வீகக்குடி மக்கள்: 'புளோயிங் ரிவர் கேபிடல்' நிறுவனத்தின் பாரிய முதலீடு!

பாதுகாப்புத் துறையில் தடம் பதிக்கும் பூர்வீகக்குடி மக்கள்: 'புளோயிங் ரிவர் கேபிடல்' நிறுவனத்தின் பாரிய முதலீடு!

கனடாவின் பூர்வீகக்குடி மக்களுக்குச் சொந்தமான 'புளோயிங் ரிவர் கேபிடல்' (Flowing River Capital) எனும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனம், சர்வதேச பாதுகாப்புத் தயாரிப்பு நிறுவனமொன்றைக் கையகப்படுத்தியுள்ளது. கனடா மற்றும் அதன் நட்பு நாடுகள் தமது இராணுவச் செலவீனங்களை அதிகரித்து வரும் நிலையில், இது ஒரு ஆரம்பமே என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சஸ்காச்சுவான் (Saskatchewan) மாகாணத்தைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், தற்போது 'மார்ஷல் லேண்ட் சிஸ்டம்ஸ்' (Marshall Land Systems) நிறுவனத்தின் 100 வீத உரிமையாளராக மாறியுள்ளது. இந்த நிறுவனமானது நியூ பிரன்சுவிக் (N.B) மாநிலத்தின் மொன்க்டன் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் 100 பேருக்கும், ஒட்டாவா, பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள கிளைகளில் 600 பேருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.

இந்த நிறுவனம் கடல், வான் மற்றும் தரைவழியாக எடுத்துச் செல்லக்கூடிய விசேட கொள்கலன் தொகுதிகளை (Containerized systems) உற்பத்தி செய்கிறது. இவை கட்டளை மையங்களாகவும் (Command centres), மருத்துவ ஆய்வகங்களாகவும் அல்லது அபாயகரமான பொருட்கள் மற்றும் வெடிமருந்துகளைச் சேமிக்கும் அறைகளாகவும் பயன்படுத்தப்படலாம். குறிப்பாக, -51 டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் இயங்கக்கூடிய மற்றும் உவர் நீர் எதிர்ப்புத் திறன் கொண்ட இவை, சூரிய சக்தி மற்றும் கலப்பு வலுசக்தி (Hybrid systems) மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கனடிய ஆயுதப் படைகளுடன் 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் 350 மில்லியன் டாலர் பெறுமதியான ஒப்பந்தத்தை மார்ஷல் நிறுவனம் கொண்டுள்ளது. இதேபோன்ற ஒப்பந்தங்கள் பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து இராணுவத்துடனும் உள்ளன. மொன்க்டன் தொழிற்சாலை வரும் காலங்களில் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தோமஸ் பென்ஜோ (Thomas Benjoe) தெரிவித்துள்ளார்.

"வரவிருக்கும் ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையிலேயே அதிகளவு நிதி செலவிடப்படவுள்ளது. எனவே, இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமான களமாகும்," என பென்ஜோ சுட்டிக்காட்டியுள்ளார். நேட்டோ (NATO) நாடுகளின் இலக்கிற்கு ஏற்ப, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாதுகாப்புச் செலவீனத்தை 2035 ஆம் ஆண்டளவில் 5 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

அதேவேளை, அரசாங்கத்தின் கொள்வனவுகளில் குறைந்தது 5 சதவீதமாவது பூர்வீகக்குடி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டும் என்ற இலக்கை அடைய இந்த மார்ஷல் நிறுவனம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தோமஸ் பென்ஜோ கருத்துத் தெரிவிக்கையில், பூர்வீகக்குடி வர்த்தகர்கள் தற்போது அனுபவமும் கல்வியறிவும் பெற்று, பாரிய முதலீட்டுத் துறைகளில் நுழையத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார். வெறும் பங்குதாரர்களாக மட்டுமன்றி, சொத்துக்களின் உரிமையாளர்களாகவும் பாதுகாப்பு, தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பூர்வீகக்குடி மக்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதே தமது நோக்கம் என்றும், அதேவேளை பணியிடங்களில் பன்முகத்தன்மை (Diversity) பேணப்படும் என்றும் அவர் கூறினார். பல்கலைக்கழக நண்பர்களான தோமஸ் பென்ஜோ, கட்மஸ் டெலோர்ம், எரிக் கிளார்க் மற்றும் டைலர் வில்லாக்ஸ் ஆகிய நால்வரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், வரும் காலங்களில் முதலாம் நாடுகள் (First Nations) முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட 'புளோயிங் ரிவர் கேபிடல்' நிறுவனம், தற்போது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உட்பட 6 நிறுவனங்களைத் தனது முதலீட்டுப் பட்டியலில் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.