ஒட்டாவா நகரில் இடம்பெற்ற மிக மோசமான கூட்டுப் படுகொலைச் சம்பவங்களில் ஒன்று நிகழ்ந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில், அதில் உயிர் பிழைத்த ஒரே நபரினது குடும்ப உறுப்பினர்களும் அவர்களது சட்டத்தரணியும் கூட்டாட்சி குடிவரவு அமைச்சரின் தலையீட்டைக் கோரியுள்ளனர். தமது குடும்பத்தினர் மீண்டும் ஒன்று சேரும் வரை இந்தத் துயரத்திலிருந்து மீள முடியாது என அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
ஷேலக்க விக்ரமசிங்க தனது மகளைப் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகின்றன. மூன்று வயதான அவரது மகள் தனது தந்தையைத் திரையில் (வீடியோ அழைப்பு) மட்டுமே அறிவார். "அவள் எனது குடும்பத்தின் இளவரசி, அவளை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்" என ஷேலக்க தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பார்ஹேவன் (Barrhaven) பகுதியில் ஷேலக்கவின் சகோதரரான தனுஷ்க விக்ரமசிங்கவின் மனைவி, நான்கு பிள்ளைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் தனுஷ்க மட்டுமே உயிர் பிழைத்தார். அந்தத் துயரமான நேரத்தில் தனது சகோதரருக்கு ஆதரவாக இருப்பதற்காகவே ஷேலக்கவும் அவரது தந்தை திஸ்ஸவும் கனடாவுக்கு வந்திருந்தனர்.
கடந்த நவம்பர் மாதம், அந்தக் குடும்பத்துடன் தங்கியிருந்த பெப்ரியோ டி-சொய்சா என்பவருக்கு 25 ஆண்டுகள் பிணையின்றி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தாக்குதலுக்குப் பிறகு, ஷேலக்க கனடாவிலேயே தங்கி தனது சகோதரருக்கு உணவு தயாரித்தல், அன்றாடப் பராமரிப்பு மற்றும் அவரது தொழிலை மீண்டும் கட்டியெழுப்புதல் போன்ற பணிகளில் உதவி வருகிறார். "எனது சகோதரரை இந்த நிலையில் விட்டுவிட்டு என்னால் செல்ல முடியாது. அதேநேரம் இலங்கையிலுள்ள எனது மனைவி மற்றும் மகளைப் பார்க்கவும் என்னால் அங்கு செல்ல முடியாது, ஏனெனில் எனது சகோதரர் இன்னும் வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கிறார்" என ஷேலக்க தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஷேலக்க, அவரது தந்தை மற்றும் தனுஷ்க ஆகியோரின் நிரந்தர வதிவிடக் கோரிக்கை (Permanent Residency) மனிதாபிமான அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் ஏற்கனவே கனடாவிற்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இலங்கையிலுள்ள ஷேலக்கவின் மனைவி மற்றும் மகளின் Visitor Visa விண்ணப்பங்கள் 2024இல் நிராகரிக்கப்பட்டன. அதை மறுபரிசீலனை செய்யக் கோரியும் அது நிராகரிக்கப்பட்டது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த குடிவரவு சட்டத்தரணி ரொனாலி கேரி, "ஒவ்வொரு நாளும் அவர் தனது மனைவி மற்றும் மகளிடமிருந்து பிரிந்திருக்கிறார். தனுஷ்கவுக்குத் துணையாக இருப்பதற்காகவே செலக இந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்கிறார் என்பதைத் தனுஷ்க அறியும்போது அது அவருக்கு மேலதிக மன வலியைத் தருகிறது. அனைவரும் ஒன்றிணையும் வரை அந்தக் குடும்பத்தால் முன்னோக்கிச் செல்ல முடியாது," எனத் தெரிவித்தார்.
சாதாரண முறையில் குடும்பத்தை ஸ்பொன்சர் (Sponsorship) செய்து அழைத்து வர இன்னும் 14 மாதங்கள் ஆகலாம். எனவே, குடிவரவு அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, நிராகரிக்கப்பட்ட விஜய விசாக்களை மீண்டும் பரிசீலித்து அவர்களுக்கு அனுமதி வழங்கினால், அடுத்த வாரமே அவர்களைக் கனடாவுக்கு அழைத்து வர முடியும் எனச் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
"தனுஷ்கவைப் பொறுத்தவரை, அந்தச் சிறுமிதான் (ஷேலக்கவின் மகள்) அந்தக் குடும்பத்தில் எஞ்சியிருக்கும் ஒரே குழந்தை. அவளே தனுஷ்கவின் வாழ்வதற்கான நம்பிக்கையாக இருக்கிறாள்" என்றும் சட்டத்தரணி மேலும் கூறினார்.
இது தொடர்பாகக் குடிவரவு அமைச்சர் லீனா மெட்லெட்ஜ் டயப்பை (Lena Metlege Diab) பலமுறை தொடர்பு கொண்டும் இதுவரை பதில் கிடைக்கவில்லை எனச் சட்டத்தரணி தெரிவித்தார். "தனது பிள்ளைகளை இழந்த தனுஷ்கவுக்கு, எனது மகளும் ஒரு மகளாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்," எனச் செலக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்த பிறகு அனைவரும் ஒன்றாகவே வாழத் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து கனேடிய குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (IRCC) கருத்துத் தெரிவிக்கையில், தனிநபர் அந்தரங்கப் பாதுகாப்புச் சட்டம் காரணமாக ஒரு குறிப்பிட்ட வழக்கு குறித்து வெளிப்படையாகப் பேச முடியாது எனத் தெரிவித்துள்ளது.