நீண்ட காலம் நடத்தப்படாமல் நிலுவையில் இருக்கும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் தேர்தல் ஆணையத்துடன் தொடர்புடைய இருவர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
ஒருவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க. மற்றவர் எல்லை நிர்ணய
குழுவின் செயலாளரும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகமுமான சமன் சிறி ரத்நாயக்க.
'மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத்தால் நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள குழுவில் முன்னிலையாகி எமது தரப்பு யோசனைகளை முன்வைக்கத் தயாராகவுள்ளோம். நடைமுறையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டால் மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்தும் ஏற்பாடுகளை மேற்கொள்வோம்' எனத் தற்போதைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்திருக்கின்றார்.
எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்கு மீண்டும் ஒரு குழுவை நியமித்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாகிவிடும் என எல்லை நிர்ணய குழுவின் செயலாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக் குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகமான அவருக்கு மாகாண சபை தேர்தல் விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் குறித்து நன்கு தெரியும். அதில் பொதிந்திருக்கும் சூத்திரங்கள் அவருக்கு விளங்கும்.
தாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் ஒரு வருடத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என வாக்குறுதி கொடுத்த தேசிய மக்கள் சக்தி அரசு, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களில் நல்ல பாடங்களைப் படித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தினால் மாகாண நிர்வாகங்கள் தங்கள் கைகளை விட்டுத் தவறிப் போய்விடும், சரியோ, பிழையோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாத சூழ்நிலையில் மாகாண நிர்வாகங்களும் மத்திய அரசை கட்டுப்படுத்தும் தங்களினுடைய முழு கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன, தேர்தலை நடத்தி அவற்றை தங்கள் தரப்பு அல்லாத பிற தரப்புக்களிடம் கையளிக்க ஏன் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது தேசிய மக்கள் சக்தியின் உள்ளார்ந்தமான அரசியல் கணக்காக உள்ளது.
அதனால்தான் வாக்குறுதி அளித்த மாகாண சபை தேர்தலை தாங்கள் நடத்தாமல் இழுத்தடிப்பதற்கு சட்டச் சிக்கல் என்ற கயிற்றை மக்களுக்கு விழுங்க கொடுக்க முயல்கின்றது அது. அந்தச் சட்டச் சிக்கல் விவகாரத்தை மக்கள் முன்காட்டுவதற்காகத்தான் இந்தத் தெரிவுக் குழு என்ற ஏற்பாடு. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அறிவித்து, அதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறைமை குறித்து ஆராய முற்படுவது என்பது, கடைசியில் மீண்டும் மாகாணங்கள் தோறும் தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்யும் அறிவிப்பு வரை வந்து நிற்கும். எல்லை நிர்ணய ஆணைக்குழு என்றும் புதிதாக அறிவிக்கப்படும்.
அது தனது பணியை ஆரம்பித்து முடிக்க சில வருடங்கள் தேவைப்படும். அந்தக் கணக்கில் இந்த ஆட்சிக் காலம் முடியும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் - மாகாண நிர்வாகங்கள் மக்களால் தெரிவு செய்யப்படும் வெளித்தரப்புகளின் கைகளுக்குப் போகாமல் - தமது கட்டுப்பாட்டில் வைத்து விரும்பியதைச் செய்யலாம் என்பதற்காகத்தான் தேசிய மக்கள் சக்தி, இந்தத் தெரிவுக் குழு என்ற நாடகத்தை முன்னெடுத்திருக்கின்றது. ஆனாலும் மக்கள் விரைவில் இதை முழுமையாக விளங்கிக் கொள்வார்கள் என்று நம்பலாம்.