தசாப்த காலங்களாக இலங்கையில் நிலவிய மோதல்களைத் தீர்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பான வரலாற்றை வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கும் நோக்கில், பாத்ஃபைண்டர் அறக்கட்டளை (Pathfinder Foundation) நிறுவிய "இலங்கை சமாதான முயற்சிகளுக்கான தகவல் மையம்" (Repository for Sri Lanka Peace Initiatives) நேற்று (26) திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை சமாதானச் செயல்முறைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) தலைமையில் இந்த மையம் திறந்து வைக்கப்பட்டது. பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் நிறுவனர் மிலிந்த மொரகொட மற்றும் அதன் தலைவர் பேர்னார்ட் குணதிலக்க ஆகியோரின் அழைப்பின் பேரில் அவர் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
அன்றைய சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்கத்தின் சார்பில் பிரதான பேச்சுவார்த்தையாளர்களாக மிலிந்த மொரகொட மற்றும் பேர்னார்ட் குணதிலக்க செயற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக இலங்கையில் நிலவிய பிரிவினைவாத மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், அவை வெற்றிகரமான முடிவை எட்டவில்லை. எவ்வாறாயினும், 2002 முதல் 2008 வரையான காலப்பகுதியில் சமாதானச் செயல்முறை ஒருங்கிணைப்பு செயலகம் (SCOPP) மற்றும் நோர்வே அனுசரணையாளர்களிடம் இருந்த பெறுமதிமிக்க ஆவணங்கள் ஒரே இடத்தில் பாதுகாக்கப்படாமல் இருந்தமை வரலாற்று ஆய்வுகளில் ஒரு பெரிய குறையாகக் காணப்பட்டது.
அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெறப்பட்ட சமாதானச் செயல்முறை தொடர்பான ஆவணங்கள் மற்றும் தரவுகளைத் திரட்டி, ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் பயன்பாட்டிற்காக பேலியகொட, நீர்கொழும்பு வீதி, இலக்கம் 339/6 இல் அமைந்துள்ள 'பாத்ஃபைண்டர்' அலுவலகத்தில் இந்த புதிய தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
பாத்ஃபைண்டர் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த ‘References Room’ இல் உள்ள பழைய பத்திரிகை அறிக்கைகள், டிஜிட்டல் தரவுகள் மற்றும் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான ஆவணங்களை எரிக் சொல்ஹெய்ம் உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.