கனடாவின் மக்கள் தொகை தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

கனடாவின் மக்கள் தொகை தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

அடுத்த 50 ஆண்டுகளில், கனடாவின் மக்கள் தொகை 76 மில்லியனாக உயரக்கூடும் என்று 'ஸ்டாடிஸ்டிக்ஸ் கனடா' (Statistics Canada) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டு அந்த நிறுவனம் கணித்திருந்த எண்ணிக்கையை விட இந்த அதிகபட்ச வளர்ச்சி மதிப்பீடு கணிசமாகக் குறைந்துள்ளது.

2025 ஜூலை 1ஆம் திகதி நிலவரப்படி, கனடாவின் மக்கள் தொகை 41.7 மில்லியன் ஆகும். அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மூன்று விதமான கணிப்புகளை புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது:

குறைந்த வளர்ச்சி சூழல்: 2075 ஆம் ஆண்டளவில் மக்கள் தொகை 44 மில்லியனாக அதிகரிக்கும்.

நடுத்தர வளர்ச்சி சூழல்: 2075 ஆம் ஆண்டளவில் மக்கள் தொகை 57.4 மில்லியனாக இருக்கும்.

அதிக வளர்ச்சி சூழல்: 2075 ஆம் ஆண்டளவில் மக்கள் தொகை 75.8 மில்லியனை எட்டும்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட கணிப்பில், அதிக வளர்ச்சி சூழலில் 2074 ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகை 81 மில்லியனை எட்டும் என்றும், நடுத்தர வளர்ச்சியில் 59.3 மில்லியனை எட்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய கணிப்பு, கனடாவின் சமீபத்திய புள்ளிவிவரப் போக்குகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வரலாற்றில் இல்லாத அளவு குறைந்துள்ள பிறப்பு விகிதம் மற்றும் குடியேற்றம் மற்றும் தற்காலிக வதிவிடக் கொள்கைகளில் கொண்டுவரப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.

மாகாண ரீதியான வளர்ச்சியைப் பொறுத்தவரை, அடுத்த 25 ஆண்டுகளுக்காவது ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்கள் தொடர்ந்து அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களாகத் திகழும். அதேவேளை, வரும் ஆண்டுகளில் அல்பர்ட்டா மாகாணத்தின் மக்கள் தொகை பிரிட்டிஷ் கொலம்பியாவை விட அதிகமாகும் என்றும் புள்ளிவிவரத் திணைக்களம் கணித்துள்ளது.