இலங்கை தமிழரசுக்கட்சி என்றால் சுமந்திரன், சுமந்திரன் என்றால் தமிழரசுக்கட்சி என்ற நிலை இரா .சம்பந்தர் – மாவை சேனாதிராஜா காலத்து விளைவு. இந்த வலை தமிழரசுக்கட்சி தன்னைச் சுற்றி தானாகவே பின்னிக்கொண்ட ஒன்று.
கடந்த ஒன்றரை தசாப்தங்களாக சுமந்திரனை எல்லா சந்தர்ப்பங்களிலும் நியாயப்படுத்தி வந்த தமிழரசுக்கட்சியின் சிலந்திகளும் சேர்ந்து பின்னிய வீடுதான் இந்த சிலந்திவலை. இப்போது அனைவரும் அதில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
பா.அரியநேந்திரன், கே.வி.தவராசா, சி.யோகேஸ்வரன்,…….. என்ற வரிசையில் தற்போது சிக்கி இருப்பவர் சி.சிறிதரன். ஞா.சிறிநேசனும் விரைவில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சிறிதரன் விவகாரத்தில் அவரின் முடிவே அதைத் தீர்க்மானிக்கும்.
சிலந்திகள் பற்றி பேசும் போது வலை ஒன்றை பின்னுவதற்கு பல தடவைகள் முயன்று தோற்றுப்போன ஒரு சிலந்தி, முயற்சியை கைவிடாது தொடர்ச்சியாக முயற்சி செய்து ஆறாவது தடவை அதை சாதித்தது என்ற ஆரம்பப்பள்ளிபாடம் நினைவுக்கு வருகிறது. அந்த சிலந்திதான் சுமந்திரன்.
தமிழரசு கட்சியில் ஒரு தலைமைத்துவமாக, நிர்வாக ஆளுமையாக, அரசியல் விவகாரங்களை விரைவாக விளங்கிக்கொண்டு செயற்படுபவராக, உள்நாட்டு, வெளிநாட்டு தரப்புகளுடன் தொடர்புகளை பேணக்கூடிய ஒருவராகவும் மட்டும் அல்ல, அவர்களின் நம்பிக்கையை பெற்ற ஒருவராகவும் சுமந்திரனே இருக்கிறார். இதற்கு அவரது சட்டத்துறை நிபுணத்துவமும், மொழிவளமும், பூகோள அரசியல் அறிவும் பக்க பலமாக இருக்கிறது.
இந்த குணாம்சங்களுடன் ஒப்பிடும்போது தமிழரசின் மற்றைய எம்.பி.க்களும், முக்கியஸ்த்தர்களும் பெயரளவில் தான் உள்ளனர். அரசியல் விவகாரங்களை தர்க்கரீதியாக விவாதிப்பதில், நியாயப்படுத்துவதில், பொய்யையும் பொருந்த சொல்வதில் சுமந்திரனுக்கு நிகர் தமிழரசில் சுமந்திரன் தான்.
தமிழரசு வண்டியை இரண்டு சக்கரங்களாக சுமந்திரனும், சாணக்கியனும் சேர்ந்து ‘உருட்டுகிறார்கள்’ சிவஞானம் பின்னால் நின்று தள்ளிக்கொடுக்கிறார்.
இங்கு பேசப்படுகின்ற வலைப்பின்னல், உருட்டுதல் என்ற வார்த்தைகளில் சுமந்திரனின் அரசியலின் மறுபக்கம் மறைந்து இருக்கிறது. அதற்குள் அவரின் அரசியல் குறித்த நேர்மை, நீதி, நியாயம், வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம்…. என்ற கேள்விகள் இல்லாமல் இல்லை. ஆனாலும், அனைத்து சுத்துமாத்துக்களுக்கு மத்தியிலும் சுமந்திரனே வெற்றி பெறுகிறார். தன்னோடு ‘ஒத்து ஓடாதவர்களை ஓரங்கட்டுதல்’ என்பது சுமந்திரனின் கைவந்த கலை.
தமிழரசுக்கட்சியின் சம்பந்தருக்கு பின்னரான காலத்தை திரும்பி பார்த்தால் இது புரியும்.
திருகோணமலை பொதுச்சபைக்கூட்டமும், தலைவர்தேர்வும், கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியதும்,
உள்ளூராட்சி தேர்தலில் சுமந்திரன் பேசிய பொறிமுறையும் – தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உடைவும்,
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை நிராகரித்தமையும், தீவிர தமிழ்த்தேசியவாதத்தை எதிர்த்து சஜீத் பிரேமதாசவை ஆதரித்தமை,
பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் பின்னரும் பாராளுமன்றத்திற்கு வெளியில் மட்டும் அன்றி உள்ளும் சத்தியலிங்கம், சாணக்கியன் ஊடாக சுமந்திரனே தீர்மானங்களை எடுக்கும் நிலையில் உள்ளார்,
தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை, மத்திய குழு, அரசியல் குழுக்களை கட்டுப்படுத்தும் திட்டமிட்ட செயற்பாடுகளால் சுமந்திரன் அணியே இவற்றை கட்டுப்படுத்துதல்,
சத்தியலிங்கத்தை தேசிய பட்டியல் எம்.பி.யாக நியமித்து பாராளுமன்றத்திற்கு உள்ளே சாணக்கியனுக்கும், வெளியே தனக்கும் பலத்தை அதிகரித்தமை,
பாராளுமன்றத்தில் சத்தியலிங்கத்தை பிரதம கொறடாவாகவும், சாணக்கியனை பாராளுமன்ற செயற்பாடுகள் பொறுப்பாளராகவும் நியமித்தமை,
சிறிதரனுக்கு எதிராக சாராயத்தவறணைகளுக்கு சிபாரிசு செய்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு தொடர்ந்தும் அரசாங்கத்தை கோருதல்,
அரசியல் அமைப்பு சபையில் கணக்காய்வாளர் நாயக தேர்வில் சிறிதரனின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்தியமை,
ஓடு மீன் ஓடி உறுமீன் வரும்வரையும் காத்திருந்த கொக்காக,
கிடைத்த சந்தர்ப்பங்களில் படிப்படியாக காய்களை நகர்த்தி, இன்று கணக்காய்வாளர் நியமனத்தில் சிறிதரனுக்கு எதிராக வலுவான குற்றச்சாட்டு தமிழரசுக்கட்சியிடம் இருந்து மட்டும் அல்ல எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தும் எழும்போது சாட்டையை கையில் எடுத்திருக்கிறார் சுமந்திரன்.
அரசியல் குழு சிறிதரனை அரசியல் அமைப்பு குழுவில் இருந்து விலகுமாறு கோரியது. அது இன்னும் நிகழவில்லை அது சுமந்திரனால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
அடுத்து தயாராக வைத்திருந்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியை விட்டு விலகுமாறு முன்னையதற்கு சமாந்தரமாக அடுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியைப் பறிப்பது தமிழரசுக்கட்சியின் சுய தீர்மானத்தில் தங்கியிருக்கிறது. இதை செய்யாமல் இருப்பதாயின் சிறிதரன் பாராளுமன்ற குழுவிலும், அரசியல், மத்திய குழுக்களிலும், ஏன் பொதுச்சபையிலும் கூட தனது பெரும்பான்மையை காட்ட வேண்டி வரலாம். ஆனால் அதற்கான – சிறிதரனுக்கு சாதகமான சூழல் இன்றில்லை என்றே கூறப்படுகிறது.
நீதி மன்றத்தை நாடினால் சுமந்திரனை எதிர்த்து வாதிடவேண்டி இருக்கும்.
சிறிதரன் கிளிநொச்சிக்குள் தனித்து விடப்பட்டுள்ளார். கிளி நொச்சியில் சிறிதரனுக்கு எதிரான சந்திரகுமார் அணி சரியான நேரத்தில் சுமந்திரனுக்கு சார்பாக காய்களை நகர்த்துகிறது. பதிவுகளை பார்த்திருப்பீர்கள்.
இப்போது கிழக்கு எம்.பி.க்கள் தங்கள் பதவிகளை தக்க வைக்க சிறிதரனின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவிக்கு ஆப்பு வைக்க தீர்மானித்து விட்டனர்.
அமரர் இராசமாணிக்கத்தின் 113வது ஜனனதின விழாவில் சிவஞானமும், சுமந்திரனும் வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிட்டவர்களே , அழைப்பின்றி ஓடிப்போய் நிகழ்வில் கலந்து. கொண்டிருக்கிறார்கள்.
யார் என்னத்தை சொன்னாலும், தமிழரசை காப்பாற்ற மட்டும் அல்ல சிறிதரனையும் காப்பாற்ற சுத்துமாத்துக்களை செய்தாவது சுமந்திரனால் மட்டுமே முடியும்.
— அழகு குணசீலன் —