இலங்கைக்கு IMF பாராட்டு!

இலங்கைக்கு IMF பாராட்டு!

'டிட்வா' (Ditwa) சுழற்காற்றினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அනුர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த இந்த பிரதிநிதிகள் குழு, தீவு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'டிட்வா' சுழற்காற்றினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டதுடன், அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கையின் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் வேளையில் ஏற்பட்ட இந்த அனர்த்தம் மற்றும் அதன் மூலம் மக்கள் எதிர்கொண்ட துயரமான நிலைமை குறித்து தமது வருத்தத்தை வெளியிட்ட பிரதிநிதிகள் குழு, அனர்த்த சவால்களைத் தாங்கிக்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் எடுத்த துரித நடவடிக்கைகளைப் பாராட்டியது.

அனர்த்தத்தின் போது அரசாங்கம் செயற்பட்ட விதம், தாம் சந்தித்த பல பொதுமக்களினால் பாராட்டப்பட்டதாகவும், இது அரசாங்கம் பெற்ற ஒரு விசேட வெற்றி எனவும் பிரதிநிதிகள் குழு இதன்போது சுட்டிக்காட்டியது.

அத்துடன், கடந்த ஆண்டில் இலங்கை அரசாங்கம் கடைபிடித்த உயர் நிதி ஒழுக்கம் இந்த சவாலை எதிர்கொள்வதில் ஒரு முக்கிய காரணியாக அமைந்ததாக சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள் குழு, இந்த பணிகளுக்காக 500 பில்லியன் ரூபா மேலதிக மதிப்பீட்டை (Supplementary Estimate) முன்வைக்க அரசாங்கத்திற்கு முடிந்தமைக்கு திறைசேரியில் மேலதிக நிதி இருந்ததே காரணம் என்றும், அது மிகவும் பாராட்டத்தக்க ஒரு நிலைமை என்றும் குறிப்பிட்டனர்.

06 வது தவணை குறித்த பேச்சுவார்த்தைகள் மார்ச் மாதத்தில் மீண்டும் ஆரம்பம்

கடுமையான அனர்த்த நிலைமைக்கு மத்தியிலும் இலங்கை தற்போது சரியான பொருளாதார திசையில் பயணித்துக்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி (EFF) திட்டத்தின் கீழ் 06 வது தவணையை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் மார்ச் மாத அளவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்த அனர்த்தத்தினால் வறுமையில் வாழும் கிராமப்புற மக்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிராமப்புற மக்களின் வாழ்க்கையோடு நேரடியாகத் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதாரங்கள் பெருமளவில் சீர்குலைந்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அනුර குமார திசாநாயக்க, கிராமப்புற மக்களின் வாழ்க்கையைப் பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவே இந்த 500 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கை எவ்வகையிலும் சரியான நிதி முகாமைத்துவத்திலிருந்து விலகிச் சென்ற அல்லது பொறுப்பற்ற ஒரு வழிமுறை அல்ல என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புள்ளிவிபரங்கள் மூலம் காட்டப்படும் பொருளாதார வெற்றிகள் உண்மையாகவே சாதாரண மக்களை சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கடந்தகால பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட நிலைமைகளால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் அந்தத் திசையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

உடன்படிக்கையில் மாற்றமின்றி தொடர இணக்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்திற்குரிய உடன்படிக்கையில் எவ்வித மாற்றங்களையும் செய்யாமல், அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இரு தரப்பினரும் இதன்போது உடன்பட்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் அதன் ஆசிய பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் (Krishna Srinivasan), ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பிரதிப் பணிப்பாளர் சஞ்சய பாந்த் (Sanjaya Panth), தூதுக்குழுவின் தலைவர் இவான் பாபகோர்ஜியோ (Evan Papageorgiou), அதன் இந்நாட்டுக்கான வதிவிடப் பிரதிநிதி மார்தா வோல்டெமிக்கேல் (Martha Woldemichael) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி