பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் சக்கரம் கழன்று விழுந்த தருணம் வீடியோவில் பதிவாகியுள்ளது.
திங்கட்கிழமை அன்று லாஸ் வேகாஸிலிருந்து (Las Vegas) லண்டன் நோக்கிப் புறப்பட்டதாகக் கருதப்படும் ஏர்பஸ் A350-1000 விமானத்திலிருந்தே அதன் பின்சக்கரம் பிரிந்து விழுந்துள்ளது. விமானம் உயரே எழும்பியபோது, அதன் தரையிறங்கும் தொகுதியிலிருந்து (landing gear) நிழல் போன்ற ஒரு சக்கரம் கீழே விழுவது காணப்பட்டது.
இந்தச் சம்பவம் நடந்தபோது, நெவாடா நகரில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Harry Reid International Airport) உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு சுமார் 9.10 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டது.
Flightradar24 தரவுகளின்படி, சக்கரம் விழுந்த போதிலும் அந்த விமானம் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து பாதுகாப்பாகப் பயணித்து, திட்டமிட்ட நேரத்தை விட 27 நிமிடங்கள் முன்னதாகவே லண்டனில் தரையிறங்கியது.
சக்கரம் கழன்று விழுந்ததற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
இது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "பாதுகாப்பும் உறுதியுமே நாங்கள் செய்யும் அனைத்திற்கும் அடிப்படையாகும். இது தொடர்பான விசாரணைகளில் அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்," என்று தெரிவித்துள்ளது.
ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையம் (LAS) விடுத்துள்ள அறிக்கையில், "நேற்றிரவு இங்கிருந்து புறப்பட்டு, லண்டனில் எந்தவித மேலதிக பாதிப்புகளும் இன்றி பாதுகாப்பாகத் தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொடர்பான சம்பவத்தை நாங்கள் அறிந்துள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
விமான ஓடுதளத்திலிருந்து அந்த டயர் மீட்கப்பட்டதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவோ அல்லது விமான நிலைய சொத்துக்களுக்கு சேதம் ஏற்படவோ இல்லை என்றும் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.