மில்லியன் கணக்கான கனடிய வீடுகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரேடான் வாயு!

மில்லியன் கணக்கான கனடிய வீடுகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரேடான் வாயு!

மில்லியன் கணக்கான கனடிய வீடுகளுக்குள் பதுங்கியிருக்கும், கண்ணுக்குத் தெரியாத, மணம் அற்ற புற்றுநோய் காரணியான ரேடான் வாயுவை உங்களால் பார்க்கவோ முகரவோ முடியாது.

கனடாவிலுள்ள சுமார் ஐந்து குடியிருப்பு கட்டிடங்களில் ஒன்றில் ரேடான் அளவு அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2000-களின் பிற்பகுதியிலிருந்து இப்போது இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. ரேடான் வாயுவினால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோயால் ஆண்டுதோறும் சுமார் 3,200 பேர் உயிரிழப்பதாக ஃபெடரல் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இந்த கதிரியக்க வாயு நிலத்திலிருந்து வெளியாகி நாடு முழுவதும் உள்ள கட்டிடங்களுக்குள் பரவுகிறது. நவீன கட்டிட வடிவமைப்புகளும், திருத்த வேலைகளும் (Renovations) அதிகமான கனடியர்கள் இந்த வாயுவின் பாதிப்புக்கு உள்ளாவதற்குக் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். "நாங்கள் வசிக்கும் குளிர்ச்சியான காலநிலைக்கு ஏற்ப, வீட்டின் வெப்பத்தைத் தக்கவைக்க காற்றை வெளியே போகவிடாமல் அடைத்து வைப்பதில் நாங்கள் வல்லவர்களாக இருக்கிறோம்," என்று ஹெல்த் கனடாவின் (Health Canada) ரேடான் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் பாவெல் மெகார்ஸ்கி (Pawel Mekarski) கூறுகிறார்.

"பல நேரங்களில் வீடுகளைப் புதுப்பிக்கும்போது, காற்றோட்ட வசதிகளை (Ventilation) முறையாக ஏற்படுத்தாமல், கட்டிடத்தை முற்றிலும் காற்றுப் புகாதவாறு (Airtight) மாற்ற முயற்சிக்கிறோம்."

இதற்கு ஒரு தீர்வாக, கடந்த டிசம்பர் இறுதியில் வெளியிடப்பட்ட தேசிய கட்டிட விதிகளின் (National Building Code) புதிய திருத்தத்தின்படி, புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் 'பேசிவ் ரேடான் ஸ்டேக்' (Passive radon stack) பொருத்தப்பட வேண்டும். இது ஒரு புகைபோக்கி போலச் செயல்பட்டு வீட்டின் உள்ளே ரேடான் வாயு சேர்வதைக் குறைக்கும்.

ரேடான் பரிசோதனை செய்வது எப்படி?

உங்கள் வீட்டில் ரேடான் அளவு அதிகமாக உள்ளதா என்பதை அறிய ஒரே வழி அதைப் பரிசோதிப்பது மட்டுமே. இதற்கு ஒரு நிபுணரை நீங்கள் அழைக்கலாம் அல்லது நீங்களே ஒரு 'டெஸ்ட் கிட்' (Test kit) வாங்கலாம். சில பகுதிகளில் நூலகங்கள் அல்லது பொது சுகாதார நிலையங்கள் மூலம் இவை இலவசமாகவும் வழங்கப்படுகின்றன.

குறைந்தது 91 நாட்கள் முதல் ஒரு வருடம் வரை பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஹெல்த் கனடா பரிந்துரைக்கிறது. குறிப்பாக ஜன்னல் மற்றும் கதவுகள் மூடப்பட்டிருக்கும் குளிர் காலங்களில் இதைச் செய்வது மிகவும் துல்லியமான முடிவைத் தரும்.

ரேடான் தடுப்பு முறைகள் (Mitigation)

கனடிய வழிகாட்டுதலின்படி, ஒரு கன மீட்டருக்கு 200 பெக்கரல்ஸ் (200 Bq/m³) என்பது பாதுகாப்பான அளவாகும். இதற்கு மேல் இருந்தால், 'ரேடான் மெடிகேஷன் சிஸ்டம்' பொருத்தப்பட வேண்டும். இது வீட்டின் அடித்தளத்திலிருந்து கூரை வரை செல்லும் ஒரு குழாய் மற்றும் சிறிய மின்விசிறியை உள்ளடக்கியது. இது ரேடான் வாயு வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே அதை வெளியேற்றிவிடும்.

செலவு ஒரு தடையாக இருக்கிறதா? இந்தத் தடுப்பு முறைகளைப் பொருத்த $2,000 முதல் $5,000 வரை (சில நேரங்களில் அதற்கு மேலும்) செலவாகலாம். ஒன்டாரியோவில் புதிய வீடுகளுக்கான உத்தரவாதத் திட்டத்தின் (Home warranty program) கீழ் இதற்கான செலவு ஈடுசெய்யப்படுகிறது. மேனிடோபாவில் மின்சாரக் கட்டணத்துடன் (Hydro bills) சேர்த்து இந்தச் செலவை தவணை முறையில் செலுத்த வசதியுள்ளது.

இருப்பினும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய குடும்பங்களுக்கு இந்தச் செலவு ஒரு பெரிய தடையாக இருப்பதாக கனடிய நுரையீரல் சங்கத்தின் (Canadian Lung Association) தலைமை நிர்வாகி சாரா பட்சன் கூறுகிறார்.

புற்றுநோயிலிருந்து மீண்ட மருத்துவரின் அனுபவம்

பி.சி. கேன்சர் (B.C. Cancer) புற்றுநோய் நிபுணரான டாக்டர் காங் கூ (Dr. Kong Khoo), 2020 இல் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தனது வீட்டில் ரேடான் அளவைப் பரிசோதித்தபோது, அது 400 முதல் 600 Bq/m³ வரை (அனுமதிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிகம்) இருப்பதைக் கண்டறிந்தார்.

"ரேடான் பரிசோதனைக்கான செலவு மிகக் குறைவு. ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் தங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க இதைச் செய்வது அவசியம். ஏனெனில் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்களா என்பதை அறிய இதைத் தவிர வேறு வழியில்லை," என்று அவர் கூறுகிறார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி