அமெரிக்கா மற்றும் இலங்கை இடையே எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் இலங்கையிலுள்ள பதில் அமெரிக்க தூதுவர் ஜேன் ஹோவெல் (Jane Howell) ஆகியோருக்கு இடையிலான இந்தச் சந்திப்பு எரிசக்தி அமைச்சில் நடைபெற்றதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் எரிசக்தி துறையில் ஏற்பட்டு வரும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் குறித்து தமது நாடு அவதானம் செலுத்தி வருவதாக பதில் அமெரிக்க தூதுவர் இதன்போது தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில், இலங்கையின் எரிசக்தி மற்றும் மின்சக்தி ஆகிய இரு துறைகளிலும் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து எரிசக்தி அமைச்சர் விரிவாக விளக்கமளித்தார். அத்துடன், அமெரிக்க முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் துறைகள் குறித்தும், உருவாகி வரும் புதிய வாய்ப்புகள் குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார்.
மின்சாரத் துறையை மறுசீரமைக்கும் திட்டம் மற்றும் பெட்ரோலியத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.