காணாமல்போன நோவா ஸ்கோடியா சிறுவர்களின் மாற்றாந்தந்தை மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு!

காணாமல்போன நோவா ஸ்கோடியா சிறுவர்களின் மாற்றாந்தந்தை மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு!

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாகக் காணாமல் போயுள்ள நோவா ஸ்கோடியா (Nova Scotia) மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களின் மாற்றாந்தந்தை மீது தாக்குதல், பாலியல் வன்கொடுமை மற்றும் ஒருவரை வலுக்கட்டாயமாக ஓரிடத்தில் அடைத்து வைத்தல் (Forcible confinement) ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஆர்.சி.எம்.பி (RCMP) காவல்துறை தெரிவித்துள்ளது.

லான்ஸ்டவுன் (Lansdowne) பகுதியைச் சேர்ந்த 34 வயதான டேனியல் ராபர்ட் மார்டெல் (Daniel Robert Martell) திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் வயது வந்த ஒருவரை (Adult victim) பாதித்தவை என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

மார்டெல் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார், அவர் மீண்டும் மார்ச் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும். இது குறித்து கருத்து அறிய குளோபல் நியூஸ் (Global News) மார்டெல்லைத் தொடர்பு கொண்டுள்ளது.

காணாமல் போன லில்லி மற்றும் ஜாக் சல்லிவன் ஆகிய சிறுவர்களின் தாயான மலேயா ப்ரூக்ஸ்-முர்ரேவுடன் (Malehya Brooks-Murray) மார்டெல் இணைந்து வாழ்ந்து வந்தார். இந்தச் சிறுவர்கள் (அப்போது அவர்களின் வயது 6 மற்றும் 4) பிக்டோ கவுண்டியில் (Pictou County) உள்ள அவர்களது வீட்டிலிருந்து மே 2, 2025 அன்று காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

சிறுவர்கள் காணாமல் போனது குறித்து இதற்கு முன் பலமுறை செய்தியாளர்களிடம் பேசியிருந்த மார்டெல், குழந்தைகள் இருவரும் காடுகள் நிறைந்த பகுதியான வீட்டின் அருகிலிருந்து அலைந்து திரிந்து எங்கோ சென்றிருக்கலாம் என்று தாங்கள் கருதியதாகவும், அதன்பிறகே 911 க்கு அழைத்ததாகவும் கூறியிருந்தார். காவல்துறை, தன்னார்வலர்கள் மற்றும் சடலங்களைக் கண்டறியும் மோப்ப நாய்களைக் கொண்டு பலமுறை தீவிர தேடுதல் நடத்தப்பட்ட போதிலும், சிறுவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, மார்டெல் தன்னிடம் உடல் ரீதியான வன்முறையில் ஈடுபட்டதாக சிறுவர்களின் தாய் காவல்துறை விசாரணையில் தெரிவித்திருந்தார். ஆனால் மார்டெல் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, தன்னை ஒரு கெட்ட மனிதனாகச் சித்தரிப்பதற்காகவே இவ்வாறான கதைகள் கூறப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

தற்போது அவர் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள், சிறுவர்களின் தாய் சுமத்திய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதா என்பதை காவல்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி