துபாய் சாலையை கலக்க போகும் 250 புதிய பேருந்துகள்; அதில் என்னென்ன அம்சங்கள் உள்ளன தெரியுமா?

துபாய் சாலையை கலக்க போகும் 250 புதிய பேருந்துகள்; அதில் என்னென்ன அம்சங்கள் உள்ளன தெரியுமா?

மெட்ரோவுக்கு பிறகு துபாயில் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்தாக அரசு பேருந்துகள் உள்ளன. 2024ஆம் ஆண்டில், துபாயின் அரசு பேருந்துகளில் 187.7 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். இது 2023ஆம் ஆண்டை விட 8 அதிகம் ஆகும்.

இப்படி ஆண்டுதோறும் அரசு பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டும், பசுமை பொது போக்குவரத்தை கருத்தில் கொண்டும் துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சார்பில் 735 பேருந்துகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் முதல்கட்டமாக 250 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

250 புதிய பேருந்துகள் அறிமுகம்

துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் வாங்கப்பட்டுள்ள 250 புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 40 மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகள் ஜாங்டாங் (Zhongtong) எனப்படும் சீனாவை சேர்ந்த பேருந்து தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கப்பட்டது.

210 பேருந்துகள் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட யூரோ 6 தரநிலைகளை பூர்த்தி செய்யும் டீசல் பேருந்துகள் ஆகும். மீதம் உள்ள பேருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மின்சார பேருந்துகளை சாலை மற்றும் போக்குவரத்து  ஆணையத்தின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் மத்தார் அல் தாயர் ஆய்வு செய்தார். அவருடன் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது ஹாஷேம் பஹ்ரோஸ்யான் உள்ளிட்ட மூத்த RTA அதிகாரிகள் பேருந்தை ஆய்வு செய்தனர்.

மின்சாரப் பேருந்தின் சிறப்பம்சங்கள்

இதில் 434 கிலோவாட் பேட்டரி உள்ளது. இதன் மூலம் 80 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் கால நிலைக்கு ஏற்றவாறு பேருந்து குளிர்சாதன அமைப்புக்கு மேம்பட்ட பேட்டரியும் உள்ளது. 12 மீட்டர் நீளமுள்ள இந்த பேருந்தில் 70 பயணிகள் வரை பயணிக்க முடியும், மேலும் இதில் 360 டிகிரி சுழலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 29 முதல் துபாயின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்தவும், குடியிருப்பாளர்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் ஐந்து புதிய பொதுப் பேருந்து வழித்தடங்களை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி