மனித உரிமைகள் பேரவைக்கும், 2026 செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடருக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைக்காக, காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு கோரி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79/173 தீர்மானத்திற்கு அமைய, பொதுச்செயலாளரால் வழங்கப்பட வேண்டிய "தொடர்புடைய நடைமுறைப் பரிந்துரைகள் உட்பட, தற்போதைய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த விரிவான அறிக்கைக்காக" இத்தகவல்கள் கோரப்படுகின்றன.
காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பில் 2024 ஜூலை 1 ஆம் திகதி முதல் 2026 ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் இந்த அறிக்கை, மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படும்.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலையைத் தீர்மானிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கான நடவடிக்கைகள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள், அத்துடன் காணாமல் ஆக்கப்படுதலைத் தடுப்பதற்கென எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இந்த அறிவித்தல் மூலம் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பான தற்போதைய பிரச்சினைகள் உட்பட, இவ்வறிக்கையைத் தயாரிப்பதற்குப் பொருத்தமானவை எனக் கருதப்படும் எந்தவொரு தகவலையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வழங்க முடியும். குறிப்பாக, பின்வரும் விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என அந்த அலுவலகம் வலியுறுத்தியுள்ளது:
நபர்கள் காணாமல் ஆக்கப்படுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டரீதியான மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட நபர்களின் நிலை மற்றும் அவர்கள் இருக்குமிடம் என்பவற்றை கண்டறிய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.
காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களின் நிலைமை.
காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடரல்கள் குறித்த தகவல்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட நபர்களின் உடல்கள் தொடர்பான தடயவியல் தேடல்கள் மற்றும் அடையாளங்காணல்கள் குறித்த தகவல்கள்.
சமூக நலன்புரி, உளவியல் மற்றும் சமூக-உளவியல் ஆதரவு, நிதி விடயங்கள், குடும்பச் சட்டம் மற்றும் சொத்துரிமை போன்ற விடயங்களில் குறிப்பாகப் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளில் கவனம் செலுத்தி, காணாமல் ஆக்கப்பட்ட நபர்களின் சட்ட ரீதியான அந்தஸ்து மற்றும் அவர்களது குடும்பங்களுக்குக் கிடைக்கும் ஆதரவு குறித்த தகவல்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த ஏனைய பொருத்தமான தகவல்கள்.
பிரசுரிக்க வேண்டாம் என விசேடமாகக் கோரப்படாத பட்சத்தில், வழங்கப்படுகின்ற தகவல்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்படும்.
தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டிய விபரம்:
திகதி: 2026 மார்ச் 2 ஆம் திகதிக்கு முன்னர்.
மொழி: ஆங்கிலம், பிரெஞ்சு அல்லது ஸ்பானிஷ்.
சொற்களின் அளவு: அதிகபட்சம் 3,000 சொற்கள்.
மின்னஞ்சல்: ohchr-registry@un.org
தலைப்பு (Subject): “Inputs to SG report on missing persons” எனக் குறிப்பிடப்பட வேண்டும்.
கோப்பு வடிவம்: தகவல்கள் Word அல்லது PDF வடிவில் இணைக்கப்பட வேண்டும்.