கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வசித்து வந்த 11 இளைஞர்கள், கடற்படையின் கப்பம் பெறும் குழுவொன்றினால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் வெளிப்படுத்தப்பட்ட திருகோணமலை கன்சைட் (Gunside) கடற்படை முகாம் பற்றிய விசேட அறிக்கையொன்றை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்திலேயே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்படை முகாம் வளாகத்தில் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வௌியாகியுள்ள நபர்கள் தொடர்பான பல விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அந்த நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகள் குறித்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய நபர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் திரட்டப்பட்ட தகவல்களும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்ட நபர் ஒருவர் தொடர்பாக பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போதே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது காணாமல் ஆக்கப்பட்டுள்ள இந்த நபரும், கன்சைட் முகாம் வளாகத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.