இலங்கையிலுள்ள இராணுவ முகாம் ஒன்றில் ஓராண்டுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த மக்களை சந்திப்பதற்கு உலகம் முழுவதும் உள்ள அகதிகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதானமான நிறுவனமொன்றுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மியன்மார் யுத்தத்திலிருந்து தப்பிச்செல்லும் வழியில் முல்லைத்தீவு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீனவர்களால் கரைக்கு அழைத்துவரப்பட்ட ஒரு ரோஹிங்யா அகதிகள் குழுவினர் இன்னமும் முல்லைத்தீவு விமானப்படை முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அனுர குமார திசாநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு வந்த முதலாவது யுத்த அகதிகள் குழுவினர் பற்றி ஆராய்ந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் (UNHCR) இலங்கை அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கைகள் முன்வைத்திருந்த போதிலும் அதற்கான உத்தியோகபூர்வ அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.
“அக்குழுவினரின் தேவைகள், அபாயகரமான நிலைமை மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான கோரிக்கைகளை மதிப்பிடுவதற்கு அனுமதி கோரி ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் (UNHCR) தொடர்ந்தும் உத்தியோகபூர்வ கோரிக்கைகளை விடுத்து வருகின்றபோதிலும், இதுவரை அந்த அனுமதி கிடைக்கவில்லை” என பேங்கொக் நகரில் உள்ள UNHCR அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் மரிகோ ஹோல் ‘த லீடர்’ இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.
“இந்தக் குழுவினரின் நலன் குறித்து நாம் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றோம், குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுகிறது. இந்த புகலிட கோரிக்கையாளர்கள் மனிதாபிமான தேவைகளை மற்றும் உதவித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களது சர்வதேச பாதுகாப்புத் தேவைகளை மதிப்பிடவும் அவர்களைச் சந்திப்பதற்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்துக்கு அனுமதி வழங்கி, அவர்களைத் தடுப்புக்காவலிலிருந்து விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வேண்டிக்கொள்கிறோம்” என ஆசியா பசுபிக் பிராந்திய அலுவலகத்தின் தொடர்பு அதிகாரி ஹோல் எமது கேள்விக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்யா அகதிகள் குறித்து ஆராய்வதற்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து இன்னமும் முறையான அனுமதி கிடைக்கவில்லை என உலகின் பிரதானமான அகதிகள் தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் நிபுணத்துவம் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையை இது தொடர்பிலான தலையீடுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் மேலும் தாமதமின்றி அனுமதியை வழங்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தெரிவித்துள்ளது.
“அகதிகள் தொடர்பான விடயங்களைக் கையாள்வதில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் காரியாலயத்துக்கே விசேட நிபுணத்துவம் உள்ளது. அதனால்தான் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு என்ற ரீதியில் நாமும் அரசாங்கத்திடம் மேலும் தாமதிக்காமல் உடனடியாக இதற்குச் சரியான பதிலை வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஏனெனில் இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்,” என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி கெஹான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாகக் கருதுதல்
விடுதலை செய்யப்படுவதற்கான திகதி எதுவுமின்றி இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களேயன்றி குற்றவாளிகள் அல்லர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி கெஹான் குணதிலக்க வலியுறுத்தி கூறியுள்ளார்.
“இந்த மக்கள் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் இப்போது அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக அல்லாமல் குற்றவாளிகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள். இது மிகவும் வருத்தத்திற்குரிய விடயம்” என அவர் கூறினார்.
பழுதடைந்த படகு ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது 2024 டிசம்பர் மாதம் 19ஆம் திகதி முல்லைத்தீவு கடற்கரைக்கு அடித்துவரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் குழுவினரை முதன்முதலில் மீட்டு நலன்புரி வசதிகளை வழங்கியவர்கள் அந்த கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நினைவுகளைச் சுமந்து நிற்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களாவர்.
பின்னர் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்ட அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் மிரிஹான தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இதுவரை அதிகாரிகளால் வெளிப்படுத்தப்படாத ஏதோ ஒரு ‘உயர்மட்ட’ தலையீட்டின் காரணமாக முல்லைத்தீவு விமானப்படை முகாமுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். அன்று முதல் இன்று வரை அவர்கள் வெளி சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பல கோரிக்கைகளுக்குப் பின்னர் முதன்முதலாக அவர்களைச் சந்திப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 2025 ஜனவரி 9 திகதியன்று அனுமதி கிடைத்தது.
விமானப்படை முகாமுக்கு அனுப்பப்படும்போது 57 சிறுவர்கள் உட்பட 116 பேர் இருந்துள்ளதோடு, பின்னர் புதிதாகப்பிறந்த மேலும் சில குழந்தைகளும் இந்தக் குழுவுடன் இணைந்துள்ளனர். நம்பகமான தகவல்களின்படி கடந்த ஆண்டின் இறுதியில் இந்த அகதிகள் குழுவில் இருந்த ஒரு சிறுமியும் ஒரு குழந்தையைப் பிரசவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகள் அவ்விடயம் குறித்து எந்தவிதமான கரிசனையும் காட்டாது அந்தத் சிறுவயது தாயை தொடர்ந்தும் விமானப்படை முகாமிலேயே தடுத்து வைத்துள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அகதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தாம் விருப்பத்துடன் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய அலுவலகம் எமக்கு அனுப்பியுள்ள பதிலில் தெரிவித்துள்ளது.
அவர்கள் தடுப்புக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டதும், அவர்களது மனிதாபிமான தேவைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு இலங்கையிலுள்ள பங்காளர்களுடன் UNHCR ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும்.
அகதிகள் முகாமிலிருந்து விடுவிக்கப்படும் வரை காத்திருக்காமல் தேவையான அணுகலைப் பெற்று அவர்களுக்கான மனிதாபிமான நிவாரண சேவைகளை உடனடியாக வழங்க வேண்டுமென கலாநிதி கெஹான் குணதிலக்க கூறியுள்ளார்.
மனிதாபிமான நெருக்கடி
“இவர்கள் அகதிகளா இல்லையா என்பதை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் காரியாலயத்தினால் மாத்திரமே துல்லியமாகத் தீர்மானித்துச் சொல்ல முடியும். அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதற்காக ஒதுங்கியிருக்க முடியாது. இது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒரு மனிதாபிமான நெருக்கடியாகும். ஆணைக்குழு என்ற ரீதியில் நாமும் பலமுறை UNHCR-இற்கும் அரசாங்கத்துக்கும், அரசாங்கத்தின் ஏனைய பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களுக்கும் இது குறித்துத் தெரிவித்துள்ளோம். ஆனால் யாரும் அதைக் கருத்தில் கொள்ளவில்லை,” என கலாநிதி குணதிலக்க கூறினார்.
மேலும், ரோஹிங்யா அகதிகள் தொடர்பில் அரசாங்கம் பின்பற்றப்படும் கொள்கையினாலேயே இவை அனைத்தும் இடம்பெறுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
“இங்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை கொள்கை சார்ந்தது. இவர்களை நாம் கவனித்தால் மேலும் ரோஹிங்யா அகதிகள் இங்கு வருவார்கள் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இது முற்றிலும் தவறான கருத்தாகும். அதுமட்டுமன்றி, இனிமேல் வரவுள்ளவர்களைப் பற்றி அல்லாது, ஏற்கனவே வந்திருப்பவர்களுக்கு எவ்வாறு நிவாரணம் வழங்குவது என்பது குறித்தே இப்போது நாம் கவனிக்கம் வேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.
விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் வயதில் குறைந்த சிறுவர்கள், கைக்குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பதால், அவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடனும் மனிதாபிமானத்துடனும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதித்து நடக்க வேண்டியதன் அவசியத்தை கலாநிதி கெஹான் குணதிலக்க சுட்டிக்காட்டினார். சிறுவர்களின் உரிமைகளை பொருட்படுத்தாது செயற்படுவதற்கு இலங்கைக்கு எந்தவிதமான சட்ட ரீதியான உரிமையும் இல்லை என்பதையும் அவர் கடுமையாக வலியுறுத்தினார்.
“ஓர் அரசு என்ற வகையில் சர்வதேச உடன்படிக்கை சட்டதிட்டங்களுக்கு ஏற்ப செயற்படுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் – குறிப்பாக சிறுவர்கள் தொடர்பில். சிறுவர்கள் தொடர்பாக உலகம் முழுவதற்கும் ஒரு பொதுவான சட்டமே உள்ளது. சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (ICCPR) கீழும் சிறுவர்கள் தொடர்பில் கூடுதல் அக்கறை காட்டுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். அதுமட்டுமன்றி, எமது நாட்டு சட்டத்தின் கீழும் சிறுவர்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்போது அவர்களது நலனுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது,” என மிகுந்த கவலையுடன் தெரிவித்த கலாநிதி குணதிலக்க, இலங்கையின் பெரும்பாலான அரச நிறுவனங்கள் இது குறித்த சரியான புரிதல் இன்றிச் செயற்படுவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டில் சிறுவர்கள் தொடர்பாக நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் அந்த நாட்டு சிறுவர்களுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஒன்றல்ல என வாதிடும் கலாநிதி குணதிலக்க, அவ்வாறாயின் ரோஹிங்யா சிறுவர்கள் முஸ்லிம் ரோஹிங்யாக்கள் என்பதற்காக எவ்வாறு பாகுபாட்டுடன் நடத்தப்பட முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுவர் உரிமைகளைப் புறக்கணிக்கும் இலங்கை அரச அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த நிலைமை குறித்து பலமுறை வெளிவிவகார அமைச்சு, குடிவரவு குடியகல்வு திணைக்களம், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர்கள் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உட்பட சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான விடயங்களைக் கையாளும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தி எழுத்துமூலமாக விடயங்களைச் சமர்ப்பித்துள்ளதாக கலாநிதி கெஹான் குணதிலக்க தெரிவித்தார்.
முல்லைத்தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் குறித்து நாம் வினவியபோது, இது குறித்து இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் வினவுமாறு UNHCR ஆசிய பசுபிக் பிராந்திய தொடர்பு அதிகாரி மரிகோ ஹோல் கேட்டுக்கொண்டார்.
ஓராண்டு காலத்துக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள பணியகம் எவ்வாறான தலையீடுகளைச் செய்துள்ளன என வினவுவதற்கு கடந்த ஓராண்டு காலமாக பலமுறை தொலைபேசி ஊடாக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததைப் போலவே இம்முறையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.
கே.விஜேசிங்க