தேர்தல் காலத்தில் தான் ஒரு இனவாதி அல்லவென உறுதி அளித்திருந்த ஜனாதிபதி தற்போது பௌத்த மதத்துக்குச் சார்பாக நடந்துகொள்வதோடு ஏனைய மதத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒரு நிலையை வெளிப்படுத்துவதாக தமிழ் அரசியல் தலைவரொருவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி இனவாதக் கருத்துகளை வெளியிடுகின்றார் என்ற கருத்து முன்வைக்கப்பட்டபோது, அவருக்கு அவ்வாறான சிந்தனை இருக்க வாய்ப்பில்லை என நானே கூறியிருந்தேன். ஆனால் ஜனாதிபதியான பின்னர் அவருக்கும் பல்வேறு அழுத்தங்கள் இருப்பதை இப்போது காணக்கூடியதாக உள்ளது.”
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் நிறைவேற்று அதிகாரம் செயற்பட்ட விதம் இதனைப் புலப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
“குறிப்பாக திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அந்தச் சிலையை அங்கே வைக்கக்கூடாது எனக் கூறி பொலிஸாரே முதலில் அதனை அகற்றிவிட்டு பின்னர் பாதுகாப்புக்காக அகற்றப்பட்டதாகக் கூறி அதே பொலிஸார் மீண்டும் அச்சிலையை அங்கே வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை இந்த அரசாங்கத்தின் ஒரு செயற்பாடாகும். தற்போது நீதிமன்றம் வேறொரு நடவடிக்கையை எடுத்துள்ளது, அது வேறு விடயம். ஆனால் இது நிறைவேற்று அதிகாரம் இவ்வாறு பௌத்த மதத்துக்கு நெகிழ்ந்து கொடுத்து ஏனைய மதத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்ட ஒரு சந்தர்ப்பமாகும்.”
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் புதிய புத்தர் சிலையை நிறுவுவதற்கு எதிராக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் கடற்கரை வளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதிகளான பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களை ஜனவரி 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடும் ஒன்றாக - தேசிய செயற்றிட்டம்” வட மாகாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த இடத்தின் பெயரைக் குறிப்பிடாது, வடக்கில் ஒரு வழிபாட்டுத்தலத்தைச் சுற்றி இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு மக்கள் ஒன்றுகூடுவதாகத் தெரிவித்திருந்தார்.
இராணுவத்தின் அனுசரணையுடன் காங்கேசன்துறை தையிட்டியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) பங்களிப்புடன் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுத்து வரும் போராட்டத்துக்கு இரண்டு வருடங்கள் கடந்தபின்பும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
“ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் வந்து அந்த விகாரையைச் சுற்றி ஒன்றுகூடுகிறார்கள். காணிக்காக அல்ல, இனவாதத்திற்காகவே. அவ்வாறு பௌர்ணமி தினங்களில் அங்கே வந்து கூச்சலிடுபவர்களில் யாருக்காவது அங்கு காணி இருக்கின்றதா என ஆராயுமாறு நான் புலனாய்வுப் பிரிவினருக்குக் கூறினேன். எனவே, அதிகாரத்தை இழந்த இனவாதக் குழுக்கள் ஆங்காங்கே மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முயற்சி செய்கின்றன.”
போராட்டக்காரர்களை இனவாதிகள் எனக் கண்டிக்கும் அந்தப் பிரகடனம் தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது பலவந்தமாக அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் மட்டும்தான் போராட வேண்டும் என்பதில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார்.
“அங்கே காணிகளைக் கோரிப் போராடுபவர்கள் காணி உரிமையாளர்கள் அல்லவென்றும், அவர்கள் யார் என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்வதற்கு சி.ஐ.டி ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். இது மிகவும் மோசமான ஒரு செயலாகும். காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் மட்டும்தான் போராட வேண்டுமா? தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இராணுவம் நீண்டகாலமாக அங்கே தங்கியிருக்கின்றது. அவற்றை விடுவிக்குமாறு கோருவதற்கு யாருக்கும் உரிமை உண்டு.”
காணி உரிமையைக் கோரிப் போராடும் தமிழ் மக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கப் புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தியுள்ள ஜனாதிபதி, அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது அந்தக் காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்த விதத்தையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நினைவுபடுத்தினார்.
“அவர்களேதான் நாடாளுமன்றத்தில் எங்களுடன் இணைந்து இது பற்றி பல தடவைகள் கோரிக்கை விடுத்தார்கள். அவர்கள் உரிமையாளர்கள் இல்லையே? நாடாளுமன்ற விவாதங்கள் நடைபெறும் போதெல்லாம், முன்னைய அரசாங்கங்களிடம் மக்களுடைய காணிகளை விடுவிக்குமாறு எங்களுடன் சேர்ந்து அவர்களும் கோரினார்கள். ஆகவே, காணி உரிமையாளர்கள் மாத்திரமே அதனைக் கோர வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. அவ்வாறு கோருபவர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைப் பயன்படுத்துவதாகக் கூறி அச்சுறுத்துவது இன்னும் மோசமான செயலாகும்."
அரசாங்கத்தினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் நாட்டின் மகாநாயக்க தேரர்களது தலையீடு குறித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அந்த ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பினார்.
“கல்விச் சீர்திருத்தங்களை எடுத்து நோக்கினால், அதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் என்ன என்பது வேறு விடயம். அதில் குறைபாடுகள் காணப்பட்டால் அது பற்றி நாங்களும் பேசுவோம். ஆனால் கல்விச் சீர்திருத்தங்களை இப்போது நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மகாநாயக்க தேரர்களா? ஆகவே, இந்நாட்டின் ஆட்சி முன்னையவர்களைப் போலவே இனவாத, மதவாத மற்றும் பேரினவாத சிந்தனையுட் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதை எம்மால் இப்போது காணக்கூடியதாக உள்ளது.”