யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான வன்னிப்பகுதியில் இரு மாவட்டங்களின் குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நீர் பற்றாக்குறைக்குத் தீர்வு காண்பதற்கான திட்டம் எனக்கூறி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்துக்கு வடக்கின் இரு பிரதான தமிழ் அரசியல் சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
கிவுல் ஓயா அபிவிருத்தித்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு 2026 ஜனவரி 19 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் அத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இத்திட்டம் அப்பகுதியின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட ஒன்று என அவை குற்றம் சுமத்தியுள்ளன.
கிவுல் ஓயாவின் நீர்வளத்தை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் பயன்படுத்தி வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் நீர்ப் பற்றாக்குறை, வறுமை மற்றும் குறைந்த விவசாய உற்பத்தித்திறன் போன்ற பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், பிராந்திய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் கிவுல் ஓயா நீர்த்தேக்க அபிவிருத்தித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2011-09-28ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
“அக்காலத்தில் மதிப்பிடப்பட்ட செலவு 4,170 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட அத்திட்டம் மகாவலி நீர்த்தேக்க அபிவிருத்தி கட்டமைப்பின் ‘L’ வலயத்தில் நான்காண்டு காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அத்திட்டத்தை 2023-12-31 முதல் தற்காலிகமாக நிறுத்துவதற்கு பின்னர் தீர்மானிக்கப்பட்டது.”
திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகளில் நிலவும் குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நீர்ப்பற்றாக்குறைக்குத் தீர்வாக முன்மொழியப்பட்ட திட்டத்தை விரைவாக முன்னெடுப்பதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கும், உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி 2031 ஆம் ஆண்டு இறுதிக்குள் திட்டத்தை நிறைவு செய்வதற்கும், திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுச் செலவை ரூ. 23,456 மில்லியனாக உயர்த்துவதற்கும் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
கிவுல் ஓயா திட்டத்தினூடாக தற்போது உள்ள 700 ஹெக்டேயர் காணிகளுக்கு இரு போகங்களுக்கும் நீர் வழங்கப்படுவதுடன், புதிதாக 1,700 ஹெக்டேயர் காணிகளைப் பெற்று அவற்றை வயல் நிலங்களாக மாற்றி, மீண்டும் புதிய குடியேற்றங்களை மேற்கொள்வது குறித்து இத்திட்ட முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வன்னி மாவட்டத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் எனக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் கிவுல் ஓயா திட்டத்தின் நீரேந்து பகுதி வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்டது எனவும், அதற்காக 2021 ஆம் ஆண்டில் மகாவலி ‘L’ வலயத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட காணிகளுக்கு மேலதிகமாக, 6,000 ஹெக்டேயர் வனப்பகுதிக் காணிகள் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினால் மகாவலி அதிகார சபைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அப்பகுதியின் பாரம்பரிய தமிழ் மக்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படுவதால் பாரிய அளவில் இழப்புகள் ஏற்படும் என்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
“அப்பகுதிகளில் பாரம்பரியமாக வாழும் மக்கள் தமது காணிகளுக்குச் செல்வதற்குத் தடையாக இருக்கும் மகாவலி அதிகார சபையும், வனப் பாதுகாப்புத் திணைக்களமும் – அதாவது 2014ஆம் ஆண்டு கூகள் வரைபடத்தின் ஊடாக வனப்பிரதேசமாக ஒதுக்கப்பட்ட காணிகள் எனப் பெயரிடப்பட்ட மக்களின் பாரம்பரியக் காணிகளில் ஒரு ஏக்கரைக்கூட துப்புரவு செய்ய அனுமதிக்காத இத்திணைக்களம், எவருமே கைவைக்காத 13,000 ஏக்கர் வனப்பகுதியை இந்த கிவுல் ஓயா திட்டத்துக்காக வழங்கியுள்ளது. எனவே இங்கு பாரிய பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்த கிவுல் ஓயா திட்டத்தின் நீரேந்துப்பகுதி காரணமாக வவுனியா வடக்கிலுள்ள பாரம்பரிய காணிகள், குளங்கள் மற்றும் வயல்கள் பலவற்றை இழக்க வேண்டியேற்படும். ஆனால் இதன் நன்மைகளை புதிதாக குடியேற்றப்படும் குடியேற்றவாசிகள் மட்டுமே பெற்றுக்கொள்வர். அதேபோல் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இந்த மகாவலி ‘L’ வலயத்துக்கு மட்டுமே நீர்ப் பிரச்சினையும் மேலதிக நீருக்கான தேவையும் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பாரம்பரியமாக வாழும் மக்களுக்குத் தண்ணீர் இல்லை. அது குறித்து ஆராய்வதற்கு யாருக்குமே ஆர்வமில்லை.”
தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, சிறுபான்மை மக்களைப் புறக்கணித்து, சிங்கள மக்களைக் குடியேற்றும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறதா எனவும் சத்தியலிங்கம் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார்.
“ஆகவேதான் நான் இந்த அரசாங்கத்திடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். ஜனாதிபதித் தேர்தலின் போது நீங்கள் முன்வைத்த அறிக்கையில் இனப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகளை நிறுத்துவதாக வழங்கிய வாக்குறுதியை தற்போது மீறுகிறீர்களா? முந்தைய அரசாங்கங்கள் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதற்காகச் செய்த அதே காரியங்களை நீங்களும் தொடரப் போகிறீர்களா? நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்துக்கு சிறுபான்மை மக்களின் பங்களிப்பு தேவையில்லை என நினைக்கிறீர்களா? பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை முன்னெடுக்கும்போது சிறுபான்மை மக்களைப் புறக்கணித்து, சிங்கள மக்களை மாத்திரம் குடியேற்றுவதை நீங்களும் தொடரப் போகிறீர்களா?”
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் ஜனவரி 22ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டத்துக்கு தமது கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்காக எதிர்காலத்தில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அண்மையில் நாடாளுமன்றத்தில் கிவுல் ஓயா திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், யுத்தம் முடிவடைந்த கையோடு நடைபெற்றதைப் போல, 2013ஆம் ஆண்டு கிவுல் ஓயா திட்டம் குடியேற்றங்களை உருவாக்கும் வகையில் திட்டமிடப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.
“இதன் கீழ் 6,000 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அக்காலப்பகுதியிலேயே 3,000 இற்கும் மேற்பட்ட – அண்ணளவாக 4,000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தன.”
திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் மூலம் முல்லைத்தீவு கிழக்கு மற்றும் வவுனியா வடக்குப் பிரதேசங்களில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த தமிழ் மக்கள் திட்டமிட்ட வகையில் துரத்தியடிக்கப் பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் குற்றஞ்சாட்டினார்.
“1984 ஆம் ஆண்டு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் ஊடாக முல்லைத்தீவு கிழக்கு மற்றும் வவுனியா வடக்கு பிரதேசங்களின் தமிழ் மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த பகுதிகளிலிருந்து படிப்படியாக வெளியேற்றப்பட்டனர். அவர்களது வசிப்பிடங்கள் அழிக்கப்பட்டன. அவர்கள் மீண்டும் வருவதற்கு முன்பே சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. இது நீண்டகாலமாக துன்புறுத்தலாக இருந்து வரக்கூடிய ஒரு விடயமாகும். இது நாம் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகின்ற ஒரு பிரச்சினை ஆகும். யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்தனர். யுத்தம் முடிவடைந்து நாம் மீண்டும் வர முயன்றபோது, முன்னர் வாழ்ந்த இடங்களுக்கு வர வழியில்லாமல் போனது: ஒன்றில் வனப் பாதுகாப்புத் திணைக்களம் அவற்றை அடர்ந்த காடுகளாகப் பிரகடனப் படுத்தியுள்ளது; அன்றேல், யாராவது வந்து குடியேறியுள்ளார்கள். அவர்களோ அந்த மாவட்டத்தைச் சேராதவர்கள்.”
கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் வட மாகாணத்தில் பிரச்சினைகளை உருவாக்கக் காரணமாக அமையும் எனச் சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், அதனூடாக அமைக்கப்படவுள்ள குடியேற்றங்கள் முழுமையாகச் சிங்களக் குடியேற்றங்கள் எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
“இப்போது இந்தத் திட்டத்தை எடுத்து நோக்கினால் அதுவே இந்தத் திட்டத்தின் உத்தியோகபூர்வக் கொள்கையாகும். இதில் அமைக்கப்படவுள்ள குடியேற்றங்கள் முழுமையாகச் சிங்களக் குடியேற்றங்களாகும். இது சுற்றாடல் திணைக்களத்திலிருந்தும் வந்த ஒரு முறைப்பாடாகும். அவர்கள் முன்வைத்த சாத்தியக்கூறு ஆய்வில் இந்தக் குடியேற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் அதுவே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.”
ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் கீழ் இவ்வாறானதொரு திட்டம் ஆரம்பிக்கப்படுவதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்தத் திட்டத்துக்காக மேலதிகமாகப் பணத்தைச் செலவழித்து தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஆரம்பிப்பதன் நோக்கம் என்னவென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் கடுமையாகக் கேள்வி எழுப்பினார்.
“இப்போது இவ்வகையான திட்டம் ராஜபக்சவின் கீழ் நடைமுறைப்படுத்தப் படுவதை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது – நாம் அதனை ஏற்றுக் கொள்கிறோம் என்பதல்ல – நாம் அதனை எதிர்த்தோம், ஆனால் அதனைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இது உங்கள் அரசாங்கத்தின் கீழ் நடைபெறுகிறது! நீங்கள் ராஜபக்சவினரை இனவாதிகள் எனக் கூறிவிட்டு அதையே செய்கிறீர்கள். அதுமட்டுமல்ல, ராஜபக்சவினர் இத்திட்டத்தை முன்னெடுக்க ஏழு பில்லியன் ரூபாயை ஒதுக்கினார்கள், நீங்கள் அதனை இன்னும் இரண்டு பில்லியனால் அதிகரித்துள்ளீர்கள். நாம் எவ்வாறு இதற்கு இணங்குவோம் என எதிர்பார்க்கிறீர்கள்? இது அப்பட்டமான இனவாதம் அல்லவா? நீங்கள் எமக்குத் தரும் செய்தி என்ன? நாம் இந்தக் கேள்வியை எழுப்பும்போது எங்களைத் தாக்குகிறார்கள்.”
தற்போதைய அரசாங்கம் கடந்த அரசாங்கத்தைப் போல் இனவாதம் கொண்டதல்ல என்பதைச் செயலில் நிரூபித்துக் காட்டுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதமருக்கு சவால் விடுத்திருந்தார்.
“நான் பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன் - இந்த அரசாங்கம் மற்ற அரசாங்கங்களை விட வேறுபட்டது என்றால் - வடக்கு கிழக்கு மக்களை அரசாங்கம் கையாளும் விதத்தில் ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும். முந்தைய அரசாங்கங்கள் ஆண்டுக்கு ஆண்டு செய்த அதே காரியங்களை உங்களால் செய்ய முடியாது. அதே வேலையைச் செய்துவிட்டு, அவர்கள் இனவாதிகள் என்றும் நீங்கள் இனவாதிகள் இல்லை என்றும் சொல்ல முடியாது.”