தமிழரசின் பதவியை இழந்த சிறிதரன்; சாணக்கியனுக்கு தற்காலிகப் பொறுப்பு!

தமிழரசின் பதவியை இழந்த சிறிதரன்; சாணக்கியனுக்கு தற்காலிகப் பொறுப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விடுவிக்கப்பட்டார்.

அவர் அரசமைப்பு கவுன்ஸிலின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜிநாமாச் செய்கின்ற வரைக்கும் தற்காலிக ஏற்பாடாக தமிழரசுக் கட்சியின் மற்றைய முன்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரும் ஏற்கனவே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்குபற்றுபவருமான சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்றக் குழுத் தலைவருக்கான கடமைகளைப் பொறுப்பெடுப்பார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் தெரிவித்திருக்கின்றனர்.

அவர்கள் இருவரின் ஒப்பத்துடனும் இது தொடர்பான கடிதம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்குப் பிரதியிட்டு சபாநாயகருக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருப்பது பற்றிய தகவல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிறீதரன் உட்பட எட்டு எம்.பிக்களுக்கும் கட்சி செயலாளரால் இன்று காலை உத்தியோபூர்வமாக அறிவிக்கப்பட்டதாக அறியவந்தது.

இது தொடர்பாக கட்சியின் எம்.பிக்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கட்சிச் செயலாளர் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றவை வருமாறு:

"வணக்கம்!

எமது அரசியல் குழுவின் முடிவின்படி அரசமைப்புப் பேரவையிலிருந்து இராஜிநாமாச் செய்யும்படி கௌரவ சிறீதரன் அவர்களுக்கு பணிப்புரை வழங்கியிருந்த போதும் அவர் அதனைச் செய்யாதிருந்த காரணத்தினால், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் தொடர முடியாது என்று கடந்த ஜனவரி 24ஆம் திகதி நடந்த அரசியல் குழுக் கூட்டத்தில் அவருக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதற்குப் பிறகும் ஒரு வார கால அவகாசம் தலைவரின் ஆலோசனைப்படி வழங்கப்பட்டது. தொடர்ந்தும் அவர் கட்சியின் பணிப்புரையை மீறுகின்றபடியால் தலைவரும் நானும், அரசியல் குழுவின் முடிவின் பிரகாரம், கௌரவ சிறீதரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் தொடர மாட்டார் என்று நாடாளுமன்றத்துக்கு அறிவித் திருக்கிறோம்.

அவர் அரசமைப்புப் பேரவையிலிருந்து இராஜிநாமாச் செய்கின்ற வரைக்கும் தற்காலிக ஏற்பாடாக எமது கட்சியின் மற்றைய முன் வரிசை உறுப்பினரும் ஏற்கனவே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்குபற்றுபவருமான கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் நாடாளுமன்றக் குழுத் தலைவருக்கான கடமைகளைப் பொறுப்பெடுப்பார். தலைவரின் அறிவுறுத்தலின்படி இதனை அறிவிக்கின்றேன்."

என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி