இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினத்தைத் தமிழர்களின் துயர்மிகுந்த கரிநாளாகப் பிரகடனப்
படுத்தி, மாபெரும் எழுச்சிப் பேரணி கிளிநொச்சியில் ஒன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
வடக்கு - கிழக்குத் தமிழர் தாயகத்தில் தொடரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியினை நிலைநாட்டல் போன்ற விடயங்களை வலியுறுத்தியும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான பேரணி டிப்போ சந்தி வரை சென்று, ஒருங்கிணைந்த சிவில் அமைப்புகளின் கரிநாள் பிரகடனத்துடன் நிறைவடைந்தது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், வடக்கு -கிழக்குக் காணாமல் ஆக்கப்பட்டோர்
உறவுகளின் சங்கம், தாயகச் செயலணி, வடக்கு- கிழக்கு சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்குப் பூரண கதவடைப்பு மூலம் வடக்கு - கிழக்கு வர்த்தக சமூகம் பேராதரவை வழங்கியிருந்தது.
பேரணியில் ஈடுபட்டவர்கள் 'வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்', 'வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்', ''ஸ்ரீலங்காவின் சுதந்திர நாள் தமிழர்களின் கரிநாள்' போன்ற கோஷங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், முழக்கங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் எழுச்சிபூர்வமாகப் பங்கேற்றனர்.
இந்த பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறதரன், துரைராசா ரவிகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக
;கழக மாணவர் சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் தமிழ்த் தேசிய உணர்
வாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
மட்டு. நகரில் கரிநாள் ஆர்ப்பாட்டப் பேரணி
மட்டக்களபப்பில் சுதந்திர தினத்தையிட்டு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை இன்று புதன்கிழமை சென்ற கரிநாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை கோட்டமுனைப் பாலத்தில் வைத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியமையை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. பேரணியில் சென்றோர் அங்கு வீதியில் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் காணாமல் போன உறுவுகள் சங்கம் பொது அமைப்புக்கள் கரிநாள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணாமல்போன உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து 'சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழர்களின் கரிநாள் - தமிழர்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரி!' எனும் தொனிப் பொருளில் 'காணாமல் போன உறவுகளுக்கு நீதி வேண்டும்', 'வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம்', 'எமது மண் எமக்கு வேண்டும்' போன்ற அரசுக்கு எதிரான
சுலோகங்கள் ஏந்தியவாறு, கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்ட ஊர்வலமாக காந்தி பூங்காவை நோக்கிச் சென்றனர்.
அச்சமயம் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள முக்கிய சந்திகளில் பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் பலத்த பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர். கோட்டமுனை பாலத்தில் வைத்து ஆர்ப்பாட்டகாரர்களை பொலிஸார் வழிமறித்தனர்.
காந்தி பூங்காவிற்கு செல்ல முடியாது, அங்கு 78 வது சுதந்திர தின நிகழ்வு ஒன்று இடம்பெற்று வருகின்றது என்றனர் எனவே அங்கு இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றது, எனவே அங்கு செல்ல முடியாது, நீங்கள் பிரதான பஸ்தரிப்பு நிலையம் சென்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டகார்கள் 'இல்லை, எங்களுக்கு சுதந்திரம் இருக்கின்றது, இந்த வீதியால் சென்று காந்தி பூங்கா முன்னாள் உள்ள மணிக்கூட்டுக் கோபுரம் சென்று, அங்கிருந்து பிரதான பஸ் நிலையம் பகுதிக்கு செல்ல வழிவிடுங்கள்' என்று பொலிஸாரின் தடுப்பை மீறிச் செல்ல முற்பட்டமையை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்பாட்டகார்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்ட காரர்களை தடுத்து நிறுத்தினர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கு வீதியில் அமர்ந்திருந்து நண் பகல்12.00 மணிவரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.