'இனவாதம், அடிப்படைவாதம் தலைதூக்க இடமளியோம்!'

'இனவாதம், அடிப்படைவாதம் தலைதூக்க இடமளியோம்!'

'இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் மூலம் அழிவே ஏற்படுகின்றது. எனவே, இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு நாம் இடமளிக்கமாட்டோம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவோம்.'- இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 78ஆவது சுதந்திர தின விழா, சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்றது. சுதந்திர தின உரையின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. எல்லா வளங்கள் இருந்தாலும் மனித வளம் மிக முக்கியம். எனவே, அறிவு, ஆற்றல் மற்றும் தொழில்நுட்பம் என எல்லா துறைகளிலும் மனித வளத்தை கட்டியெழுப்ப வேண்டும். எமது கல்வித்துறையில் பாரிய மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாராகி வருகின்றோம். இதற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றோம்.

ஒற்றுமையிலேயே மனித வளத்தின் வெற்றி தங்கியுள்ளது. நாம் பிளவுபட்டு நின்றால் ஒற்றுமையின் பலம் தெரியவராது. இலங்கையில் இரு மொழிகள் உள்ளன. அடையாளம் மற்றும் கலாசார உரிமைகள் உள்ளன. எனவே, ஒவ்வொரு இன குழுமங்களினதும் அடையாளம், உரிமைகள் ஏற்கப்பட வேண்டும்.

இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் மூலம் அழிவே ஏற்படுகின்றது. எனவே, இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு நாம் இடமளிக்கமாட்டோம். தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்' என்றார்.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற

உறுப்பினர்கள், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி