கனடிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும் சுப்பர் ஹீரோ உருவாக்கம்!

கனடிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும் சுப்பர் ஹீரோ உருவாக்கம்!

ஸ்கட்டூனை (Saskatoon) தளமாகக் கொண்ட எழுத்தாளர் ஒருவர், கனடிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய சுப்பர் ஹீரோ கதாபாத்திரமொன்றை உருவாக்கியுள்ளார்.

ஸ்டீவ் பொய்ட் (Steve Boyd) என்பவரால் எழுதப்பட்ட 'ஸ்கைபிரேக்கர்' (Skybreaker) எனும் இந்த சித்திரக்கதை (Comic), பிரெய்ரி (Prairies) புல்வெளிப் பிரதேசத்தில் வளர்ந்த ஒரு சிறுவன், தான் ஏனையவர்களைப் போன்றவன் அல்ல என்பதை மெதுவாக உணர்ந்து கொள்வதை மையமாகக் கொண்டு நகர்கிறது.

"இது 'ஸ்மோல்வில்' (Smallville) மற்றும் 'டெட் லாசோ' (Ted Lasso) ஆகிய கதைகளின் ஒரு சங்கமம் போன்றது" என சித்திரக்கதையின் பக்கங்களைப் புரட்டியவாறு சிடிவி (CTV) செய்திச் சேவைக்கு பொய்ட் தெரிவித்தார்.

பொய்ட்டைப் பொறுத்தவரை, 'ஸ்கைபிரேக்கர்' என்பது வெறும் அதீத சக்திகளைக் கொண்ட கதாபாத்திரம் மட்டுமல்ல; அது அவர் கனடா நாட்டின் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடாகும்.

"நான் இங்கு இருப்பதை நேசிக்கிறேன். நான் கனடாவை நேசிக்கிறேன், அந்த அன்பை எல்லுாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு டென்னசி மாகாணத்திலிருந்து ஸ்கட்டூனுக்கு குடிபெயர்ந்த பொய்ட், கனடாவில் தான் வாழும் வாழ்க்கையே இந்தக் கதையின் களம் மற்றும் போக்கை வடிவமைக்க உதவியதாகக் கூறினார். "கனடாவில் வாழ்வது எப்படியிருக்கும் என்பதை உலகுக்குக் காட்டும் ஒரு ஜன்னலாக இது இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்றார் அவர்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "கனடியர்களுக்கு அமெரிக்காவைப் பற்றி நிறையத் தெரியும், ஆனால் அமெரிக்கர்களுக்கு கனடாவைப் பற்றி மிகக் குறைவாகவே தெரியும். இந்த நூல் அந்த இடைவெளியை நிரப்பும் ஒரு பாலமாக அமையும் என நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

இந்தச் சித்திரக்கதையில், 'டிராஜிகலி ஹிப்' (Tragically Hip) டி-ஷர்ட் அணிந்த சுப்பர் ஹீரோ மற்றும் மெட்டிஸ் (Métis) கலாச்சாரம் குறித்த குறிப்புகள் என கனடிய அடையாளங்கள் நுணுக்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், மூஸ் மான் (Moose) அல்லது மேப்பிள் சிரப் போன்ற வழக்கமான பொதுப்படையான அடையாளங்களை அவர் திட்டமிட்டே தவிர்த்துள்ளார்.

"பல கனடிய படைப்புகள் அமெரிக்காவைப் பகடி (Parody) செய்வது போலவே அமைகின்றன. ஆனால் 'ஸ்கைபிரேக்கர்' தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும் என நான் விரும்பினேன்" என்று கூறிய பொய்ட், இதனாலேயே ஆரம்பத்தில் சூட்டப்பட்ட 'சஸ்க்மேன்' (Saskman) என்ற பெயரை மாற்றியதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது ஸ்கைபிரேக்கரின் இரண்டாவது பதிப்பிற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள பொய்ட், "இந்த நூலை ஒரு பதிப்பகம், குறிப்பாக ஒரு கனடிய பதிப்பகம் பொறுப்பேற்று வெளியிடுவது எனது கனவாகும்" எனத் தெரிவித்தார்.

இந்தச் சித்திரக்கதை தற்போது இணையத்தள வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி