கனடாவின் தேசிய வாகன மூலோபாயத்தை (National Automotive Strategy) மத்திய அரசாங்கம் எதிர்வரும் வியாழக்கிழமை அறிவிக்கவுள்ள நிலையில், மின்சார வாகனங்களுக்கான (EV) கட்டாய விற்பனை இலக்குகளைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக புதிய எரிபொருள் வினைத்திறன் தரநிலைகள் மற்றும் கடன் புள்ளிகள் (Credits) வழங்கும் முறைமையை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரியவருகிறது.
கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான CBC வெளியிட்டுள்ள செய்தியின்படி, நுகர்வோருக்கான மின்சார வாகன கொள்வனவு ஊக்குவிப்புத் திட்டங்களை (Incentives) மீண்டும் நடைமுறைப்படுத்தவும், நாடு முழுவதும் அதிகளவிலான சார்ஜிங் நிலையங்களை (Charging stations) அமைக்க நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவும் ஒட்டாவா தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய வாகன விற்பனையில் 2030 ஆம் ஆண்டளவில் 60 வீதமும், 2035 ஆம் ஆண்டளவில் 100 வீதமும் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என்ற இலக்கை நீக்குமாறு வாகன உற்பத்தித் துறைத் தலைவர்கள், மாகாண அரசாங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினர் பிரதமர் மார்க் கார்னிக்கு (Mark Carney) தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளால் கனடிய வாகன உற்பத்தித் துறை ஏற்கனவே நெருக்கடிகளைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் கார்னி, கடந்த செப்டம்பர் மாதம் 2026 ஆம் ஆண்டிற்கான இலக்குகளை இடைநிறுத்தியதுடன், இது குறித்த 60 நாள் மீளாய்வு ஒன்றையும் அறிவித்திருந்தார்.
புதிய முறைமை எவ்வாறு அமையும்? ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டு முன்வைத்த திட்டத்தைப் போலவே, விற்பனை இலக்குகளுக்குப் பதிலாக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையளவு (Tailpipe emissions) மற்றும் எரிபொருள் வினைத்திறன் ஆகியவற்றைக் கண்காணிக்கும் விதிமுறைகளை கனடா அமுல்படுத்தவுள்ளது.
இந்த புதிய முறைமையின் கீழ்:
உற்பத்தியாளர்கள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதன் மூலம் 'கிரெடிட்' புள்ளிகளைப் பெற முடியும்.
பழைய மின்சார வாகனக் கொள்கையின் கீழ் பெறப்பட்ட புள்ளிகளைப் புதிய முறைமைக்கும் மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்படும்.
நுகர்வோர் மின்சார வாகனங்களை வாங்குவதற்கு முன்னர் வழங்கப்பட்ட 5,000 டொலர் வரையான மானியம் மீண்டும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
முன்னாள் அமைச்சரின் அதிருப்தி இந்தத் தீர்மானம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஸ்டீவன் கில்போல்ட் (Steven Guilbeault), மின்சார வாகனக் கட்டாய இலக்குகளை முற்றாகக் கைவிடுவதைத் தான் விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். "காலநிலை மாற்றம் மற்றும் சுகாதார நலன்களைக் கருத்திற்கொள்ளும்போது இந்த இலக்குகள் அவசியமானவை" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அல்பெர்ட்டாவுடனான புதிய எரிபொருள் குழாய் உடன்படிக்கை மற்றும் தூய மின்சார ஒழுங்குவிதிகள் இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கில்போல்ட் கடந்த நவம்பரில் அமைச்சரவையிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் வரிவிதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடிய வாகனத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும், வாகனத் துறையை மின்மயமாக்கலை நோக்கி நகர்த்துவதற்கும் இந்த புதிய மூலோபாயம் மிக முக்கியமானது என அமைச்சரவை அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.